மலர்மஞ்சம்

 ".....ட்டேயப்பா"  மலர் மஞ்சம் நாவல் என்றாலே இதுதான் முதலில் நினைவுக்கு வரக்கூடும். கிருஷ்ணன் நாயக்கருடைய இந்த உச்சரிப்பு முறையை அவரை அறிமுகப்படுத்தும் போது ராமையாவுடைய உறவினர்களில் ஒருவர் விவரித்துச் சொல்லுமிடம் மிகவும் சுவாரஸ்யமானது. அதைக் கேட்ட உடனேயே அந்த மனிதரை சந்திக்கின்ற ஆர்வமும் அதிகரித்து விடுகின்றது. அதன் பின்னர் கதை முழுவதும் இந்த “ட்டேயப்பா” சொல்லப்படும் போதெல்லாம், நாமும் ஒரு முறை அதை வாய் விட்டுச் சொல்லிப் பார்க்க ஆவல் எழுகின்றது.

தாய்ப்பாலின் முதல் சுவையை அறிவதற்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டு விடும் ஒரு பெண்ணின்  கதைதான் மலர் மஞ்சம். இறந்து போன மனைவியின் கடைசிச் சொல்லைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு கணவனுக்கும், தன் மனதுக்குப் பிடித்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்துக்காக ஏங்கும் ஒரு மகளுக்குமான போராட்டமாக நீள்கின்றது. 


கூத்துக் கலைஞரான ராமையா மிகச் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை நிலைக்காமல் மனைவி இறந்து போய்விடுகிறாள். இப்படியே நான்கு மனைவியரும் மறைந்து போய் விடுகின்றார்கள். ஆனால் நான்காவது மனைவி, பெண் குழந்தை பிறந்து விட்டதே என்று தன் கணவர் வருந்தி விடக்கூடாது என்பதற்காக இறந்து போவதற்கு சற்று முன்பு அந்த குழந்தையை தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு தோழியின் மகனுக்குத் தரும்படிச் சொல்லி விட்டு, இறந்து போகிறாள். 


திருமண வாழ்க்கையில் வெற்றி அடைய முடியாதிருக்கும் கழிவிரக்கம் ராமையாவை வாட்டி வதைக்கிறது. அதிலிருந்து மீள, தன்னைத் தொடர்ச்சியாக கூத்துப் பயிற்சியிலும், தோட்ட வேலையிலும் அசுரத்தனமாக ஈடுபடுத்திக் கொள்கின்றார். அந்த உழைப்பின் பலன் அவருக்கு வெற்றியையும் தருகின்றது. ஆனாலும் மனதின் எள்ளலிலிருந்து அவரால் தப்பியோட முடியவில்லை. மீதமிருக்கும் வாழ்வை முன்னகர்த்திச் செல்ல அவருக்கு ஒரு கொழுகொம்பு தேவைப்படுகின்றது. மனைவியின் இறுதிச் சொல்லையே வாழ்க்கைக் குறிக்கோளாக மாற்றிக் கொள்கின்றார்.அப்படி செய்வதன் வழியாக ஒருபோதும் நிலைக்காமல் பாதியிலேயே உடைந்து உடைந்தே போகின்ற தன் இல்லற வாழ்வை செயற்கையாகவேனும் தன்னுடன் பிணைத்து வைத்துக் கொள்ள எத்தனிக்கின்றார்.


ஒருவருக்கு ஒரு விஷயத்தை செய்து தருகிறேன் என்று தான் சார்ந்த வாக்கு ஒன்றை அளிப்பதும் அதை நிறைவேற்றுவதற்காக தன் வாழ்நாளை செலவழிப்பதும் சிறப்பான வாழ்க்கை தான். ஆனால் ரத்தமும் சதையும் உணர்வும் நிறைந்த, அறிவையும் சுதந்திரத்தையும் தனி மனித உரிமையாகக் கொண்ட ஒருவரைத் தொடர்புபடுத்தி வேறொருவர் வாக்குத் தருவது, எத்தனை குழப்பங்களையும் துன்பங்களையும் கசப்பையும் ஏற்படுத்தும் என்பதைத் தான் மலர்மஞ்சம் காட்டுகின்றது. இதில் இருக்கும் அறச்சிக்கலைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ ராமையா குழந்தை வளர்ந்து வரும் போதெல்லாம், தன் வாழ்வுக்கான ஒற்றைப் பிடிமானம் அறுந்துவிடுமோ என்ற பதற்றத்துடனேயே வாழ்ந்து வருகின்றார். அதனால் அதற்கு எதிராக வருகின்ற ஒவ்வொன்றையும் அவருடைய இயல்புக்கு எதிரான மூர்க்கத்துடன் எதிர்க்கிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் தன்னுடைய அத்தனை பிரம்மப் பிரயத்தனங்களும் மணல் வீடாய் சரிந்து விழுகையில் நொறுங்கிப் போய் விடுகின்றார். 


ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு கதை. அன்றைய நம் சமுதாய அமைப்பில், குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே தத்தமது தனிப்பட்ட அபிலாஷைகளையும் முடிவுகளையும் அவரவர் கடமையாக எண்ணி நிறைவேற்றி முடிக்கத்தான் என்பது போன்ற பிம்பத்தை இந்த நாவல் ஏற்படுத்துகின்றது. 


விரும்பிய வாழ்க்கையை நிறைவேற்றித் தருவதாகத் பாலிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போனதால் மனைவி மக்களை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பில்லாமல் துறவறம் என்ற பெயரில் ஓடிப்போனார் கிருஷ்ணன் நாயக்கர். அவர் கூட தான் மகன்  விஷயத்தில் அவனுடைய ஆசைகளையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் புரிந்துகொண்டு நடக்கவே இல்லை என்பதுதான் யதார்த்தம்.


அன்றைய காலகட்டத்தில் பெற்றோரின் விருப்பத்திற்காக தங்களுடைய வாழ்க்கையை முற்றிலுமாக ஒப்புக் கொடுத்துவிட்டு,  தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை முற்றிலும் அழித்துக் கலைத்துப் போட்ட ராஜாவோ பாலியோ தங்கராஜோ, மீதமுள்ள தங்கள் வாழ்க்கையை முழுத் திருப்தியுடனும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான், பெரியவர்கள் நினைப்பது போல காலம் அனைத்துப் புண்களையும் கசப்புகளையும் நினைவுகளையும் சுவடே இன்றி அழித்துவிடும் என்பது சாத்தியமற்ற ஒரு மூடநம்பிக்கை.


இன்றைய இணைய யுகத்தில் இருந்து கொண்டு வாசிக்கையில் இது எத்தனை அபத்தமானது என்றும் அடிப்படை தனிமனித உரிமை மீறல் என்ற எண்ணமுமே ஏற்படுகின்றது.


அளவு வேண்டுமானால் குறைந்து இருக்கலாம் ஆனால் இப்போதும் இதுபோன்ற விஷயங்கள் ஆங்காங்கே நடக்காமல் இல்லை. சாண் ஏற முழம் சறுக்குவது போல முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், எந்த ஆக்கப்பூர்வமான நல்விளைவும் இல்லாமல் வெறும் சுயநலத்தால் மட்டுமே கட்டமைக்கப்படும் இது போன்ற மூட நம்பிக்கைகள் இன்னும் பல காலத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வேணும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதனை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்கு மனிதனுக்கு இன்னும் ஒரு பரிணாம வளர்ச்சி கூட தேவைப்படலாம் என்பதை நினைக்கையில் ஆயாசமாக தான் இருக்கின்றது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக