ட்ரங்கு பெட்டிக்கதைகள்

மனமும் ஒரு ட்ரங்குப் பெட்டியைப்போல, பொருளுக்கும் பயனுக்கும் அப்பாற்பட்ட பொக்கிஷங்களைச் சுமந்து கொண்டு தான் இருக்கின்றது. ஒழுங்கமைத்தலுக்கோ சுத்திகரிப்புக்கோ சாத்தியமோ, அவசியமோ இல்லாதவை இவை இரண்டும்.இந்த எண்ணக்கரு தான் ஜீவகரிகாலனின் “ட்ரங்கு பெட்டிக்கதைகள்” தொகுப்பிலுள்ள சிறுகதைகளைத் தோற்றுவித்திருக்ககூடும்.

இதிலிருக்கும் பல கதைகளைப் படிக்கையில் அவற்றிலிருக்கும் சில சம்பவங்களையோ அல்லது கதையையோ கூட எங்கோ எப்போதோ பார்த்தது அல்லது உணர்ந்தது போன்ற உணர்வு உங்களுக்கும் வரக்கூடும். பெரும்பாலான கதைகளில் ஏதோ ஒரு வடிவில் "கனவு" வருகின்றது. மனக்கிடங்கின் அதல பாதாளத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் எண்ணற்று சிதறிக்கிடக்கும், தெளிவும் நிறமுமற்ற, சில நேரங்களில் வடிவமும் அற்ற இது போன்ற எத்தனையோ நினைவுகளும் உணர்வுகளும் ஒருங்கும் புள்ளியாக இருப்பவை கனவுகள். ஆனால் அவை இலக்கியமாக்க ஒரு நல்ல எழுத்தாளல் தான் முடியும் என்பதற்கு இந்தத் தொகுப்பு ஒரு உதாரணம்.

தத்துவம், அறிவியல், உளவியல், கலை, பெண்ணியம், இவை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் பிரபஞ்ச விதி, கொஞ்சம் ஜனரஞ்சகம் என மனித வாழ்வின் வேர்கள் அனைத்தையும் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்துகின்றன இந்தக் கதைகள்.

ஆதி வார்த்தையைத் தேடி அலையும் கடைசி கதை சொல்லியின் "ஒமேகாவின் லீனியர் வரலாறு", காமுக அரசனை அவன் மகனை வைத்துப் பழி தீர்க்கும் "வசந்த மண்டபத்தின் சாபம்"(என்று தான் புரிந்து கொள்கின்றேன் நான். ஆனால், இந்தக்கதை என்னுள் விதைத்த புதிரை விடுவிக்க சற்று அவகாசம் வேண்டும் எனக்கு), உடலும் மனமும் இரு வேறு திசைகளில் இருக்கும் "காட்சி", ஓவியனின் கலைக்காதலின் அதீதம் "கோடுகளில் நெளியும் காதல்" என்னும் நான்கு கதைகளும், தர்க்கங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் அப்பால் இலக்கியத்துக்குள் ஆழ்ந்து தன்னை உணர எத்தனிக்கும் எந்த வாசகருக்கும் நிச்சயம் ஒரு குதூகலத்தை அளிப்பவை..

இவற்றுள் "ஒமேகாவின் லீனியர் வரலாறு","வசந்த மண்டபத்தின் சாபம்" என்பவற்றோடு "தொடுதல்", "மஞ்சள் பூ" ,"மான்சேஸ்டரிலிருந்து கரூர் வரை" ஆகிய ஐந்து கதைகள் வேறு எதை சொல்ல வந்திருந்தாலும் அவற்றை பெண்ணியக்கதைகளாகவே பார்க்கின்றேன். ஆனால் ஐந்தும் ஐந்து விதமான உணர்வைத் தந்தன.

பொதுவாக ஒரு புலன் உறுப்பை இழந்த ஒருவருக்கு மற்ற புலன் உறுப்புகள் இன்னும் கூர்மையாக இருக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் கலைஞனுக்கோ எப்போதுமே எல்லா புலன்களும் மிகக் கூர்மையாகத் தான் இருக்கும். அவன் வாழ்வது எப்போதும் ஒரு தனி உலகத்தில் தான். அவன் மட்டுமே காணும் காட்சி, கேட்கும் ஒலி, உணரும் மணம் என்று எல்லாமே உண்டு. "கோடுகளில் நெளியும் காதல்" உள்ளத்துள் உறைந்து போகும் கதை.

"தேய்பிறை" கதை முடிந்ததும் அதிர்ச்சியிலும் பயத்திலும் புத்தகம் நழுவி கீழே விழுந்து விட்டது அல்ல போட்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இரவுப் பேருந்துப் பயணத்தில் ஒரு ஆண் இதில் கொள்ளும் அசௌகர்யங்களை மையப்படுத்திய "தொடுதல்" கதையோடு எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. குழந்தைகள் உடலாலோ மனத்தாலோ விகல்பமில்லாதவை தான். ஆனால் அதையே பயன்படுத்தி சீர்குலைக்கும் கயவர்கள் மத்தியில், பெண்களின் குறிப்பாக தாய்மாரின் மனதில் 'எந்த ஆணைப்பார்த்தாலும்' ஏற்படுகின்ற அதீத பயத்தையும் அளவுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வையும் கடும் எரிச்சலோடு எதிர்கொள்கின்ற இந்தக் கதையின் நாயகனுக்கும், எங்கோ எவனோ செய்த துஷ்பிரயோகத்துக்கு 'அறச்சீற்ற' போலி கொண்டு "ஆணாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் தோழி" என்கின்ற அபத்தமான facebook commentகளுக்கும் எந்த வித்தியாசமும் எனக்குத் தென்படவில்லை. இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கையில் கூட தமிழ் நாட்டில் ஒரு ரயில் பிரயாணத்தில் ஒரு பெண் குழந்தை மயிரிழையில் தப்பி இருக்கின்றாள். இந்த மாதிரி சூழ்நிலையில், அரண்டிருக்கும் எதிர்பாலினத்தினரின் அசௌகரியங்களைப் புரிந்து கொள்வதை விடப் பேருபராகரம் வேறில்லை.

“நீரோடை” கதையைப்படித்தபோது தான், விளிம்புக்கு அப்பால் தொகுப்பிலிருந்த இந்த சிறுகதையாசிரியரின் கதை எனக்குப் பிடிக்கவில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. ஆங்கிலத்தை தமிழில் படிப்பது எனக்கு ஒவ்வாமை. அத்தோடு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதை எழுதுவதை தமிழ் எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும் என தயை கூர்ந்து கேட்டுக்கொள்கின்றேன். என் வரையில் இது தமிழ்க் கொலை. தவிரவும் விறுவிறுப்பான கதை தொய்ந்தும் போய்விடுகின்றது சட்டென்று. ஆனால் "நீரோடை" யின் முதல் நான்கு பத்திகள் மனதை கிறங்க வைக்கின்றன. எழுத்தும் இலக்கியமும் தரும் மயக்கம் இதுவாகத்தான் இருக்கும். "ஒரு பருக்கைப்பதம்" !.

மனதையும் மூளையையும் ஆக்கிரமித்து வேலை வாங்கும் தீவிரமான கதைகள் பிடிவாதமாய்க் கோரும் அத்தியாவசியமான இடைவெளியைத்தரும் வகையில் "2 சி பஸ் ரூட்" மற்றும் "தூத்துக்குடி கேசரி" இரண்டு கதைகளும் கட்டப்பட்டிருப்பது தான் மிகச்சிறப்பு. ஒரு இடம் காலப்போக்கில் எப்படி எப்படியோ உருமாறிப்போவதை இப்படியும் சொல்ல முடியா என்னும் அளவுக்கு அழகாக இருந்தது "2 சி பஸ் ரூட்" இன் ஒரு பத்தி.

நான்கைந்து வரிகளில் அழகான, ஆழமான, கவித்துவமான, சிந்திக்க வைக்கின்ற, பாதிக்கின்ற பல வார்த்தைக் கோலங்களால் நிறைந்து வழிகின்றது தொகுப்பு. பகிரத்துடித்து பரபரத்த மனதை, காப்புரிமை வழக்கைக் கருதி கட்டுப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இந்த தொகுப்பு முழுக்க ஒவ்வொரு கதையிலும் பல இடங்களில் அவை இருக்கின்றன. அதற்காகவே பல முறை இந்த நூலைப் படிக்கலாம்.

சிறுகதைகள் சிறு வயதிலிருந்தே எனக்கு அதீத ஒவ்வாமை. 300 பக்கங்களுக்கு மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்து விட்டால் அதற்குப்பின்பு நூலகத்துக்குச் செல்லவே ஆர்வமிருக்காது. கடந்த ஒரு வருடமாகத்தான் படிக்கிறேன். நான் கூட கவிஞர் ஒருவர் இந்த நூலைப் பரிந்துரைத்தபோது சற்று அசட்டையாகத்தான் விட்டுவிட்டேன். ஆனால் கடந்த முறை நூலகத்திற்கு சென்ற போது நூலக ஊழியரின் புத்தக வண்டியின் மீதிருந்த இதை எதேச்சையாக எடுத்தேன். அந்த சம்பவம் என் வாசிப்புக்கு நல்லதைத்தான் செய்திருக்கின்றது. இனிமேல் நூலகத்துக்கு செல்கையில் கண்ணை மூடிக்கொண்டு 8 அடுக்குகளிலிருந்து எட்டு நூல்களை எடுக்கவேண்டும். வாசிப்பின் அதியுயர் ஆனந்தத்தை குறிப்பெடுத்து தெரிந்தெடுக்கும் புத்தகங்களின் வழி சில நேரங்களில் கண்டடைய முடிவதில்லை. அது, அதுவாகவே நடக்கவேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக