அதிரடி/உடனடி/பிந்திக்கிடைத்த/தற்போது கிடைத்த செய்திகள், தொலைக்காட்சித்தொடர்கள், FACEBOOK பஞ்சாயத்துகளிலிருந்தும் விடுபட்டு எந்த பரபரப்புமில்லாமல் தனிமை, சிந்தனை, நான் என்று கொஞ்ச நேரமாவது இருந்துவிட மாட்டோமா என ஏங்கிக்கொண்டிருந்தபோது,,,,,
இறந்து போன ஒரு பறவை,இரை தேடும் நாய், இரண்டு மனிதர்கள், அவர்களில் ஒருவரின் மனப்பயணம் என்பவற்றை இயற்கையோடு கோர்த்து இயல்பான ஒரு சம்பவத்தைப் பேசும் முதல் சிறுகதையின் பெயரையே அட்டையில் தாங்கிய "பெயர் தெரியாமல் ஒரு பறவை" என்றொரு புத்தகம் ஆபத்பாந்தவனாய் என் மடியில் வந்து விழுந்தது.
வண்ணதாசன் என்றொரு எழுத்தாளர் இருப்பதாக நான் முன்பு அறிந்திருக்கவில்லை.சமீபத்தில் அவரைப்பற்றிய ஒரு எதிர்மறையான பதிவொன்று அவர் படைப்பைப் படிக்கத் தூண்டியது.
ஓரிரு மனிதர்கள், ஒரு சில சம்பவங்கள், பல படிப்பினைகளைத்தாங்கிய 12 சிறுகதைகளின் தொகுப்பு இது.
பணமும் நாகரிகமும் மனிதனை சுயநலவாதியாக மாற்றிவிட்ட சூழலில் மனசாட்சிகள் குற்றுயிராய் கிடக்க அவற்றுக்கு மருந்திட்டு உயிர் கொடுக்க சிலம்பாயிகளும், "கடைசியாக தெரிந்தவர்" இல் வரும் தன்மைப்பாத்திரமும் இன்னமும் வாழ்வதால் தானோ என்னவோ மேகங்களில் கொஞ்சம் ஈரப்பசை மீதமாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
வயோதிபத்தின் ஆழ்மனக்குமுறலையும் நடைமுறைச்சிக்கல்களையும் சொல்லும் ஒரு நெடுங்கதை,வயோதிபத்தின் சாவுக்கும் கடைசி ஆசைக்குமான போராட்டத்தை சொல்லும் ஒரு குறுங்கதை இரண்டுமே இதே போன்ற நிலையில் வாழ்ந்து முடிந்த/வாழ்கின்ற என் தாத்தா பாட்டிக்களை நினைவூட்டின. நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்துக்கிடையே அவர்களை கவனிக்க முடியாமல் வேறு வழியின்றி கடந்து தானே போகிறோம்? குற்ற உணர்ச்சியாக இருந்தது.
பால்யம் ஆழ்மனதில் ஏக்கங்களையும் ஆசைகளையும் தென்றலாய் இன்பத்தோடு வீசுகின்றதென்றும் கூறுகின்ற இரண்டில் முதல்கதையின் முடிவில் அந்த குழந்தையின் கழுத்து பாரம் இறங்கியபோது ஏதோ நானே கடல்கள், மலைகள் தாண்டி சுதந்திரமாய் என் மனம் போன போக்கில் சிறகடித்துப் பறப்பது போல இருந்தது. செண்பகத்தின் வாழ்வு நிலையைப்போல என்னுடையது இல்லை என்றாலும் சில நேரத்தில் மன அழுத்தங்களை குழந்தையின் மீது இறக்கிவிடும் சந்தர்ப்பங்கள் எனக்கும் வாய்த்ததுண்டு.
மிக மிக சுதந்திரமான பெண்களே தம் வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலேனும் ஒடுக்கப்படும் சூழல் இங்கே இயல்பாகவே இருக்கின்றது. இந்த நிலையில் அடிமைகளாகவே வளர்க்கப்படும் பெண்கள் அடிமைகளாகவே சாகவும் நேரும் அவலத்தை எங்கே போய் சொல்வது?ஒரு புகைப்படக்கலைஞன், ஒரு வாசகன், ரசனையற்ற காமுகனை மணந்த ரசனையான பெண் மூவரையும் ஒரு முடிவற்ற வட்டத்தில் நடக்க விடுகிறார் ஒரு கதையில்.
தான் சார்ந்த குறைகள் பல இருப்பினும் அதை விடுத்து அவளிடம் இல்லவே இல்லாத ஒரு குறையை சொல்லிச்சொல்லியே பெண்ணை ஒரு சடக்கருவியாக மட்டுமே கையாள நினைக்கும் ஆண்களின் முடிவிலி எண்ணிக்கையின் யதார்த்தம் பேசுகிறார் ஒரு கதையில்.
வாழ்வில் தமக்கான தனி மனித உரிமைகள் ஏதுமின்றி ஏதோ ஒரு அர்த்தமற்ற முடிவை நோக்கி நடைப்பிணமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்களின் "எனக்கு வேண்டாம்" என்ற கூக்குரல் காதில் ஓங்கி அடித்து கண் வழியே கண்ணீராய் கசிகிறது.
வார்த்தைகளால் எப்போதும் விவரித்து விட முடியாத இனம் தெரியாத ஒரு மனரசாயன இழை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான தூய நட்பில் இருக்கும். குட விளக்குமின்றி குன்று விளக்குமின்றி மன இருள் போக்கும் மறை தீபமாய் தோழமையில் அது சூடர் விடுவதை உணர முடிந்தது ஒரு கதையில்.
தொழிலாளியிலிருந்து முதலாளியாகும் முயற்சியின் முதற்படியிலிருக்கும் நிதர்சனத்தை சொல்கிறது மற்றுமொரு கதை.
சம்பவங்களை விவரிக்கும் கதைகளிலிருந்து வேறுபட்டு கவித்துவமான நடையில் கதைகளையும் எழுத முடியும் என்று இன்று தான் கற்றுக்கொண்டேன். மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் பல வசனங்களும் சொற்றொடர்களும் ஆச்சர்யமூட்டின, சுவாரஸ்யமாகவுமிருந்தன.
என்னை முழுதாய் ஆச்சரியப்படுத்திய விடயங்கள் நான்கு.
1. ஒரு புகைப்படத்தை வர்ணிக்கிறார் பாருங்கள். அப்படியே கண் முன்னால் தெரிகிறது. அந்த வர்ணனையை அப்படியே என் ஓவிய நண்பி ஒருத்தியிடம் காண்பித்து வரைந்து தருமாறு கேட்கும் ஆர்வம் வந்தது.
2. "பேருந்து நடத்துனர்" என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் அப்படி ஒருவரைப்பற்றி எழுதுகிறார்.
3. ஒரு கதையை வசன நடையின்றி வெறும் உரையாடலிலேயே சொல்லி முடிக்கிறார்.
4. நிறைய புதிய வார்த்தைகளை அறிந்தேன்.(தார்சா, பட்டாசல்)
ஒவ்வொரு கதையின் ஆன்மாவையும் தொட்டுவிட வேண்டுமெனில் பத்திகளை தனியேயோ முழுக்கதையையோ மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் போல இருந்தது.
ஒரு சிறுகதை எனக்குப்பிடிக்கவே இல்லை.அதைப்பற்றி எழுதவும் தோன்றவில்லை.
ஓரளவுக்கு புழக்கத்தில் இருக்கும் தமிழ் வார்த்தைகளைக்கூட ஆங்கில வார்த்தைகளை தமிழ் எழுத்துக்களில் எழுதித்தான் புரியவைக்கவேண்டும் என்று பெரிய எழுத்தாளர்களே கருதுவது கவலையாக இருந்தது. அதுவும் இவையெல்லாம் சுமார் 30 வருடங்களுக்கும் முன்னாள் எழுதப்பட்டவை. வெறும் எழுத்துக்கள் மொழிக்கும் அதன் அழகுக்கும் என்ன வாழ்வைத்தந்துவிட முடியும்?
(போஸ்ட் மேன், பெஞ்சு, இங்கிலிஷ் பேப்பர், ரூம்பு)
இந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த போது Facebook இல் ஒருவர் வண்ண தாசன் பற்றி இப்படி எழுதி இருக்கின்றார்.
"அதே சந்தைக்கு நானும் பல முறை சென்றிருக்கிறேன். ஆனால் அவராக நான் அதை பார்த்ததில்லை"
ஆனால் எனக்கோ நான் இதுவரை கண்டே இராத காட்சிகளைக்கூட தன் கண்ணாடி வழி என் மன விழித்திரையில் விழச்செய்திருக்கின்றார்.
படித்த நாவல்களையே மீண்டும் மீண்டும் படித்து வாழ்க்கைக்கான வாசக ஆயுளின் பாதியை வீணடித்து விட்டதாகத் தோன்றுகின்றது.இனி நிறைய சிறுகதைகளையும் வாசிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக