செம்பருத்தி

ஒரு மனிதனுடைய பதின்மவயது வரையான காலப்பகுதி அவனின் மொத்த வாழ்வின் முன்னுரை போன்றது. இருபது வயதில் வாழ்க்கைக்கான சுதந்திரக்கதவுகள் திறக்கின்றன. வாழ்க்கையின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. உலகம் என்னும் கரடுமுரடான, மிகக்கடினமான மண்தரையில் வாழ்க்கைக்கான ஆணிவேரை ஆழப்பதிப்பதற்காக ஓடத்தொடங்குகிறான்.
அதற்கு மேல் ஆரம்பிக்கும் அவனுடைய வாழ்வின் அத்தியாயங்கள் ஆயுளின் இறுதி வரை தொடர்கின்றன. இருபதில் தொடங்கும் இந்தப் பயணம் அறுபது வரையும் செல்வதெல்லாம் அதிசயம் என்பதாலேயே சஷ்டியப்த பூர்த்திகள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ சவால்களை, சுகதுக்கங்களை சந்திக்கிறோம். வித விதமான குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களோடு பழகுகிறோம்.ஒரே மனிதருக்குள் மாறுபட்ட குணநலன்களை கண்டு அதிசயிக்கிறோம். சில நேரங்களில் கோபமும் எரிச்சலும் அடைகிறோம். நம்முடையதும் மற்றவருடையதுமான அன்றாட வாழ்வியல் போரட்டங்களை சந்திக்கிறோம்.பல தோல்விகளை,சின்னச்சின்ன சந்தோஷங்களை, மிகப்பெரிய கொண்டாட்டங்களை, சில பெருந்தன்மைகளை, சில சகிப்புத்தன்மைகளை, சில தவறான புரிதல்களை அனுபவிக்கிறோம்.

இது எல்லாவற்றுக்கும் நடுவில் இந்த உலகில் உணர்வுள்ள அத்தனை உயிரினத்தையும், கண்ணுக்குத்தெரியாத ஒரு மிக மிக மெல்லிய இழை ஒன்று பிணைத்துச் செல்கின்றது.

அதன் பெயர் அன்பு.

அது எப்போதும் மாறுவதில்லை.

ஆனால் இந்த ஓட்டம், வேக நடையாகி, நடையாகி, தவழ்தலாகி, நகர்தலாகி அசைதலாகத் தொடங்கும் காலத்தில் அந்த இழை மீதான பற்று மெது மெதுவாக குறைந்து தெளிந்து நிதானிக்கின்றது மனம்.

இதுவரை படித்து விட்டீர்களா?

இதுதான் வாழ்க்கை என்று இப்படி வசன நடையில் படிப்பது அயர்ச்சியை ஏற்படுத்தும்.

இதே விஷயத்தை மிக சுவாரஸ்யமான ஒரு கதையாக சொல்கிறது "செம்பருத்தி" - தி.ஜானகிராமன்

சட்டநாதன் என்கின்ற ஒரு சாமான்ய மனிதனின் சுமார் 40 ஆண்டுகால வாழ்வு அது.

அவரைச் சுற்றியுள்ள மனிதர்கள், சந்திப்பவர்கள் அவர்களுடைய கோபதாப சுக யுகங்கள் அத்தனையும் இருக்கின்றது.

பல்வேறு சூழல்கள் இக்கதையில் வந்த போதும் என்னை மிகவும் பாதித்த ஒரு விஷயம் சடாட்சரத்துக்கும் சண்முக ஆசாரிக்கும் இடையிலான முரண் தான். சுதந்திர போராட்டகாலத்துக்கு முன்னும் பின்னுமாவ நகர்கின்றது கதை. தி.ஜா வின் கருத்துப்படி மகா மக அன்னதானமாக வந்த சுதந்திரத்தை நாம் அனைவரும் சுகபோகமாக அனுபவிக்கின்றோம். ஆனால் உண்மையிலேயே அதற்காக தம் வாழ்வையே தியாகம் செய்த சண்முக ஆசாரி போன்றவர்கள் கடைசிவரை துன்பப்பட்டு சாகின்றார்கள், அவர் தம் தலைமுறை இன்றும் கூட அடிப்படை வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்கின்றது. ஆனால் சடாட்சரம் போன்று சுய நலத்துக்காக சுதந்திரப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் பச்சோந்திகளின் பரம்பரை அமோகமாய் வாழ்கின்றது.

இந்த காலகட்டத்தில் கூட சந்தர்ப்பவசத்தால் ஜூலிக்கள் பிரபலம் அடைவதும், கேடயமாக காத்த மீனவப்பெண்டிர் பெயரறியாமல் மடிவதும் நடக்கத்தானே செய்கின்றது?

ஆனால் இந்த நாவலில் சொல்லப்பட்ட சில விஷயங்களை என்னால் ஏற்க முடியவில்லை.

1.நான் அறிந்த வரை கலைஞர்கள் தவிர்த்து மற்ற ஆண்கள் யாரும் சுய மற்றும் சக மனித மன அலசலில் ஈடுபடுவதில்லை. அவர்கள் சிந்திக்க என்று உட்காருவதே அதிகம். மீறி சிந்தித்தாலும் அது வெறுமனே எதிர்கால திட்டங்கள் குறித்ததாகவே இருக்கும். சட்டநாதனுடைய இந்த குணாதிசயம் எனக்கு முரணாகப் பட்டது.

2.பெரிய அண்ணி போன்ற "அமுக்குனி ராட்சசிகள்" ஏறக்குறைய எல்லா வீட்டிலும் உண்டு. தான் எல்லா தவறையும் செய்து விட வேண்டியது, அந்த தவறையெல்லாம் எப்படியோ உருட்டி புரட்டி அடுத்தவர் தலையில் சுமத்தி விட்டு தப்பித்து விடவேண்டியது. மற்றவர் மனதையோ உணர்வுகளையோ புரிந்து கொள்ளாமல் தன் இஷ்டப்படி வாழ வேண்டியது. ஏன் இப்படிப் பட்டவர்களை சகிக்க வேண்டும்? ஒருவர் ஒட்டு மொத்த குடும்பத்தையும் வதைத்து விட்டு சாவை நிம்மதியாக அனுபவிக்கவேண்டும் என்று ஒரு நியதி ஏன் இருக்கின்றது? அவர்கள் ஏன் எந்த தண்டனையையும் அனுபவிக்காமல் மடிய வேண்டும்?

3.அத்துணை காலம் பொறுமையாக மனதை அழுத்திக்கொண்டு இருந்த போது புவனா போற்றப்படவில்லை, ஆனால் ஒரு முறை பொறுமையிழந்து தன் மன ஆதங்கத்தை கொட்டியதற்கு தூற்றப்படுகிறாள். இது எந்த விதத்தில் நியாயம்?

இவ்வளவு இருந்தும் உண்மையில் செம்பருத்தி படித்து முடித்தபோது ஒரு ஆழமான திருப்தி கிடைத்தது.

ஆண்டவன் தந்த ஆயுள் எத்தனை நாள் இருக்கின்றதோ,ஆனால் ஒரு 40 ஆண்டுகாலம் வாழ்ந்து முடித்த திருப்தியை தி.ஜானகிராமன் செம்பருத்தியின் மூலம் எனக்கு தந்திருக்கின்றார் !





August 22, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக