கதை சொல்லி

இந்த மாத தங்கமீன் சந்திப்பு தான் இதுவரை நான் கலந்துகொண்டவற்றுள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

பள்ளி மாணவர்களின் வருகை தான் அதற்கு காரணமாக இருக்கவேண்டும். தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்துவதிலும் அவற்றை பகிர்ந்து கொள்வதிலும் அவர்கள் காட்டிய ஆர்வமும் சுறுசுறுப்பும் தான் அன்றைய நிகழ்வின் உயிர்ப்பே என்று எனக்குத் தோன்றியது.

இலக்கியத்தால் என்ன பிரயோசனம் என்று தமிழ் நாட்டில் பலர் நினைப்பதாகவும் ஆனால் இலக்கியங்கள் தான் அடிப்படை மனித விழுமியங்களை கற்றுதருவதாகவும் சாரு நிவேதிதா தன் உரை ஒன்றில் சொன்னார்.
அதை அப்படியே கண் கூடாக பார்க்க முடிந்தது, பரிசு பெற்ற மாணவர்கள் குழுவாக புகைப்படம் எடுக்க விரும்பியபோது. மாணவப்பருவத்தின் பல இன்பங்களையும் நெறியையும் தொலைத்துவிட்ட துயரம் மனதில் மேலோங்கியது.

அன்றைய நிகழ்வில் கலைவாணி இளங்கோவின் பேச்சை ஆவலோடு நான் எதிர் நோக்கி இருந்ததற்கு ஒரு முக்கியமான காரணமே அது “கதை சொல்லல்” என்ற தலைப்பை கொண்டிருந்தது தான். என் இரண்டரை வயது அக்‌ஷராவுக்கு இப்போது தான் நான் கதை சொல்ல ஆரம்பித்திருப்பதால் அந்த அங்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் திருப்தியாகவும் இருந்தது.

ஆச்சர்யத்திலும் ஆச்சரியமாய் அவர் சொன்ன ஒவ்வொன்றும் என் குழந்தையின் செயல்களோடு ஒத்துப்போனதை இப்போதும் அசை போட்டுப்பார்க்கின்றேன்.

மங்கிய ஒளியில் ஆர்வமாய் கதை கேட்பதும் மற்ற நேரங்களில் அசட்டை செய்வதும் அவள் குணம். நடித்துக்காட்டினால் இன்னும் ஆர்வமாகக் கேட்பாள்.

பொதுவாக தொலைக்காட்சியிலோ கணணியிலோ கதைகள் பார்க்கும் ஒரு குழந்தையை விட ஒருவர் கதை சொல்லிக்கேட்கும் குழந்தை கதைகளின் பலனை அதிகமாக அடையும் என்பது என் அனுபவத்தில் நான் கண்டறிந்த உண்மை. முக்கியமான காரணம் அந்த கலந்துரையாடல்.

எவ்வளவு ஆர்வமாய் அவள் திரையில் கதைகளை பார்த்தாலும், நான் சொல்லும் சொற்களை, அவள் கேட்கும் கேள்விகளுக்கு நான் தரும் பதில்களை நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு அவற்றை அவள் நினைவில் வைத்திருப்பதில்லை.

“புறா பறந்தது” இது ஒரு வசனம்.

அதை “ புறா பறந்திச்சும்மா” என்று நான் சொன்னால், அந்த உரையாடல் இப்படி தொடரும்.

“புறா பறந்திச்சா அம்மா”

“ம்”

“புறா பறந்திச்சா அம்மா”

“ம்”

“புறா பறந்திச்சா அம்மா”

“ஆமாம்மா, அதான் சொன்னேனே?, யேன் திருப்பி திருப்பி கேக்குறீங்க”

“புறா பறந்திச்சா அம்மா”

“ஆமாம், புறா பறந்திச்சு”

“ம், playgound புறாவா”

“ஆமாம்மா”

மறுபடியும் விளையாட்டுப் பூங்கா போகும் போது

“அந்த புறாவா அம்மா, கதை சொல்லு”

என்பாள்.

இது போன்ற உரையாடல்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, சின்னஞ்சிறு குழந்தைகள் பென்னம்பரிய உலகின் அதிசயங்களை புரிந்து கொள்ள ஆரம்பிக்கையில் நாம் அவர்களுக்கு செய்யும் பேருதவியும் கூட.

Thank you Kalai Ilango 🙂

Thank you தங்கமீன் பதிப்பகம் for organising variety of events each month for us.

March 13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக