பரிதாபம் போர்த்திய வன்மம் !

பணிவென்னும் பசுத்தோலுக்குள் 
தன்னை மறைத்த குள்ள நரியொன்று

சங்கொன்றை எடுத்து அதற்குள் தன் 
துயரம், கழிவிரக்கம், பச்சாதாபம், வேதனை
அறச்சீற்றம், வெறுப்பு, ஆதங்கம் எல்லாவற்றையும் 
மிகத் தந்திரமாய் திணித்து வைத்து

அன்பு, காருண்யம், ஆற்றாமை மட்டும் 
வெளிப்படும்படி சாமர்த்தியமாக ஊதுகிறது.

உணர்ச்சி பிம்பமாய் ஒலிக்கும் அதன்
உயிர் தொடும் அற்புத நாதத்தில் 
உலகமே கண்களை துடைத்துக்கொள்கிறது 
ஒத்தூதி மனச்சாந்தி அடைகின்றது

மனவலியை ஆற்றிக்கொண்டதாய்
மார்தட்டிக்கொள்கின்றது

புரியவைத்துவிட்டதாய் 
பகல் கனவு காண்கின்றது

ஆனால்,

பழக்கம் தரும் அறிமுகத்தை விட 
பலவருட இணை வாழ்வு தந்த 
உண்மைத்தெளிவு சொல்கிறது

உரத்து ஒலிக்கும் நியாயத்தொனியை விட 
மறைத்து ஒளித்த மனக்கிலேசம் தான்,

நீரோ மன்னன் பரம்பரை சாத்தான்களின் 
புண்ணாகிக்கொண்டிருக்கும் காதுகளில் 
நாராசமாய் ஓங்கி ஓதப்பட்டு 
நாசத்தை தூண்டப்போகின்றது என்று.
பலியெடுக்கப்போகின்றது அதுவென்று 
கிலியாகவும் கிலேசமாகவுமிருக்கின்றது

அப்போதுபோல் தூய்மையாய் 
இப்போதும் வெளுத்ததையெல்லாம் 
பாலென்று தட்டுக்கொடுக்கும் 
பவழமல்லியின் யோகமனநிலைதான் 
ஆச்சர்யக்குறி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக