கண்ணம்மா என் கண்மணி

கலங்கரை விளக்கத்தை மட்டுமே இலக்கு எனக்கொண்டு, சலனங்கள் ஏதுமற்று சீரான வேகத்தில் எப்போதும் முன்னோக்கியே சென்று கொண்டிருக்கும் ஒரு கப்பலைப்போல், இறப்பை நோக்கி காலக்கடலின் மீது மிதந்து நிதானமாய் நகரும் உலக வாழ்வில், கடந்த வந்த பாதையின் மீள் உருவாக்கத்துக்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை. ஆனால், அது இப்படித்தான் இருந்திருக்குமோ என்று உருவகித்துக்கொள்ளும் பகுத்தறிவை, இயற்கை மனிதனுக்கு மட்டுமே தந்திருப்பதன் அத்தாட்சி தான் குழந்தைப்பேறு.

என் தந்தை வழிப் பாட்டியை எனக்கு அதிகமும் பிடிக்காது. ஆனால் ஏனோ நான் கருவுற்றிருக்கையில் அவரைப்பற்றி யாரேனும் பேசி நான் கேட்டால் குத்தும் உதையும் மிகப்பலமாய் இருக்கும். அதேபோல பாரதியாரும் இளையராஜாவும் பாடினால் வயிற்றுப்பாரம் கூடத்தெரியாது. இந்த இரண்டு துருவங்களை உணர்ந்து ஏனென்று தெரியாமல் நான் ஆச்சர்யப்பட்டிருக்கின்றேன்.

வலியுணர்வை எனக்கு சற்றும் தராமல் இந்த உலகைத் தரிசித்த என் கண்மணியை வைத்தியர் என்னிடம் காட்டியபோது, அவள் கண்களில் முத்தமிட்டு விட்டு என் கண்களில் ஏன் கண்ணீர் உகுத்தேன் என்பது இன்றும் எனக்குப்புரியாத மர்மம் தான். அதிலிருந்து  தாய்ப்பாலுக்காக அவள் என்னிடம் தரப்படும் வரையிலான ஒரு சில நிமிடங்களின் பரிதவிப்பில் தான் என்னுள் தாய்மை விகசித்திருக்க வேண்டும்.

சற்று நீளமான கைக்குட்டை போலிருந்த அந்த சின்னஞ்சிறு உடலுக்குள் தான் என்னுடைய உலகமும் உயிரும் இத்தனை நாட்கள் தூங்கிக்கொண்டிருந்தன என்பதை நான் உணரவே பல மாதங்கள் ஆயின. இதற்கிடையில் அவள் குழந்தைமையின் ரசவாதம் என் மயிர்க்கால்களிலெல்லாம் தாய்மையை பூரிக்கசெய்த தருணங்கள் அனந்தம். தீர்வுகள் இல்லாத மன அழுத்தங்கள் அவ்வவப்போது மிகப்பிடிவாதமாய் கோரும் தற்காலிக இடைவெளிகளை அவள் தான் நிறைத்து என்னைக் காக்கிறாள். அதே போல, குழந்தை வளர்ப்பை பெண்ணிடம் தள்ளிவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் வழியாகத்தான் ஆண்களால் தாய்மை மீது மட்டும் புனித பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றதோ என்கின்ற அங்கலாய்ப்புகளையும் அவளே தான் தந்திருக்கின்றாள். ஆனால் அப்போதும்,செய்யாத தவறுக்கு பொறுப்பேற்கும் வெகுளியாய், தன் பிஞ்சுக்கைகளால் என்னைத்தொட்டு "அம்மா, ஐ யாம் சொதி (I am sorry) அழுவாதீங்க" என்று என் துயர் தீர்த்த ஆபத் பாந்தவியும் அவளேயாகவும் இருப்பது தான் இயற்கையின் அதிசயமும் அழகுமாக இருக்க வேண்டும்.

பாலில் புரண்டோடும் கரும் பளிங்குருண்டை விழிகளால் என் முகம் பார்த்து, பல் முளைக்காத சிறு பொக்கை மாதுளையின் இரு பிஞ்சிதழ்களால் அவள் அருளும் புன்சிரிப்பு, பேசப் பிரயத்தனப்பட்டு, அந்தப் பிஞ்சு நாக்கைப்போட்டுப், புரட்டிப் புரட்டிப் பிரளயம் நிகழ்த்தியும்,பேச முடியாமல் சோர்ந்து விடும் பெருமூச்சு, தன் உலகைப்பற்றிய தேடலின் விளைவான மகாயுக எண்ணிக்கையிலான அவள் அபிநயங்கள் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவள் வளர்ந்து வருவதைப்பார்க்கையில் அவளுக்கென்று ஒரு தாலாட்டை உருவாக்க வேண்டும் என்று தோன்றியது. நான் எழுதி நண்பர் ஒருவர் இசையமைத்து பாடித்தந்த அந்த பாடல் குறைந்தது ஒரு நாளில் முன்னூறு முறையேனும் ஒலிக்கும். இப்போதெல்லாம் அந்த "லாலா"வைத் தானே ஒலிக்கவிட்டுத்தான் தூங்குகிறாள்.

திரவ உணவை உண்ணத்தொடங்கியதும் ஊட்டச்சத்தின் அவசியத்திற்கும், அவள் மிருதுவான முரசுக்கேற்ற பதத்திற்கும், அறுசுவையையும் அவளுக்கு அறிமுகப்படுத்திவிடும் என் ஆர்வத்துக்கும் இடையே நான் போராடிக்கொண்டிருக்கையில், அவள் ஒருக்களித்து, தவழ்ந்து, நின்று, நடந்து,ஆடி, ஓடி, பாடி, உடைத்து, நகைத்து, கலைத்து, கவிழ்த்து, சிதறடித்து, தன் வாழ்வின் முதல் வார்த்தையான "அப்பா" என்பதையும் சொல்லி முடித்திருந்தாள்.

நான் அன்பு காட்டினாலும், அடித்தாலும், உணவூட்டினாலும், மிரட்டினாலும்,கொஞ்சினாலும், அதட்டினாலும் எல்லாவற்றையும் அப்படியே அச்சு அசலாய் மிகசமமான விசையில் நியூட்டனின் மூன்றாம் விதிக்கமைய  திரும்பித்தந்தாள்.

வாழ்க்கையின் விழுமியங்கள் அவளுக்கு கற்றுத்தரப்போய் நான் கற்றுக்கொண்டேன். வெற்றுக்களிமண்ணிலிருந்து எந்த அப்பழுக்குமில்லாத ஒரு அழகான பானையை மிகக்கவனமாய் செதுக்கும் பொறுப்பும் சாமர்த்தியமும் எனக்கு வேண்டும் என்பது தான் இன்று வரையும் மிகச்சவாலான ஒரு விஷயமாக இருக்கின்றது.

அவள் மழலை பேசத்தொடங்கியதும் தான் என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது. அவள் "கங்கி"என்றால் அது கஞ்சியா, கரண்டியா, கிழங்கா என்று அடையாளம் கண்டுபிடிக்கும் திறமை என்னிடம் மட்டுமே இருந்தது என்பதில் ஒரு அலாதி திருப்தி.(முதல் வார்த்தையை "அப்பா" என்று சொல்லி விட்டாளல்லவா? அந்தக் காட்டம் தான்). 

பண்ணு தமிழ் ஒதுக்கி திரை தமிழ் தள்ளி சரியான தமிழை அவளுக்கு கற்றுத்தரவேண்டும் என்பதை இன்று வரை கடைப்பிடித்து வருகின்றேன்.சரியான மொழிப்பிரயோகத்தையும் பயன்பாட்டையும் விட மிக அடிப்படையான கல்வி வேறென்ன இருக்க முடியும்?

அவள் பாலர் பள்ளிக்கு சென்று விட்டால், ஒரு மூன்று மணிநேர ஓய்வு கிடைக்கும் என்று கணித்தது எத்துணை தவறு என்பது அந்த தனிமையில் புழுங்கிய போதும், அய்யோ குழந்தை என்ன செய்து கொண்டிருக்கின்றாளோ என்று புலம்ப நேர்ந்த போது தான் புரிந்தது. ஆனால் விளையாட்டுப்பொருட்களை விட அவள் மனிதர்களை அதிகமும் நேசிக்கின்றாள். தொடர் வண்டி மற்றும் பேருந்துப்பயணங்களில் திறன் பேசி வழி எங்கோ ஒரு உலகத்தில் இருப்போரை, இந்த உலகுக்கு இழுத்து வரும் கவன ஈர்ப்பு அவளுக்கு மிகப்பிடித்த விளையாட்டு. 

இந்த உலகில் தான் உணரும் அனைத்தையும் இது இன்னது என்று கற்றுக்கொள்ளும் வயதில் இப்போது இருக்கின்றாள். அவள் தூங்காத நேரங்களெல்லாம் என் வாழ்வு இடைவேளையில்லாத கேள்விக்கணைகளால் நிறைந்திருக்கின்றது. பார்க்கும் பொருட்கள், காட்சிகள், கேட்கும் கதைகள்,பாடல்கள், என எல்லாவற்றிலும் என்னால் விடை சொல்ல முடியாத எத்தனையோ வினாக்கள் அவளுக்கு மட்டும் எப்படி எழுகின்றன என எனக்கு ஆயாசமாக இருக்கும். ஆனாலும் எங்கோ கேட்ட ஒன்றோடு எப்போதோ பார்த்த ஒன்றை இணைத்து கதை சொல்லும் அவளுடனான உரையாடல்கள் தான் எத்துணை சுவாரஸ்யமானவை? என்னையும் என்னவரையும் தவிர அவளோடு பேசவும் விளையாடவும் யாருமற்ற நகர்ப்புற வாழ்வில் என்னுடைய எழுத்தும் வாசிப்பும் அவளுக்கான என் நேரங்களைப் பிடுங்கிக்கொண்டிருக்கின்றனவோ என்று இப்போதெல்லாம் அடிக்கடித் தோன்றுகின்றது, குறைக்கவேண்டும்.

குழந்தை வளர்ப்பு தொடர்பான எந்த நூலிலும் எந்த இணையக்கட்டுரையிலும் ஏன் என் தாயிடமோ அத்தையிடமோ அல்லது அனுபவசாலிகளான என்தோழிகளிடமோ கூட தீர்த்துக்கொள்ள முடியாத எத்தனையோ குழப்பங்களாலும் சந்தேகங்களாலுமானது என் தாய்மை. ஆனால் கண்ணுக்கும் கருத்துக்கும் புரியாத ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளுடைய தேவை ஒவ்வொன்றையும் எனக்குத் தெரிவித்துக்கொண்டிருப்பது ஆச்சர்யமானது. அத்தோடு நீ இப்படித்தான் செய்தாய், இப்படித்தான் இருந்தாய்’ என்று என் அம்மா சொல்லும் போது என் வாழ்வில் பல வருடங்களை பின்னோக்கிக்கடந்து சென்று என்னை நானே மீண்டும் உருவாக்குவது போன்றே உணர்கின்றேன்!

ஆனாலும் சில நேரங்களில் நான் குழந்தை வளர்ப்பை கற்றுக்கொள்ள பரிசோதனை எலியாக அவள் இருக்கிறாளோ என்று ஒரு குற்ற உணர்ச்சி தோன்றும். ஏனெனில் அவள் ஆற்றும் எதிர்வினையைப்பொறுத்துத்தான் நான் செய்வதன் நன்மை தீமைகளை முடிவு செய்கின்றேன். அதற்கேற்றாற்போல என் செயல்களை மாற்றிக்கொள்கின்றேன். எது எப்படி இருப்பினும் என் குழந்தைக்கு ஒரு அன்னையாய் நான் எதைத் தந்தேனோ அதன் மாற்று சற்றும் குறையாமலேயே அடுத்து ஒரு குழந்தை இருந்தால் அதற்கும் தரவேண்டும் என்று தீர்மானமாகவே இருக்கின்றேன். ஆனால், எத்தனை காரணிகளை மாறிலியாக வைத்தாலும் அக்காவின் தாய்ப்பாசம் என்கின்ற ஒரு காரணி அந்த குழந்தைக்கு பிரத்தியேகமானதல்லவா?அதனாலோ என்னவோ தாய்மாருக்கெல்லாம் மூத்த குழந்தை மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது.