என் செல்லக்கண்ணம்மா அக்‌ஷரா

தலையுயர்த்தி பின் புறம் வளைத்து 
புருவங்கள் வளைத்து 
கண்ணிமைப்பெட்டியின் 
கால்பாகம் மட்டும் தெரிய 
மூக்கு விகசிக்க 
உதடு வில்லாய்
மாதுளை பற்கள் 
மின்னலாய் விரிய 
சிரிக்கையில் ஒரு அழகு !

தலை குனிந்து கீழ் நோக்கி 
புருவங்கள் சுருக்கி 
கண்ணிமைகளின் மேற்க்கூரையை 
கண்மணியின் மேல்நுனி தொட
கன்னங்கள் உப்பி 
மூக்கு கூராக 
உதடு சுருக்கி
 மூடி முறைக்கையில் ஒரு அழகு !

தலையை நிமிர்த்தி 
நேராய் பார்த்து 
புருவங்கள் மேலுயர்த்தி 
கண்ணிமைகளை அகல விரித்து 
கண்மணியை வெளியே தள்ளி 
கன்னங்கள் சுருக்கி 
மேலுதடு மூக்கைத்தொட 
கீழுதடு தாடைவரை நீள
குவித்து கோபப்படுகையில் ஒரு அழகு !

சொர்க்கத்திலிருக்கும்
தேவதைகளுக்கெல்லாம் 
ராஜகுமாரியானவள் 
அழகுக்கெல்லாம் அரசியாய்
உறங்கிக்கொண்டிருக்கிறாள்.
என் கருவுக்குள் நுழைந்த
அவளுடைய ஆன்மா
இற்றைக்கு இரண்டு 
வருடங்களுக்கு முன்
மகளெனும் வரமாய்
என் மடியில் விழுந்து
தவழ்ந்து நடந்து என்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கின்றது !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக