எப்போதும் இந்தப் பயணம் எனக்கு மிகவும் பிடித்தது தான்.
நீலக்கட்சியில் கணவனும் பச்சைகட்சியில் மனைவியும் ஆதரவாளர்களாக இருந்து கொண்டு தேர்தல் காலங்களில் காரணமே இன்றி எங்களோடு கொஞ்சுவதும் பின்பு பிரபாகரன் இறந்தபோது முதல் ஆளாகப்போய் பட்டாசு வெடித்து பாற்சோறு பொங்கி பரிமாறுவதுமான அயலவரைக் கொண்ட சூழலில் வளர்ந்தவள் நான்.
பொட்டு, பூ, புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் என்கின்ற சொந்த அடையாளங்களைக் கூட அது எத்தனை பிடித்திருந்தாலும் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது என்று வாழ வேண்டிய கட்டாயத்தில் என்னுடைய பிள்ளைப்பிராயம் இருந்தது.
இது தான் இப்படி என்றால் கல்வி, நாகரிகம் மற்றும் வாய்ப்புகள் சார்ந்த வேறு விதமான சாமர்த்தியமான ஒடுக்கு முறைகளும் இல்லாமலில்லை. அகில இலங்கை தமிழ் மொழித்தினப்போட்டிகளில் முதலாம் இடம் ஒரு மாகாணத்துக்கு, இரண்டாம் இடம் ஒரு மாகாணத்துக்கு, மூன்றாம் இடம் மத்திய மாகாணத்துக்கு என்று ஒரு எழுதப்படாத விதி ஒன்று இருந்தது.(இந்த அத்தி குறிஞ்சி போல எப்போதாவது விதி விலக்குகள் பூக்கும்).
இதையெல்லாம் மீறி ஒரு அங்கீகாரம் வேண்டுமென்றால் அதற்கு மறுக்கப்படவே முடியாத ஒரு ஆளுமை இருக்கவேண்டும்.
இது போன்ற இன்ன பிற அழுத்தங்கள் நிறைந்த என் பால்ய பருவத்தில் கேவலம் Cricket இல் கூட நான் என் தாய்நாட்டுக்கு ஆதரவாக இருந்ததில்லை. (இதற்காக எத்தனையோ சண்டைகள் உடன் இருந்தவர்களுடன் ஏற்பட்டிருக்கின்றன. உண்ட வீட்டுக்கு இரண்டகம் அது இது என்றெல்லாம்) தாய்நாடாகவே இருந்தாலும் அதன் குடிமகன் சுதந்திரமாக சுமுகமாக வாழ வழி இல்லை என்றால் அந்த நாட்டின் மீது பற்று எப்படி வரும்? இப்படிப்போனால் பள்ளத்தாக்கு, அப்படிப்போனால் எரிமலை என்கின்ற நிலை.
ஆனால் பூர்வீகமாக இருந்ததாலோ இல்லை புத்தகங்கள், திரைப்படங்கள் வழி அறிந்திருந்ததாலோ தமிழ் நாடு மீது அலாதி பிரியம் எப்போதும் இருந்திருக்கின்றது.
இந்த விஷயங்களை எல்லாம் அப்போது நான் அதிகம் யோசித்திருக்கவில்லை. ஆனால் முதன் முறை சென்னையில் வந்திறங்கியபோது ஏதோ அத்தனை நாள் அடைத்திருந்த மூச்சை இழுத்துவிட்டது போல ஒரு உணர்வு ஏற்பட்டது பாருங்கள். ஆஹா ! அப்படி ஒரு நிம்மதியான சுதந்திர உணர்ச்சி. இந்த வீடு வந்தடைந்தது என்பார்களே அப்படி.
நான் தங்கி இருந்த சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மூன்று நகரங்களுமே எந்த வித சுணக்கங்களுமின்றி என்னை ஆதுரத்துடன் ஏற்றுக்கொண்டன. நான் பேசிய மொழிக்காகவோ, என் இனத்துக்காகவோ, என் நாகரிகத்துக்காகவோ, கல்வித்தகமைக்காகவோ நான் ஒரு போதும் பாகுபடுத்தப்படவில்லை. ஒரு சக மனிதராக மட்டுமே நடத்தப்பட்டேன். அதனாலேயே தமிழ் நாடு என்னுடைய all time Favourite ஆகிப்போனது.
இதில் சென்னை வாசம் எப்போதும் அவசர கதியிலேயே இருக்கும். எரிச்சலூட்டும் கட்டுப்பாடுகள் நிறைந்த விடுதி அமைந்த தலையெழுத்தால் கோயம்புத்தூரின் உண்மையான சுகத்தை, அதன் அற்புதமான விருந்தோம்பலை, எந்த விதமான கேள்விகளும் இன்றி என் மீது முழு மனதோடு அன்பையும் அக்கறையையும் காட்டிய என் கல்லூரி மனிதர்களின் மனித நேயத்தை ரசிக்க முடியாமலே போய்விட்டது.
ஆனால் திருச்சி வாசம் எப்போதும் பொறுமையாய், சுதந்திரமாய் சந்தோஷமாய் இருக்கும். பூர்வீகம் என்பதால் என்னவோ திருச்சி எப்போதும் எனக்கு மிகவும் நெருக்கமானது. காவிரியிலும் கேணிகளிலும் தலைக்குப்புற குதிக்க வேண்டும் போல, மலைக்கோட்டை உச்சியில் நின்று கத்த வேண்டும் போல,ஸ்ரீ ரங்கத்தை வலம் வர வேண்டும் போல, கடை வீதியை சுற்றி வர வேண்டும் போல அத்தனை ஆனந்தமாக இருக்கும்.
அப்போதெல்லாம் நான் துறையூர் சென்றதில்லை. மண்ணச்ச நல்லூர் வரை மட்டும் தான். அதையும் தாண்டி சில சுற்று வட்டார சிற்றூர்களுக்கு பூர்வீக பயணமாகவோ உள்ள குல தெய்வ வழிபாட்டுக்கோ தான் சென்றிருந்தேன்.
ஆனால் பேருந்து பயணமாக துறையூர் வரை செல்ல வேண்டும் என்கின்ற ஒரு அவா எப்போதும் இருந்தது. அதற்கு ஒரு சுவையான காரணமும் இருந்தது. அது என் திருமணத்திற்கு பின்பு தான் நிறைவேறியது.
இசைக்கு மொழி இல்லை என்று எந்த மூடன் சொன்னானோ அவனை துறையூர் திருச்சி பேருந்தில் ஒரு முறையும் கொழும்பிலிருந்து புற நகர் செல்லும் தனியார் பேருந்துகளில் ஒருமுறையும் பயணித்து விட்டு வா என்று நடு மண்டையில் நச்சென்று குட்டி சொல்லவேண்டும்.
கொழும்பு - புற நகர் பேருந்துகளில் உலக மகா மொக்கையான சிங்களப்பாடல்களை அதை விட மொக்கையாகப் பாடிய மேடை நிகழ்ச்சிகளை ஒளி/ஒலிபரப்ப மாட்டார்கள். உயிர்கிலி வந்தது போல அலற விடுவார்கள். காதை வெட்டிக்கொண்டு குதித்து விடலாமா என்றிருக்கும்.
ஆனால் இதே துறையூர் வண்டிகளில் தமிழ் பாடல்கள் சுகமாகத் தாலாட்டும். ஒருவேளை இது ஒரு மொழித்துவேஷமான கருத்தாக தோன்றலாம். என்ன செய்வது. அப்படியான சூழலில் நான் வளர்ந்து விட்டேனே? மொழி மட்டுமில்லாமல் இதற்கு வேறொரு மிக முக்கியமாக காரணமும் இருக்கின்றது. அது தன்னிகரில்லா இளையராஜா !
இப்படியாக துறையூர் திருச்சி வண்டிகளில் இளையராஜா தன் இசையால் இதமாய் வருடிக்கொண்டிருக்க வெளியில் இயற்கை இன்பக்கொலை செய்யும். நகரம் தாண்டியதும் காவேரி, பின்பு கொள்ளிடம்(இந்த இரண்டும் ஆடி மாதத்தில் மட்டும்) பச்சைப் பசேலென்ற வயல் வெளிகள் என்று சொல்ல எனக்கும் ஆசை தான் ஆனால் அவற்றில் பாதி வீட்டு மனைகள். சில கல்லூரிகள் பல கோயில்கள் தொலைதூர மலைகள் தாண்டி சில முற்காடுகள் என்று ரசித்துக்கொண்டே வந்து களைக்க ஆரம்பிக்கையில் துறையூர் பிரிவு ரோடு வந்து விடும். அப்புறமென்ன பேருந்து நிலையம் தானே.
இதை விட சுவாரஸ்யமாக இருக்கும் உட்புறக்காட்சிகள். பொட்டும், மல்லி முல்லை கனகாம்பரம், கதம்பம் என்று பூவும், சேலையும், கண்ணாடி வளையல்களும், மஞ்சளுமாய் உலகின் ஒட்டு மொத்த அழகெலாம் தமிழில் அப்படியே கொஞ்சி கொஞ்சி விளையாடும். அந்த ரம்யத்துக்கு இந்த உலகில் எந்த ஒன்றும் ஈடாகிவிடமுடியாது.
நடத்துனர் "சீட்டு சீட்டு" என்பார். முன்னே போ பின்னே போ என்பார். ஆண்கள் உலக அரசியலை அலசுவார்கள். பெண்கள் குடும்ப அரசியலை அசை போடுவார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் தங்களுடைய குரலின் உண்மையான தொனியில் பேசுவார்கள். தயக்கமே இன்றி எல்லா கதைகளையும் பேசுவார்கள். முணுமுணுப்பாக தாய்மொழியை பேச வேண்டிய அழுத்தமில்லாமல் அவர்கள் எவ்வளவு சுதந்திரமாக இயல்பாக தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என்பதைப் பார்க்கையில் பொறாமையாகவும் இருக்கும். பெருமையாகவும் கூட இருக்கும்.
இந்த பதிவை இரண்டு வருடங்களுக்கு முன்பு போட்ட போது நான் காரில் தான் சென்று கொண்டிருந்தேன். ஒன்றே கால் மணி நேரம் காரில் பயணித்தால் தூக்கம் வரும்.
ஆனால் திருச்சிக்கும் துறையூருக்குமான பேருந்து பயணத்தைப் போல ஆத்மார்த்தமான உணர்வை என் வாழ்வில் வேறு எந்த பயணத்திலும் அனுபவித்ததில்லை.
ஒவ்வொரு முறை பேருந்தைவிட்டு இறங்கும் போதும் கண்களில் கண்ணீர் நிறைந்து இருக்கும்.
அது இப்படி ஒரு நிம்மதியான வாழ்வு சிறு வயதிலிருந்தே கிடைக்காமல் போயிற்றே எங்கின்ற வேதனையிலா, இல்லை குறைந்த பட்சம் திருமணத்திற்கு பின்பாவது கிடைத்ததே என்கின்றா ஆனந்தத்திலா இல்லை அடுத்த பிறவியிலாவது தமிழ் நாட்டின் ஏதோ ஒரு ஊரின் ஏதோ ஒரு கோடியிலோ பிறந்துவிடவேண்டுமே என்கின்ற பிரார்த்தனையிலா என்பது எனக்கே ஒரு போதும் புரிவதில்லை.
September 28, 2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக