மரப்பசு

புனிதப்படுத்தல்களுக்குள் பெண்ணை சிறைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு சமூகத்தின் மீது எள்ளலை உமிழ்ந்திருக்கின்றார் தி.ஜானகிராமன். அந்த எள்ளல் தான், அம்மணியின் அசந்தர்ப்பமான, எப்போதும் ஓயாத  சிரிப்பாக கதை முழுவதும் விரவிக் கிடக்கின்றது. 

தன் உடல் மீது, அதன் உள்ளிருக்கும் ஆன்மா விரும்புகின்ற பரிபூரணமான சுதந்திரத்தை தனக்குள் வலிந்து ஏற்றுக் கொண்டவள் அம்மணி. சிறு வயதிலிருந்தே தான் பார்த்து வந்த சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு, அந்த சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக தன்னுடைய சுற்றத்தை முற்றிலும் துறந்து விடுகிறாள்.


ஏறக்குறைய இருமடங்கு வயதுடைய ஒரு  பிரபலமான பாடகருடன் தன்னுடைய 20 ஆண்டுகால வாழ்வை பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றாள். ஆனால் அந்த இணை வாழ்வும் தன்னுடைய சுதந்திரத்தை எந்தவிதத்திலும் பாதித்து விட அவள் அனுமதிக்கவில்லை. 


லௌகீகத்துக்கு எதிரான தன்னுடைய இந்த அசாதாரணமான வாழ்வைக் குறித்த மற்றவர்களுடைய கருத்துக்களை எந்தவிதத்திலும் பொருட்படுத்தாத போதிலும் தன்னுடைய வாழ்வியலை நேர்மையாக ஏற்றுக்கொண்ட இருவருடைய  தர்க்கரீதியான கேள்விகள் அவளுடைய  கொள்கைப்பிடிப்பை சற்று  அசைத்துப்பார்க்கின்றன. 


உண்மையில் தான் விரும்பும் வாழ்வு என்பது தனக்குள் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்டால் ஒழிய, உலகின் எந்த மூலையிலும் முழுமையாக சாத்தியமில்லை என்கின்ற நிதர்சனத்தை புரிந்து கொள்கையில் ஒரு சோர்வை அடைகிறாள். 


இருபது வருடங்கள் கழித்து சட்டென்று அதுவரை தான் வாழ்ந்த வாழ்வை உதறித் தள்ளிவிட்டு ஒரு புது வாழ்வை ஆரம்பிக்க வேண்டும் என்று அவள் தீர்மானிப்பதற்கு முன்னால் அவளுக்கு ஒரு தனிமை தேவைப்படுகின்றது. அத்தனை செயற்கைப் பூச்சுகளையும் அலங்காரங்களையும் கலைந்து  தன் ஆன்மாவுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கையில் முழுமையான ஒரு விடுதலையை அவள் உணர்கின்ற அந்த சந்தர்ப்பம் அலாதியானது.


நேரம் மற்றும் வேலை கட்டுப்பாட்டுக்குள் ஒரே வழியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எந்த ஒரு மனிதனுக்கும்  இதுபோன்ற ஒரு தனிமை நிச்சயம் தேவைப்படக்கூடும். தன் வாழ்க்கையின் ஓட்டத்தை மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்கவோ அல்லது மீள் சுழற்சி செய்து ஒரு புது வழியில் செல்வதற்கோ இது அவசியமாகின்றது.


இந்த கதை வெளிவந்த காலகட்டத்தில் இது நிச்சயம் பல்வேறுவிதமான விமர்சனங்களுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து, இது போன்ற பல பாலியல் மீறல் தொடர்பான கதைகளைப் படித்த பின்னால், இது அத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இது சற்று அதீதமான கற்பனையாகவே தோன்றுகின்றது.


இந்த நாவலுக்கு பலர் எழுதிய விமர்சனங்கள் இணையம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இந்த மரப்பசு நாவலை வாசித்து முடித்த பெண்கள் யாரேனும் இருந்தால் அவர்களுடன் இது குறித்து கலந்துரையாட மிகவும் ஆவலாக இருக்கின்றேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக