அவரவர் நியாயம்

மதம், இனம், மொழி, சாதி, அரசியல், இலக்கியம், கலை, என்பவை குறித்து எனக்கென்று ஒரு சார்பு நிலை உண்டு. இந்த சார்பு நிலை என் பிறப்பு, நான் வளர்ந்த சூழல், நான் பெற்ற கல்வி, சந்தித்த மனிதர்கள் என அனைத்தும் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக இருக்கலாம்.

ஒருவேளை இவற்றில் எனக்கேதும் சந்தேகம் தோன்றினால் அதை நானே தேடிக் கற்றுக் கொள்வேன். (அது புத்தகங்களாகவோ, மனிதர்களாகவோ இருக்கலாம்.) ஒரு வேளை தெளிவு கிடைக்கவில்லை என்றால் அந்த சந்தேகத்தை ஆராய்வது அனாவசியம் என்பது என் நிலைப்பாடு.

என்வரையில் நடுநிலைமை என்பது என் நம்பிக்கை சார்ந்து என் வாழ்வை நான் வாழ்கிறேன். அதில் ஏற்படும் நன்மை தீமைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். அதுவே உங்களுக்கும்.

இடையில் ஒருவரை ஒருவர் உடல், மன ரீதியாக தாக்கிக்கொண்டிருப்பது மிருகத்தனம்.

ஆனால் நடப்பு வேறாக இருக்கின்றது.

ஒரு சார்பு நிலை என்பது சில உசாத்துணை நூல்களை துணைக்கு அழைத்துக்கொண்டு தான் சார்ந்த ஒன்றை அது மட்டுமே சரி என்று நம்புவதல்ல. எதிர்க்கருத்துக்களை எள்ளி நகையாடுவதும், அந்த கருத்து சார்ந்தவர்களை மூளைச் சலவை செய்ய முனைவதும் அல்ல.

(முன்பெல்லாம் வீடு வீடாகவந்து கடவுள் இனிமேல் தான் வரப்போகின்றார், எங்களோடு இணைந்தால் மட்டுமே உங்களுக்கு ஆசிர்வாதம் கிடைக்கும் என்று எவ்வளவு விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வந்து எரிச்சலூட்டுவார்கள். அதற்கும் இப்போதிருக்கும் இந்த Facebook, WhatsApp மற்றும் Inbox பரப்புரை அலப்பறைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.)

அதே போல நடுநிலைமை என்பது இரண்டு புறமும் "ஆமாம்.நீங்கள் சொல்வது தான் சரி" மண்டை ஆட்டுவதல்ல. இது போன்ற சார்பு நிலையோ நடுநிலைமையோ இரண்டுமே தவறுதான்.

யோசித்துப்பாருங்களேன்,

ஒருவர் சாட்டை,சாணி,செருப்பு என்பவற்றை கீழ்த்தரமாக எண்ணாதீர்கள் என்று எழுதினால் அங்கே போய் "சாட்டையடி பதிவு தோழி", செருப்படி பதிவு தோழர்", "சாணியடி பதிவுங்க" என்று கருத்திடும் பிரபஞ்சம் காணா அறிவாழம் கொண்டு முகஸ்துதிப்பாட சில நூறு பின்தொடரிகள்,

செலவழிக்க சிறிது நேரம்,
செலவில்லாமல் செயலிகள்,
மலிவு விலையில் மக்கள் தொடர்பு,

இவ்வளவும் இருந்தால் 'பகுத்து' 'அறிவு' 'அற்ற' மடத்தனங்களுக்கு கட்டுப்பாடே இல்லாது போய் விடுகிறது.

இந்த கூத்தையெல்லாம் பார்க்கையில் சிரிப்பாகவும் பரிதாபமாகவும் இருக்கின்றது.

எத்துணை விஷத்துக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

தன்னுடைய ஒரு கதையில் இந்திரா பார்த்தசாரதி இப்படி சொல்கிறார்.

"ஒரு மனுஷன் எப்படி இருந்தாலும் சரி,அவன் மனுஷன் ! அவன் அப்படி இருக்கிறதே அவனைப் பொறுத்தவரையிலும், அவன் வாழ்க்கைக்கு அது ஒரு நியாயமாகும். ஒவ்வொருத்தனும் தான்தான் தர்மத்துக்கு நாட்டாண்மைக்காரனா நினைச்சுக்கிறதுதான் உலகத்திலே முக்கால் வாசிச் சண்டைக்குக் காரணம்"




August 19, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக