ஒற்றைத் துளிக்கண்ணீர்

பட்டிலும் மிருதுவாய் 
சந்தனத்தின் சாறு தடவிய
இலவம்பஞ்சுப்பொதி
மலைக்குள்ளிருந்து
கை கால் கண்களைக்
கண்டறிந்து கொஞ்சிய
இந்தக் கரங்களால்,

மருத்துவ மானுடத்தின்
சாதனைகளின் நீட்சியாய்
என் ஆயுளுக்கான
எழுபது ஆண்டுகளை
உன் வாழ்வின்
இருபத்தேழு ஆண்டுகளில்
நீ சந்தித்த வரை 
போதுமென்று,

உனக்கான பிரபஞ்ச
நியதிக்கு அப்பாலும்
வாழ்தலின் வேதனைகளை
மட்டுமே சுமந்து மீந்திருந்த
இறுதி உடற் கலங்களுக்கு
விடுதலை அளிக்கலாம் என்று 
நான் தீர்மானித்ததை
நீ உணர்ந்திருக்கக்கூடும்.

மீளாத்துயிலுக்கு முன்பான
கடைசிக் கண் சிமிட்டலில்
கன்னம் வழி வடிந்து 
வாய் நனைத்த அந்த
ஒற்றை துளி கண்ணீருடனான
அந்த நிம்மதிப்புன்னகையில்
நான் மெய் சிலிர்த்துப்போனேன்.

உன் அன்பும் குறும்பும் இல்லாத
இனி வரும் நாட்களைக்குறித்து
இன்மையின் துயரைத் தவிர
எனக்கொன்றும் குறையில்லை.

இனியொரு பிறப்பிலேனும்
பகுத்தறிவின் சர்வாதிகாரமற்ற
ஏதேனும் ஒரு துருவத்தில்
உன் இயற்கையின் விதிப்படி
வாழ்வொன்று கிட்டட்டும் உனக்கு.

சென்று வா நண்ப,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக