சிவகாமி

ஒரு முறை பொன்னியின் செல்வன் நாடகமொன்றின் முன்னோட்ட விளம்பரத்தை தொலைக்காட்சியில் பார்த்ததிலிருந்து, நான் ரசித்துப்படித்த எந்த ஒரு சரித்திர காவியத்தையும் காட்சி வடிவில் பார்ப்பதே இல்லை என்ற ஒரு சங்கல்பமே மேற்கொண்டேன்.

சமீபத்தில் சிங்கப்பூர் தமிழ் மொழி விழா 2017 ஐ முன்னிட்டு "சிவகாமியின் சபதம்" நாட்டிய நாடகம் நடைபெற இருப்பதாக அறிந்தேன். நாட்டிய நாடகங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை அறிந்தவளாதலால் காவியத்தின் காட்சி வடிவில் நாடகத்தின் மீது வைக்கும் இருக்கும் எதிர்ப்பார்ப்பை வைக்காமல் பார்க்கலாம் என்று மனதில் ஒரு சமாதானம் தோன்றியபோதும் ஒரு தயக்கத்துடன் தான் சென்றேன்.

தமிழ் மொழி வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு "வாழ்க தமிழ்மொழி" என்று தமிழை வாழ்த்திக்கேட்கையில் உடல் புல்லரித்தது.

"சிவகாமியின் சபதம்" பற்றிய அறிமுகம் முதலில் வழங்கப்பட்டது. வசனம் நன்றாக இருந்தபோதிலும் அறிமுகம் செய்தவரின் உச்சரிப்புத்தொனி பிடிக்கவில்லை எனக்கு. மென்மையும் குழைவுமாக உச்சரிக்கவேண்டிய "காதல்", "நடனம்","பெண்மை" போன்ற வார்த்தைகளை "வீரம்", "கம்பீரம்", "வெற்றி" போன்ற வார்த்தைகளைப் போல சொன்னால் எரிச்சலாக இருக்காதா என்ன? காதுக்கு தொந்தரவான அந்த அறிமுகம் சீக்கிரம் முடிந்து விடாதா என்று ஏங்கினேன். ஒலிபெருக்கிப் பிரச்சினையா என்றும் தெரியவில்லை.

கதையின் முக்கியமான காட்சிகளை சரியான முறையில் எடுத்துத்தொகுத்து நாட்டிய நாடகம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தெளிவான தமிழில் பாடல்களும் இயற்றப்பட்டிருந்தன. போர்க்காட்சிகள் அருமை. ரத கஜ துரக பதாதிகள், விற்போர் வேற்போர் மற்போர் என்று அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தன. என்ன, ஆபரணங்கள் கழன்று விழுவதையும் ஆடைகளின் நூல் தரையில் தொங்குவதையும் தவிர்த்திருக்கலாம். ரசனைக்கு தொந்தரவாக இருந்தது.

வாதாபியிலிருந்து போர்முடித்து வெற்றியோடு திரும்பிவரும் பல்லவப்படையோடு விநாயகரை சுமந்து திரும்பி வருகின்ற பரஞ்சோதி சிறுத்தொண்டரான பின்பு கதை சொல்வதாக நாட்டிய நாடகம் தொடங்குகிறது.

முதலில் சிவகாமியின் அறிமுகம். அதைத்தொடர்ந்து தோழிகளோடு சிவகாமியின் நடனம் இடம்பெற்றது. சமீப காலமாக பாரத நிகழ்ச்சிகளில் spring மீது குதிக்கின்ற அரைமண்டியையே பார்த்திருந்தேன். அன்றைய முதல் நடனத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு நிலையான முழுமையான அரைமண்டியையும் அங்க சுத்தத்தையும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சியே. ஆனால் அபிநயம் துவங்கியதும் காத்திருந்தது ஏமாற்றம். நவரசங்களும் ஏறக்குறைய ஒரே முகபாவத்தில் அபிநயிக்கப்பட்டது. சிருங்காரத்தில் ஆரம்பித்து வெறுமனே ஏற்றி, இறக்கி, இழுத்து, விட்டு சாந்தத்திற்கு கொண்டுவந்தது போலத்தோன்றியது. அதிலும் சிவகாமியின் அபிநயத்தை விட தோழிப்பெண்களின் அபிநயம் ஏதோ பரவாயில்லை போல் இருந்தது வேதனையாகக்கூட இருந்தது.

நாடகங்கள் ஏமாற்றும், ஆனால் நாட்டிய நாடகத்தில் வேறுபட்ட வடிவமைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் மீது நம்பிக்கை வைத்து வந்தது தவறோ என்று பீதியடைய ஆரம்பித்தேன். ஆர்வ மிகுதியில் எழுந்து செல்ல மனமின்றி தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். தோழிப்பெண்களுக்கான ஒப்பனையும் நேர்த்தியாக அழகாக இருந்தது. ஆனால் சிவகாமியின் ஒப்பனை குறைவாகவும் சோகம் முழுமையாய் அப்பியும் இருக்கின்றதே என்று யோசித்துவிட்டு பின்பு மானசீகமாய் என் மண்டையில் குட்டிக்கொண்டேன். கல்கியின் சிவகாமி காவியம் முழுதும் சோக இழையுடன் தானே இருப்பாள்?

ஆனால் போகப்போக அந்த தயக்கமும் பீதியும் ஓடிப்போயின.

சிவகாமியை மாதிரியாகக்கொண்டு சிற்பம் வடிக்கிறார் ஆயனர்.உருக்கொண்டெழுந்த ஆயனரின் சிற்பங்களைப்போலவே ஆண் கதாபாத்திரங்கள்.

உடல்மொழி நடனம் என்பவற்றிலிருந்த அபிநயம் ஏனோ முகத்தில் சுத்தமாய் இல்லை. மகேந்திர பல்லவர், மாமல்லர் மற்றும் பரஞ்சோதி முழுதாய் என்னை ஏமாற்றியே விட்டனர். முகத்தில் ஒப்பனையே இல்லாத பரஞ்சோதி பாத்திரம் வெறும் கதைசொல்லியாகவே தோன்றினார்.

அஜந்தா ஓவியங்களைப்பற்றி பேசுகையில் கண்களில் மின்னல் ஒளிர்விட்டபோதும் திருநாவுக்கரசரைப்பார்க்கையில் முகத்தில் பக்திப்பரவசமே இல்லாத அந்த பாத்திரம் கல்கியின் ஆயனர் இல்லை.

அப்பர் முகத்தில் இருந்த ஆன்மீக அமைதி அதி அற்புதம். அதிலும் திருமுறைப்பாடலோடு நிகழ்ந்த அவரது அறிமுகத்தைக்கேட்கையிலும் பார்க்கையிலும் கண்களில் நீர் துளிர்த்தது.

என்னை மிகவும் கவர்ந்த பாத்திரங்கள் சிறுவயது நரசிம்ம பல்லவரும் சிவகாமியும் தான். குழந்தைகள் என்றாலே கொள்ளை அழகு தானே. அதிலும் ஜதியும் அபிநயமுமாய் தேர்ந்த கலைஞர்களைப்போல நடனம் ஆடுகையில் அதிலிருந்த குழந்தைத்தனம் அழகோ அழகு.

புலிகேசி, கொடுங்கோன்மைத்தனம் கூடவே ராஜ கம்பீரம் என்று அபிநயத்தில் வெகுவாகக்கவர்ந்தார். ஆனாலும் சாளுக்கிய சக்கரவர்த்தி இவ்வளவு ஒல்லியாய் இருந்திருப்பாரா என்று ஒரு சந்தேகம் தோன்றியது. அதைவிடவும் ஒட்டு மீசை கழன்று விழுந்ததா இல்லை,காட்சியமைப்பே அப்படித்தானா?

நாகநந்தி !! அடேயப்பா ! கபடம், கொடூரம், காதல், காமம் என்று அச்சு அசல் அதே நாக நந்தி தான். ஆம். கல்கியின் கற்பனையில் புத்த பிக்கு இப்படித்தான் இருந்திருக்கவேண்டும். இல்லை. இவரே தான் !

காவியத்தலைவி சிவகாமி !

மான் கிளி என்று கொஞ்சுவதிலாகட்டும், பசலையில் துன்புறுகையிலாகட்டும் பெண்மையின் மன அந்தரங்கத்தை இதைவிட அழகாய் வெளிப்படுத்தமுடியாது.

மாமல்லருடனான காதல், மகேந்திர வர்மர் மீதுள்ள மரியாதை, அப்பர் மீது பக்தி, புத்த பிக்குவிடம் அருவெறுப்புடன் கோபம், புலிகேசியுடன் ரௌத்திரம் என்று அவள் அபிநய சிவகாமி தான்.

தன்னையொத்த நடனப்பெண்கள் துன்புறுத்தப்படுகையில் அவள் துடிதுடித்தாள். தன் காதலன் தன் மனத்துன்பத்தை புரியாது போனபோது ஆற்றாமையோடும் கழிவிரக்கத்தோடும் அவள் சோர்ந்து போனாள். என் தேகத்தை வேண்டுமானால் நீ அடிமை கொள்ளலாம், ஆனால் என் கலை உனக்கு அடிபணியாது என்று வித்யாகர்வத்துடனும், கலை மீதான அர்ப்பணிப்பு கலந்த பக்தியுடனும் அவள் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றாள். சாட்டைக்கு பலியாகும் தன் குலப்பெண்களைக் காக்க தெருவில் நடனமாட வேண்டி வந்தபோது பெண்மையின் மகா சக்தியாய் அவள் விஸ்வரூபமெடுத்து உயர்ந்தாள்.

காதலை அடைய முடியாது போனபோது, அவள் சிரித்தாள், அழுதாள், நெளிந்தாள், வெறுத்தாள் என்னென்னவோ ஆனாள்.முன்னம் நாமம் கேட்டு, முடிவில் பிச்சியானாள். தனக்குத்தானே தாலி அணிந்து தலைவனாய் தில்லை நடராஜரை ஏற்று நடனத்துக்கே தன்னை அர்ப்பணித்து தெய்வமாய் உயர்ந்தாள். சிவகாமி, தில்லை சிதம்பர நடராஜரின் அர்த்தாங்கினி சிவகாமசுந்தரியானாள்.

நான் மெய் சிலிர்த்தேன். உயிர் நடுங்கினேன், கண்களே உணராது பொல பொல என கண்ணீர் உகுத்தேன்.

இனி மீண்டுமொரு முறை சிவகாமியின் சபதம் படிக்கையில் சிவகாமியையும் நாகநந்தியையும் உருப்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவு தத்ரூபமான நடிப்பை இன்னுமொரு முறை பார்க்கக்கிடைத்தால் நிச்சயம் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக