தங்கச்சி

"நீங்கள் ஒருவர் இல்லையென்றாலும் இந்த பிரபஞ்சம் முழுமையடையாது தர்ஷனா, எல்லா உயிர்க்கும் இது பொருந்தும்" - முகம் மட்டும் தெரிந்த முகநூல் நண்பன் ஒருவன் ஒரு உரையாடலின் போது யதேச்சையாகச் சொன்ன ஆழமான உண்மை இது.

பிரபஞ்சம் என்பது ஒரு கணக்கு. அது எப்போதும் சம நிலையில் இருக்கின்ற ஒரு வெளி. சமாந்திரமாக பயணப்படுகின்ற பல கூறுகளின் நிரந்தர வசிப்பிடம்.

என்னுடைய அத்தனை உடற்கூறுகளும் சமாந்திரமாய் பயணிக்கின்ற, அத்தனை மனக்கூறுகளும் சமநிலைப்படுகின்ற ஒரு ஒற்றைப்புள்ளியாய், என் பிரபஞ்சமாய் ஒருத்தி இருக்கின்றாள்.

தொடர்பாடல் கலை எனக்கு அறிமுகமான நாளிலிருந்து அவள் என்னுடன் இருக்கின்றாள். கருவில் தான் உருவான நாளிலிருந்து அவள் என்னோடு தொடர்பாடி இருக்கக்கூடும். பரம்பரை அலகுகளால் பிணைக்கப்பட்ட ஒரு ஆன்ம பந்தம் அவளோடு எனக்கு இருந்திருக்கவேண்டும்.

என்னுடைய முதல் தோழி அவள். என் வாழ்வில் நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் அவளுக்கு பங்கிருக்கின்றது. அவளறியாமல் என் வாழ்வில் எதுவும் நிகழ்ந்ததில்லை.

வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றாகவே இருந்திருக்கின்றோம். குடுமிப்பிடி சண்டைகள் பிடித்திருக்கின்றோம். "ரோஸ் ரோஸ் ரோஸ் ரோசாப்பூவே" பாடலின் மெட்டில் நாய் பேய் என்றும் சனி முதல் ஞாயிறு வரை நாட்களை சொல்லியும் மாற்றி மாற்றி திட்டிக்கொண்டு பின்பு சிரித்திருக்கின்றோம்.

என்னுடைய சின்னஞ்சிறு வயதிலிருந்து அவள் கை பிடித்துத் தான் பாடசாலைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றேன். பேருந்துகளின் நெரிசல்களிலிருந்து என்னையும் காத்து அவளையும் பத்திரமாய் பாதுகாக்க போராடி இருக்கின்றேன்.

சந்தோஷங்களின் போது வானத்தையும் பூமியையும் இணைத்து குதித்திருக்கின்றோம் ஒன்றாய். துன்பங்களின் போது தரை புரண்டு கதறி அழுதிருக்கின்றோம் ஒன்றாய். என் சரியை பாராட்டி தவறை இடித்துரைப்பாள்.அதனால் அவள் என் சமாந்தரப் பயணி.

என் பதின்ம வயதின் இறுதியில் பொன் விலங்கு நாவல் தனக்குப் பிடிக்கவில்லை என்று அவள் சொன்னபோது தான் நாங்கள் இருவரும் உடலால் மட்டுமல்ல, மனதாலும் ரசனையாலும் வேறு வேறு என்பதன் யதார்த்தத்தை உணர்ந்தேன்.

எனக்கும் அவளுக்கும் ஒத்துப்போவது மிக அபூர்வம்.இரண்டு உடைகள் இருந்தால் அதில் எனக்குப் பிடித்தது அவளுக்குப் பிடித்ததில்லை.

படிக்கையில் ஆரவாரமாக இருந்தால் எனக்குப் பிடிக்கும். அவளுக்கு அமைதியாக இருக்கவேண்டும்.

எனக்கு மரபு பிடிக்கும். அவளுக்கு நவீனம் தான் பிடிக்கும்.

கலைகள் மீது எனக்கு என்னையே தொலைத்து விடும் பிரியம் உண்டு. மிகப்பிடித்த விஷயமானாலும் அளவோடு நிதானமாய் கையாள்வாள் அவள்.

சமரசங்கள், சமாளிப்புகளால் மனக்கசப்புகள் தவிர்க்கப்படுமென்றால் நான் அதைத்தான் செய்வேன். எதுவானாலும் சமன் செய்து சீர்தூக்கி சரியை சரியென்றும் தவறை தவறென்றும் நேர்மையாய் அணுகும் திட மனது அவளுக்கு.

நான் வடக்கென்றால் அவள் நிச்சயம் தெற்கென்றுதான் சொல்வாள். வீம்புக்கென்று அல்ல, உண்மையிலேயெ எங்கள் விருப்பத்தெரிவுகள் அப்படித்தான் இருக்கும். அதனால் அவள் என்னுடைய மனக்கூறுகளின் சமநிலைப்புள்ளி.

ஆனால் இது அத்தனைக்கும் அப்பால் எங்களுக்கென்றொரு மன அலை வரிசை இருக்கின்றது. இந்த உலகில் எனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட அத்தனை அன்பும் ஒட்டு மொத்தமாய் வடிந்து போனாலும் என்னை அனாதையாய் விட்டுவிடாதிருக்க அவள் மட்டும் நிச்சயம் இருப்பாள். தன் உறுதியான கரங்களால் என்னைப்பிடித்து தூக்கி நிறுத்துவாள்.

ஒரு பெண்ணுக்கு தாய்,தந்தை,நண்பர்கள்,கணவன்,குழந்தைகள் இது எல்லாம் அமைவது மிக மிக இயல்பு. ஆனால் ஒரு சகோதரி அமைவது என்பது மிகப் பெரிய வரம். என் போன்றவளுக்கு இவளைப் போன்ற ஒருத்தியெல்லாம் சகோதரியாய் அமைவது ஜென்மாந்திர தவத்தின் பலன். என் அபத்தங்களுக்கும் அப்பால் என்னை சுமக்கும் தூய அன்பு அவளிடம் மட்டும் தான் இருக்கின்றது.

இந்த உலகில் நான் வாழ இன்னும் ஆயுள் தேவையென்று இறைவனிடம் நான் கேட்க வேண்டுமென்றால் அதற்கான மூன்றே மூன்று காரணங்களில் முதன்மைக்காரணி அவள் !

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி !

(அப்போதே எழுத நினைத்தது தான், நேரம் கிடைக்கவில்லை)

August 22, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக