HOME - சூழலியல் திரைப்படம்

இறைவனின் படைப்பில் மிகவும் சூட்சுமமானதும் விசித்திரமானதுமான ஒரு விடயம் நாம் வாழும் பிரபஞ்சத்தின் சமநிலைதான் என்பதை நினைத்தும் உணர்ந்தும் சில காலமாய் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

அதற்கான முதல் விதை என் மனதில் விழுந்தது “Home” என்ற ஆவணப்படத்தை பார்த்த போது தான்.

இந்த அகிலத்தின் தோற்றுவாயிலிருந்து ஆரம்பிக்கின்ற படம் அதன் அழிவு வரை விளக்குகின்றது, முற்றிலும் விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் மற்றும் ஆதாரங்களுடன்.

எரிமலைகள், பனிப்பாறைகள் என்பவற்றிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாய் வளர்ந்தும், சிதைந்தும், திரிபடைந்தும், கூர்ப்படைந்தும் எப்படி இன்று நாம் வாழும் புவியியல் அமைப்பு உருவானது என்பதிலிருந்து தான் தொடங்குகின்றது படம். 90% வான் வழி எடுக்கப்பட்ட மிகத் தெளிவான, தத்ரூபமான ஒளி மற்றும் ஒலி அமைப்புகள்.

அந்த ஆரம்பக்கட்டக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, எனக்குள் ஒரு மிகப்பெரிய அதிர்வே ஏற்பட்டது. என் காலடிக்கு கீழிருக்கும் இடம் இப்படி எல்லாம் இருந்து தான் இன்றிருக்கும் நிலைக்கு வந்ததா? இத்தனை மாடிக்கட்டிடங்கள் எப்படி சாத்தியம்? திடீரென்று தன் மூலத்துக்குப் போய் விடுமா? பிரபஞ்சத்தின் வெளியில் எடை ஏதுமற்று அந்தரத்தில் நான் தனியளாய் மிதப்பது போன்ற மிகப்பயங்கரமான பிரமை உருவானது. குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி கணவனின் கையைப் பிடித்துக்கொண்டு கிலியில் உறைந்தவாறு பார்த்துக்கொண்டிருந்தேன்.

காட்சிகள் மாற மாற ஓரளவுக்கு இயல்பு நிலையடைந்தேன். இந்தப் படம் சொல்கின்ற புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பவை. ஆனால் உண்மையும் கூட. விவசாயம், எண்ணெய் கண்டுபிடிப்பு மற்றும் சக்தியின் தேவை, உணவு வர்த்தகம், காடழிப்பு, துருவங்களின் பனி உருகுதல், வறுமை, வளப்பற்றாக்குறை என நாம் வாழும் பூமிக்கிரகத்தின் அத்தனை இயற்கை மற்றும் காலநிலை சார்ந்த பிரச்சினைகளை பேசுகின்றது. அவசர நகரமயமாகும் கதியில் நாம் எப்படி புவியை தோண்டியம் சுரண்டியும் துஷ்பிரயோகம் செய்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக சொல்கின்றது.

அவ்வப்போது நிறுத்தி நிறுத்தி அந்தப்படம் விளக்கிய விடயங்களைப்பற்றி கணவருடன் கலந்துரையாடி விவாதித்தபடியே பார்த்தது மிகச் சுவையான, பயனுள்ள ஒரு திரை அனுபவமாகவே இருந்தது.

இந்த இயற்கையையும் அதன் கூறுகளையும் செயல்பாடுகளையும் பற்றிக் கற்கவும் அதைப் புரிந்து கொள்ளவும் ஆர்வமுள்ளோர் அவசியம் பார்க்கவேண்டிய ஒரு ஆவணப்படம் இது. பார்த்து முடித்ததும் பூமியை கட்டித்தழுவி நன்றி செல்ல வேண்டும் போல நிச்சயம் தோன்றும்.

ஆனால், பல மில்லியன் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இயற்கைச் சமநிலை சீர்குலைவு வீதம் கடந்த 60,70 ஆண்டுகளில் மிக அசாதாரணமான அளவில் அதிகரித்திருக்கின்றது என்று அந்த படத்தில் சொல்லப்பட்ட மிக முக்கியமான விடயம் என் சிந்தனையை ஏறக்குறைய ஒரு வருடமாய் ஆக்கிரமித்திருக்கின்றது.

இயற்கையால் முற்றிலும் ஆசிர்வதிக்கப்பட்ட பல நிலப்பகுதிகளில் பன்னெடுங்காலமாக நிலவிய நல்லிணக்கமும் ஒற்றுமையும் முழுமையாய் சிதைக்கப்பட்டு, இன, மத, மொழி சார்ந்த பிரிவினைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இயற்கையால் முற்றிலும் சபிக்கப்பட்ட நிலப்பகுதிகள் சில, பூச்சியத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்டு முதல் நிலைக்கு உயர்ந்திருக்கின்றன். வேறு சில பகுதிகள் வாழ்வியலுக்குத் தேவையான எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன.

இவ்விரண்டு இயற்கை நிலைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒற்றையாட்சி அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது.

எல்லா காலநிலைகளிலும், எல்லா பருவங்களிலும், எல்லா இடங்களுக்கும், எல்லாவிதமான காய்கறிகளும், பழங்களும், மளிகைப்பொருட்களும் கிடைக்கின்றன.ஆனாலும், எந்த நிலத்திலும் எந்த மனிதரிடத்திலும் உடல், மனம், சமூகம் சார்ந்த எந்த நிம்மதியும், எந்த திருப்தியும் ஏனோ சுத்தமாக இல்லை.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியுடன் போட்டி போட்டு வென்று கொண்டிருக்கின்றன, வாயிலேயே நுழையாத பெயருடைய நோய்கள்.

குழந்தைகளின் இரத்தம் படிந்த உடையும் அச்சம் உறைந்த கண்களும் எந்த துப்பாக்கியையும் அசைக்க வில்லை.

மனிதம் சாகத்துவங்கி இருக்கின்றது.

நெரிசலான பேருந்துகளில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அத்தனை ஆசனங்களும் நிரம்பி விட்டபின்பு, கையிலும் குழந்தையை சுமந்து தடுமாறியபடி நிற்கும் கர்ப்பிணிப் பெண்களை நிமிர்ந்து கவனிக்க நேரமில்லாமல் திறன்பேசிகளில் நாம் மூழ்கிப்போயிருக்கின்றோம்.

மனிதாபிமானம் அழியத்துவங்கி இருக்கின்றது.

கடும் கோடையில் வெப்பம் தாங்காமல் ஒரு யானை இறந்து போனது; தான் ஒரு யானை என்பதைக் கூட உணர முடியாமல் நாய் குரைத்ததில் பயந்து இன்னொரு யானை இறந்து போனது; பல்லாண்டுகளாய் இந்த பூமியில் வாழ்ந்திருந்த ஒரு காண்டாமிருக இனம் முடிவுக்கு வந்தது.

அடுத்து யார்????

இத்தனையும், இன்ன பலவும் யோசித்து ஒரு நொடியில் திடுக்கிட்டுப் போனேன். என்ன நடக்கின்றது நாம் வாழும் பூமியில்???

இந்த அத்தனையும் ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான ஆண்டுகளில் ஏற்பட்ட 'இமாலய' சாதனைகள் தான். இவையெல்லாம் (இயற்கையின் நிலைப்பாடு உட்பட) தானே நடந்து விடவில்லை. அப்படி நடக்க சாத்தியமும் இல்லை.
இரண்டாம் உலக யுத்தம், பிரித்தானிய காலனித்துவத்தின் முடிவு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் தோற்றம் மற்றும் அதற்கு பின்பு ஏற்பட்ட உலகமயமாக்கலும் தான் இதற்கான காரணங்களாக இருக்கலாம். இந்த திட்டமிடலுக்கும், செயல்பாடுகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு சர்வதேச அரசியல் இருக்கத்தான் செய்கின்றது.

ஆனால் அதையெல்லாம் பற்றி இந்த ஆவணப்படம் மூச்சுக் கூட விடவில்லை.

இவற்றால் யார் யாருக்கெல்லாம் நன்மை யார் யாருக்கெல்லாம் தீமை என்று ஒரு கானலான கருதுகோள் இருக்கின்றதோ, அவர்கள் எல்லோருமே கூட அல்லது அவர்தம் சந்ததியும் கூடத்தான் மெது மெதுவாக இந்த பூமியில் மனதை வாழ்வின் இருப்பை இழந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை நம்மால் அறிய முடியவில்லையா என்ன?

இந்த அரசியலைப் பற்றிப் புரியாமலோ அல்லது நம் கண்ணெதிரே இருக்கின்ற பேராபத்தைப்பற்றி கவலைப்படாமலோ கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், கோபதாபங்கள், மன அழுத்தங்கள், அறிக்கைகள், கண்டனங்கள், போராட்டங்கள், புரட்சிகள் என்று அன்போ அர்த்தமோ இல்லாத, இயந்திரமயமான ஒரு மாய வாழ்வு வாழ்கின்றோம். உண்மை என்னவெனில் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றோம்.

ஆக இதற்கென்ன தீர்வு?

உண்மையிலேயே அச்சமாக இருந்தது. இறப்பென்றால் என்ன? அண்டவெளியில் மிதப்பது என்றால் என்ன? எடையற்றுப்போவதென்றால் என்ன? இவை யதார்த்தமாக நடக்காமல் பூமி வெடித்துச் சிதறி நாமெல்லாம் வெறும் அணுத்துகள்களாய் உடைந்து விடப்போகின்றோமா? என்றெல்லாம் குழந்தைத்தனமான யோசனைகள் மனதில் ஓடின. ஒரு குழப்பமான மனநிலையிலேயே பல நாட்கள் இருந்தேன்.

சில மாதங்களுக்கு முன்பு WhatsApp இல் ஒரு காணொளி வந்தது. அதில் ஒரு இயல்பியலாளர்/சிந்தனையாளர் பின்வருமாறு சொல்லி இருந்தார்.

I don’t think the planet will die. She has seen hotter times, colder times. She lived with dinosaurs and with out dinosaurs. She lived with human beings and without human beings. She will survive. But we are dispensable.

இந்த கருத்து ஒரு தெளிவையும் ஆறுதலையும் தந்தது. தேவையற்ற பதற்றத்தை நீக்கியது. நிதர்சனம் என்பது இது தான்.

‘கூடுமானவரை தள்ளிப்போடுவது’ என்பது ஓரளவுக்கு சாத்தியம் தான். நடைமுறைக்கா என்றால், இல்லை. நம்முடைய மனத்திருப்திக்கு.

நாம் தொடர்ந்தும் குழாய் நீர் பாவனையை குறைத்து வாளி நீர் பாவனையை அதிகம் தெரிவு செய்யலாம்( ஓடும் நீர் கிடைக்காத பட்சத்தில்).

வீட்டுத் தோட்டங்கள் அமைக்கலாம்.

முற்றிலும் பொதுப்போக்குவரத்துக்கு மாறலாம்.

நெகிழிகளை மீள்பாவனை செய்யலாம். தனியாகப் பிரித்து குப்பைக்குத்தரலாம்.

மின் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை முக்கியமாக wifi இனை ஒரு நாளில் ஒரு சில மணி நேரங்களுக்கேனும் அணைத்து வைக்கலாம்.

இணையத்தில் செலவழிக்கும் நேரத்தில் பாதியை மனிதர்களோடு செலவழிக்கலாம்.

தலையை நிமிர்த்தி நடக்கலாம். எதிர்ப்படுவோரிடம் சிறு புன்னகையை பகிர்ந்து கொள்ளலாம்.

சக உயிர்கள் மீது அன்பை பரிமாறிக்கொள்ளலாம்.

கிசுகிசு, துரோகம், நிந்தனை, வீண்விரயம், ஏற்றத்தாழ்வு முதலான பஞ்சமாபாதகங்களை முற்றிலும் தவிர்க்கலாம்.

இந்த பூமி வாழும்வரை நாம் அதையும் நம்மையும் பத்திரமாகக் கையாளலாம். வாழும் வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து முடிக்கலாம்.

ஆனால், எது எப்படி ஆனாலும், பிரளயங்கள் மூலம் உருவாக்கங்களையும் ஊழியையும் நடத்தி என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தன் போக்கில், தன் கணக்கு தவறாமல் இந்த பிரபஞ்சம் தன் சுழற்சியை நிகழ்த்திக்கொண்டே இருக்கும்.

https://www.youtube.com/watch?v=jqxENMKaeCU&feature=share


March 27

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக