கரைந்த நிழல்கள்

தமிழ் திரைப்படங்களின் தலைப்பு பகுதியில் வரும் பெயர்களைக் கவனித்த ஞாபகம் யாருக்கேனும் இருக்கின்றதா? முதலில் பிரதான நட்சத்திரங்களின் பெயர்கள், பல்வேறுவிதமான கணினி வடிவமைப்புக்கலை நயத்தோடு திரையிடப்படும். பின்பு அடுத்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களின் பெயர்கள் , ஏனைய பின்னணிக் கலைஞர்களுடைய பெயர்கள் என்ற வரிசையில் அந்த தலைப்பு பகுதி வடிவமைக்கப்பட்டிருக்கும். இவற்றுள் இசையமைப்பாளர், பாடகர், பாடல்களை எழுதியவர்கள், ஒளிப்பதிவாளார்கள் என்று ஏற்கெனவே அறிமுகமாகி இருக்கும் ஒரு சில பெயர்களைத் தவிர்த்து பல பெயர்களை நாம் கவனிப்பதும் இல்லை தெரிந்து கொள்வதும் இல்லை. அப்படிப்பட்ட இன்றியமையாத திரைக்கலைஞர்களுடைய வாழ்வை சற்றுக் கோடிட்டுக் காட்டுகின்ற நாவல் கரைந்த நிழல்கள்.

பெரும் பணத் தட்டுப்பாட்டில் இருக்கின்ற ஒரு தயாரிப்பாளர், தன் இறுதிப் பிரயத்தனமாக ஒரு திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இது ஒரு வாழ்வா சாவா என்கிற போராட்டமாகவே அமைந்திருக்கின்றது. அந்த திரைப்படத்தின் எல்லா காட்சிகளும் படமெடுக்கப்பட்டு விட்ட நிலையில், கடைசியாக ஒரு இரண்டு நிமிட காட்சிக்காக செயற்கையான அரங்குகள் அனைத்தும் அமைக்கப்பட்டு தயாராக இருக்கையில் அந்த காட்சியில் நடிக்க வர வேண்டிய ஒரு பிரதான நடிகர் ஏதோ ஒரு காரணத்தினால் வரவில்லை. அதனால் அந்த காட்சியை எடுக்க முடியாமல் போய், திரைப்படம் மொத்தமாக நின்று போய் விடுகின்றது. அந்தத் திரைப்படத்தோடு தொடர்புடைய அனைவரும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒரு சிலர் இதனை இப்படியே தட்டுத்தடுமாறி முன்னேறி விட மற்றவர்கள் திரைத்துறை என்கின்ற மாயச் சுழலில் சிக்கிச் சுழன்று, ஒளி மூலமற்ற நிழலைப் போலக் கரைந்து போய் விடுவது தான் கதை.

இந்த கலைஞர்களில் உதவி இயக்குனர்களின் முதல் வாகன ஓட்டுனர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் என்று பலருடைய பல கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. பெரும்பாலானவர்கள் அந்தந்தத் துறைசார்ந்த இரண்டாம் மூன்றாம் நிலைத்தொழிலாளர்கள்தான். அவர்களுடய தனிப்பட்ட வாழ்வும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டிருக்கும் அடித்தட்டு வாழ்க்கை தான். எல்லாத் தொழித் துறைகளையும் போலவே, திரைத்துறையிலும் இருக்கின்ற உழைப்பு, சாதுரியமான பேச்சு, சமயோசிதமான நிர்வாகத் தந்திரங்கள், அலட்சியங்கள், புறக்கணிப்புகள், ஊழல், பாலியல் பாகுபாடுகள், துஷ்பிரயோகங்கள், பொறுப்பின்மை, நயவஞ்சகம், அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள், முதலாளிகள் தொழிலாளிகளுக்கிடையில் இருக்கின்ற போலித்தனமான உறவு என்று அனைத்தையும் சித்தரித்திருக்கின்றார்.

இந்த நாவலில் கதாநாயகன் கதாநாயகி என்றெல்லாம் யாரும் இல்லை. காதல், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்று வழக்கமான, யதார்த்தத்துக்கு சற்றும் தொடர்பில்லாத புனைவு அபத்தங்கள் இல்லை. பிரதான கதாபாத்திரம் என்று ஒருவரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அத்தியாயங்கள், பல்வேறு காலகட்டங்களில் அவர்களுடைய வாழ்வின் பிரதிபலிப்பு என்று ஒரு சுவாரஸ்யமான கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கின்றது.

1950 அல்லது 60களில் இந்த நாவல் வெளி வந்திருக்கக்கூடும். சினிமா துறை சார்ந்த தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற்சங்கம் அந்தக் காலத்தில் இருந்ததா அல்லது இப்போது ஏற்படுத்தப்பட்ட விட்டதா, இருந்தாலும் அது அறத்துடன், தொழிலாளர் நலத்துக்காகச் செயல்படுகின்றதா என்றும் தெரியவில்லை. ஆனால் கரைந்த நிழல்களின் கதாபாத்திரங்களைப் போல எந்த அறிமுகமும், அடையாளாமும், அங்கீகாரமும் இல்லாத பல்லாயிரம் மனிதர்கள் தான் இந்தக் கலைத்துறையைத் தாங்கி நிற்கும் தூண்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக