நாகரிகப் போராளிகள் !!!


முகமூடி சீர்திருத்தங்களின் 
மெய்முக பிம்பங்களை,

பதிந்துகொள்ளும்
காழ்ப்பும் துவேஷமுமே
பிரதிபலித்துவிடுகின்றன !

தன்சுற்றம் மலிந்திருக்கும் 

தலைமுறை கழிவிரக்கங்களால் 
அறச்சீற்றம் அவசியமெனினும்

ஏட்டுக்கல்வி புரிதல்கள்
நிர்பந்திக்கும் நிறுவல்களும்
ஏற்காத கருத்தியல்களை 
நகையாடும் நிந்தனைகளுமே

மானுடத் திருத்தப்புரட்சியோ எனும்
மாயத்தோற்றமே உருவாகிறது

இயற்கை முரண்கள் கூட 
இசைவாக்கமடைய வைக்கப்பட்டு
சுயநபர் உரிமையென்றும்
சுதந்திரமென்றும் கூவிக்கொண்டே
மறுபுறம்
இனமத மொழி சாதி பெயர்
இலக்கிய கலாசார பால் ரீதியான
தனிமனித விருப்பத்தெரிவுகளை
தரமற்ற வார்த்தை கொண்டு
நாகரிகமற்று விமர்சிப்பது
நகைமுரணன்றி வேறெதுவுமில்லை

தடியெடுத்தவன் தண்டல்காரன் இல்லை
படித்தவன் பகுத்தறிவுடையோன் இல்லை
கற்றவன் எல்லாம் பண்டிதன் இல்லை
பிரபல்ய பன்மைத்தொடரி புரவலனில்லை 

May 19, 2017



தன்னைப்போன்ற ஒரு மனிதன் காலங்காலாமாக அனுபவிக்கும் அநீதி கண்டு துன்புற்று தான் சார்ந்த சூழலியல் மீது ஆத்திரம் கொள்ளும் மனதை விட மகானுபாவம் வேறொன்றில்லை.

ஆனால் சமூக நீதி மற்றும் சீர்திருத்தமெனப்படுவது யாதெனில், சில புத்தகங்களைப்படித்து தான் கற்றவற்றையே சரி என்றும் மேதமை என்றும் பிடித்துக்கொண்டு அதை நிறுவி விட முயல்வதும் மாற்றுக்கருத்துள்ளோரை மூடரென எள்ளி நகையாடுவதும் வசை பாடுவதுமே தானோ என்று ஒரு பிம்பம் எனக்குத்தோன்றுகிறது.

இயற்கைக்கு முரணான பல விடயங்கள் தனிமனித உரிமைகளாக ஏற்கப்படவேண்டுமென ஒரு புறம் போராடிக்கொண்டே மறுபுறம் இனம் மதம் மொழி சாதி பெயர் பால் ஏன் இலக்கியம் உட்பட ஒருவருடைய சுய நபர் விருப்பத்தெரிவுகள் மீது மூக்கை மீறி நுழைந்து அநாகரிகமான வார்த்தைகளாலும் தேவையற்ற முறையிலும் விமர்சிப்பது நகை முரணாகவல்லவா இருக்கின்றது?

சக மனிதனுடைய தனிப்பட்ட உணர்வுகளை மதிக்காமல் சமூக நீதியென்பது ஏது?

தடி எடுத்தவன் தண்டல்காரனாக முடியாது
வெறும் படிப்பு மட்டுமே பகுத்தறிவை தந்து விடாது
கற்றறிந்து விட்டால் பண்டிதனாகி விட முடியாது
பல்லாயிரம் பேர் பின் தொடருவதால் மட்டுமே தலைவராகிட முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக