சூர்யோதயம்


அதிகாலை நேரம்....

வெண் பனித்துளிகளின் ஜில்லென்ற
இனிய முத்தத்துடன்....
பூப்பெய்கிறது...
புதிய விடி வைகறை.....

புல்வெளியின் மீது
இதமான பனிப்போர்வை...
எழ மனமின்றி மயங்கிக் கிடக்கின்றது
புல்வெளி...

ஒரு
வாகை மரத்தின் அடியில்......
புல்வெளி தந்த சுகமான பஞ்சணையில்
படுத்திருந்த என்னை....
அந்த பனித்துளி முத்தமிட.....
வாகை மலர்கள்
என்னைச் சுற்றிக் கோலமிடுகின்றன.....

அந்த
நுண்ணிய ;
தண்ணிய ஸ்பரிசம்......
என் உடலுக்குள் ஓடி;
உயிர் நரம்புகளை மீட்டி;
குருதிக்குள் வேணு கானம் இசைக்கின்றது.....

பள்ளியறைக்குள்
முதன் முதலில் காலடி வைக்கும்
புது மணப்பெண்ணின்.........
வெட்கம்,ஆசை,பயம்
மூன்றையும் கலந்து உரைக்கும்.....
மெட்டியின் நாதமாய்;
மிகவும் ரகசியமாய்;
அந்த விடிகாலையில்....
அமைதியாய் அலைகின்றது....
அந்த அருவி

தூரத்தில்......
எங்கோ இருந்து கொண்டு.....
சோம்பேறி மனிதனுக்கு
திருப்பள்ளிஎழுச்சி பாடுகின்றது....
குயில்...

புதிதாய் பிறந்த குழந்தையின்
கண்ணிமைகளை போல......
மெதுவாய்;
மென்மையாய்;
பக்குவமாய்;
பரவசமாய்;
அழகாய்;
இதழ் விரிக்கின்றது....
வெண் மல்லிகை.....

அதோ....
அங்கே ஒரு வீட்டின் வாசலில்....
மாக்கோலம் போடுகிறது...
பூக்கோலம் அடைந்து....
மணக்கோலம் கண்ட...
ஒரு பெண்கோலம்....

கோயிலின் சுப்ரபாதமும்....
பள்ளிவாசலின் பாங்கோசையும்...
பௌத்தமடத்தின் பிரித் ஒலியும்...
தேவாலயத்தின் பிரார்த்தனையும்....
காற்றில் கலந்து வந்து.....
ஒன்றிணைகின்றன.....

நாழிகைகள்....
நகர நகர...
நாளும் நகருகின்றது...

சூரியனின் கதிர்கள் மண் தொட...
என்னை தாங்கிய பனியின் துளிகள் விண் தொட....
தரை தொட்ட கால்கள் மீது...
நிற்கின்றேன் நான்...

அண்ணாந்து...
மேலே பார்க்க....
வெண்தாளின் மத்தியில்
கரும் புள்ளி போல.....
கருவானின் கிழக்கில்
விடி வெள்ளி....

அதோ.....
சற்று தொலைவில்.....
புவியின் இயற்கை விமானங்கள் ஒவ்வொன்றும்
காலைக்காற்றின் ஸ்வரங்களை மீட்டி;
பூபாளம் பாடிக்கொண்டு;
ஜிவ்வென்று
மேலெழுகின்றன.....
விடியலும் தேடலும்....
தொடங்கி விட்டன அவற்றுக்கு....

நாழிகைகள் நகர.....
ஞாயிறும்
ஞாலம் நோக்கி நகருகிறது....

மலை முகடுகளின்
மறைவிலிருந்து....
மெது மெதுவாய் நகர்ந்து;
அல்லிகள் இதழ் மூட;
தாமரைகள் இதழ் விரிய;
நீல வான் பெண்ணிற்கு
மஞ்சள் தாலி கட்டி,
சுமங்கலி ஆக்கி;
தூது வந்த சந்திரனை
வீடனுப்பி;
உலகிற்கெல்லாம் ஒளி தர;
தம்பதி சமேதராய்
காட்சி தருகிறான்
கதிரவன்.....

உயிருக்குள்
அடங்கி கிடந்த உணர்வுகள்....
பீறிட்டெழ....
கண்களே பேனையாக;
பார்வையே மையாக;
மனமே கடதாசியாக;
கவி புனைய ஆரம்பிக்கின்றேன் நான்...





13 கருத்துகள்:

  1. நிஜமாய் அழகாய், தெளிவாய், கைதேர்ந்த எழுத்தாளர் மாதிரி இருக்கு உங்க எழுத்துக்கள். உங்க கவிதையில் எனக்கு தெரியா நிறையா தமிழ் வார்த்தைகள் இருக்கு, மிக அழகு..முதல் கவிதையே என்னை முழுமையாய் நனைய செய்து இருக்கிறது, பாராட்டும் வார்த்தைகளை தேடிபிடித்து உங்கள் படைப்புகளை தொடர செய்கிறேன் ஷனா...
    //அண்ணாந்து...
    மேலே பார்க்க....
    வெண்தாளின் மத்தியில்
    கரும் புள்ளி போல.....
    கருவானின் கிழக்கில்
    விடி வெள்ளி....
    //

    மிக அருமையான உற்றுநோக்கல் ..

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இது ஸ்வீட் நவம்பர், இம்மாதத்தில் ஆரம்பிக்கும் உன் பயணம், வழிநெடுக வாழ்த்துக்கள் வாசனையோடும், ஒவ்வொரு நிறுத்த வெற்றிடத்திலும் உன் மௌனம் அழகான பூவிதலின் மென்மைச் சிந்தனையாய் மலர்ந்திட , கரம் கொடுக்கிறேன், பள்ளிவாகனத்தில் பயணிக்கும் சிறுவன், புதிதாய் பயணிக்க அடி எடுத்துவைக்கும் சிறுமிக்கு, புன்னகை உதிர்த்து கரம் கொடுப்பது போல்.

    வாழ்த்துக்கள் ஷனா .....

    பதிலளிநீக்கு
  3. Hey sis u have really a nice tallent hands up to you and keep it up really it is nice one i hope we can see some more from you all the best for your future endeavor

    பதிலளிநீக்கு
  4. நன்றி விஜய்..
    நிறைய பேர் சொல்லும் வார்த்தை இது...
    என் கவிதைகள் பெரும்பாலும் அளவுக்கு அதிகமான ஆழமாய் இருப்பதாக பலர் கூறி இருக்கின்றார்கள்...
    ஆனால் ஒரு விடயத்தில் முழுமையாய் என்னை ஆழ்த்தி,எனக்கான திருப்தி வரும் வரை செய்யும் போது வெளி வரும் விளைவு,என் கட்டுப்பாட்டை மீறி காரியபூர்த்தி அடைவதை பார்த்து,நானே சில நேரங்களில் ஆச்சர்யபட்டு இருக்கின்றேன்...
    உங்கள் வார்த்தைகளில் அது பிரதிபலிப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  5. அன்பு நண்பி ஷனா,

    முதல் படைப்பு மிகவும் அற்புதம். காலங்கள் மாறினாலும் அன்று என் நண்பி கொண்ட கலை நயமும், கவிதை நயமும் இன்றும் அன்று போல் மாறாது இருப்பதை கண்டு பூரிப்பு அடைகிறேன். மென்மேலும் பல படைப்புகள் வேண்டும் :) வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நன்றி நண்பனே...


    இதயத்தின் அறைகளில் நிறைந்து...இறக்கை கட்டி சுதந்திரமாய் பறந்து திரிந்த என் எண்ணங்களை..என் தனித்துவத்தை மூன்று வருடங்களுக்கும் மேலாக எங்கோ தொலைத்துவிட்டு...வாய் மொழி,செயல்,நினைவு மூன்றின் சமநிலை குழம்பி....சாக்கடையாய் கிடந்த என் மனதை உன் நட்பின் பவித்ரமான கரங்களால் தூய்மையாக்கி தெளிந்த நீரோடையாய் செய்து,புது நம்பிக்கை தந்தவன் நீ...
    அந்த நம்பிக்கையால் மீம்டு வந்தேன் நான்...
    என் முதல் அவதாரம் என் அண்ணனால் நிகழ்ந்தது...
    இந்த இரண்டாம் கவிப்பிறப்பு உன்னால்....
    என் சுயத்தை எனக்கே மீட்டுத்தந்தமைக்கு...

    நன்றி நண்பனே....

    பதிலளிநீக்கு
  7. Thanks a lot Prasath anna..
    specially for taking this serious and sharing it in your Facebook profile...
    Thanks again...

    பதிலளிநீக்கு
  8. என் அத்யந்த தோழி யோகினி.....

    என் முதல் எழுத்து முதல் அருகில் இருந்து ரசித்தவள் நீ..
    புரியாவிட்டாலும் அந்த அர்த்தத்தை ஆர்வமாய் கேட்டவள் நீ...
    என் கவிதையும் கலையும் மாறாதது போலவே உன் அன்பும் என் வாழ்வின் துருவ நட்சத்திரமாய்...

    நன்றி என் இனிய சூர்யகாந்தி....

    பதிலளிநீக்கு
  9. அருமை தர்ஷனா... உங்களிடமிருந்து மேலும் கவிதைகளை எதிர்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு