குழந்தை இலக்கியம்

"குரங்கிலிருந்து மனிதன் வந்த போது ஏன் மனிதனிலிருந்து அதி மனிதன் வரவில்லை என்பது ஒரு ஆச்சர்யம் தரும் கேள்வி. உண்மை என்னவென்றால் மனிதனின் கூர்ப்பு, தலைமுறைகளில் ஏற்படுவது.பெற்றோரை விட குழந்தைகளின் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கின்றது. அதனால் குழந்தைகளோடு குழந்தைகளாய் பழக வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஐயங்களை ஓரளவுக்கேனும் யூகித்து அதற்கேற்றாற்போலவே சிறுவர் இலக்கியங்களை படைக்க முடியும்.பொறுப்புணர்ச்சியுடன் செய்ய வேண்டியதால் கொஞ்சம் கடினமானது தான். ஆனால் அது சுவாரஸ்யமான பணி"

Thank you Ramesh Vaidya for such an interesting session last sunday at Thangameen Kalai Ilakkiya Vattam meet.

அவர் பேசிக்கொண்டிருந்த போது என் மனதில் அக்ஷரா தான் ஓடிக்கொண்டிருந்தாள். இன்னும் சில வருடங்களில் இது போன்ற எத்தனை சுவாரஸ்யமான கேள்விகளை கேட்கப்போகிறாளோ என்று ஆவலாக இருந்தது.

ஒருமுறை எங்கள் தொடர் மாடியின் கீழே உள்ள சிறுவர் விளையாட்டுப்பூங்காவுக்கு அவளை அழைத்துச் சென்றிருந்தேன். அங்கு ஊஞ்சல்கள் இரண்டு உண்டு. பெரிய குழந்தைகள் ஆடுவதைப் பார்த்து தானும் ஏற ஆசைப்பட்டவளை ஏற்றி பிடித்துக்கொண்டு மெதுவாக ஆட்டினேன். அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் எவ்வளவு நேரம் தான் ஆட்டுவது, எனக்கு ஒரு கட்டத்துக்கு மேல் சலித்துப்போனது. அவளுக்கு இறங்க மனமில்லை. என்ன செய்வது? எனக்கு பொழுது போவதற்காக அவளுக்கு நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்.

'ஒரு ஊருல ஒரு பாட்டி வட சுட்டுட்டு இருந்தாங்க. அப்போ ஒரு காக்கா பறந்து வந்து "பாட்டி பாட்டி எனக்கு ரொம்ப பசிக்குது எனக்கு ஒரு வட தரீங்களா" னு கேட்டுச்சாம். பாட்டியும் பாசமா ஒரு வடைய குடுத்தாங்களாம்.அத எடுத்துட்டுப்போய் ஒரு மரத்துல உக்காந்து சாப்புட எடுத்துச்சாம். அப்போ அந்த வழியா வந்த ஒரு நரி அத பாத்துட்டு, " காக்கா காக்கா உன் குரல் ரொம்ப அழகா இருக்கும், ஒரு பாட்டு பாடேன்" னு சொல்லிச்சாம். காக்கா வடைய கால்ல வச்சுக்கிட்டு "கா கா" னு கத்துச்சாம். நரிக்கு கஷ்டமாயிடுச்சாம். அட பாத்தா உடனே காக்கா, "என்ன நரியாரே பசிக்குதா? வட வேணுமா?கேக்கவேண்டியது தானே,அதுக்காக பொய் சொல்றதும் திருட நெனைக்குறதும் தப்பில்ல?" னு கேட்டதும் நரி அசடு வழிஞ்சுட்டே "ஆமாம் எனக்கும் பசிக்குது கொஞ்சம் வட தரியா?" னு கேக்கவும் காக்கா பாதி வடைய நரிக்கு குடுத்துட்டு மீதியை அதுவும் சாப்புட்டுட்டு பறந்து போச்சாம். நரியும் சந்தோஷமா காட்டுக்குள்ள ஓடிப் போச்சாம்'

என்று கதையை முடித்து விட்டுப் பார்த்தால் அப்போதும் அவள் ஊஞ்சலை விட்டு இறங்கவில்லை. வேறு வழியின்றி தொடர்ந்தேன்.

'பறந்து போன காக்காக்கு தாகம் வந்துச்சாம். ஒரு எடத்துல ஒரு கொடத்துல அடியில தண்ணி இருந்துதாம். காக்காவால குடிக்க முடியலயாம். அதுக்கு ரொம்ப கவலையாயிடுச்சாம். என்ன செய்றதுனு யோசனை பண்ணிச்சாம். பாத்தா பக்கத்துல குட்டி குட்டியா நெறைய கல்லு இருந்துதாம். அத ஒண்ணு ஒண்ணா சொண்டுல பொறுக்கி கொடத்துக்குள்ள போட்டதும் தண்ணி மேல வந்துச்சாம். தாகம் தீர வரைக்கும் தண்ணி குடிச்சுட்டு பறந்துடுச்சாம்.'

தண்ணி என்கின்ற வார்த்தை மூன்று முறைக்கு மேலே வந்ததால் நினைவு வந்ததோ என்னவோ "தண்ணி,தண்ணி" என்றாள். குடித்த பின்பும் இறங்கவில்லை. எனக்கு ஐயோ என்றானது. அதற்கு மேல் கதை சொல்ல எனக்கு என்ன இலக்கியம் தெரியும்? சரி என்று சிறுவர் பாடல் பாடலாம் என்று ஆரம்பித்தேன்.

'கைவீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவா தின்னலாம் கைவீசு
கைவீசம்மா கை வீசு
கோயிலுக்கு போகலாம் கைவீசு
சாமி கும்பிடலாம் கைவீசு
பிரசாதம் வாங்கலாம் கைவீசு
கைவீசம்மா கை வீசு
கடற்கரை போகலாம் கைவீசு
காற்றுவாங்கலாம் கைவீசு
சுண்டல் தின்னலாம் கைவீசு
கைவீசம்மா கை வீசு
பள்ளிக்குப் போகலாம் கைவீசு
பாடம் படிக்கலாம் கைவீசு
பாட்டு பாடலாம் கைவீசு
கைவீசம்மா கை வீசு
சந்தைக்குப் போகலாம் கைவீசு
காய்கறி வாங்கலாம் கைவீசு
வேடிக்கை பார்க்கலாம் கைவீசு
கைவீசம்மா கை வீசு
நூலகம் போகலாம் கைவீசு
புத்தகம் எடுக்கலாம் கைவீசு
பொறுமையாய்ப் படிக்கலாம் கைவீசு'

சிரிப்புதான் வந்தது. இந்த இரண்டுமே யாரோ எழுதிய இலக்கியங்கள். ஏதோ ஒரு ஆர்வத்திலும் பொழுது போக்கவும் கொஞ்சம் மாற்றியும் அங்கங்கே இட்டு நிரப்பியும் சொல்லிக்கொண்டிருந்தேன். அவள் ஊஞ்சலை விட்டு இறங்கும்வரை மாற்றி மாற்றி இதைத் தொடர்ந்தேன்.

கடினமாகவே இருந்த போதும் சிறுவர் இலக்கியங்கள் சுவாரஸ்யமானவை தான் அவர்களைப் போலவே !


August 18, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக