தேவதைகளுக்கெங்கே இருக்கின்றது பூமி?

உடலின் மற்ற அவயவங்கள்
உரமிழக்கத் தொடங்கினாலும்
உயிர்ப்புடனிருக்கும் ஒரு
உறுப்பை காட்சிப்பொருளாக்கி 
சுய மகிழ்வடையும் குரூர சுகத்தில்
திரியும் ஒரு கிழட்டு நாயைப்பற்றி
ஒரு தோழி எழுதி இருந்தார்.

அனாதைகள் என்றால் அவர்களின் 
அடிப்படை அந்தரங்கங்களும்
அனுமதியின்றி திருடப்படலாம் என்ற
மேட்டிமைத்தனத்தின் அலட்சியத்தில்
காம வறட்சியை தீர்த்துக்கொள்ளும்
கொடூர ஓநாய்களையும் துணையாகும்
குள்ள நரிகளையும் பற்றிய செய்தியை
ஒரு தோழி பகிர்ந்திருந்தார்.

முகப்பில் வால் கொண்ட
இந்த நூதன மிருகங்களையெல்லாம்

நேர்வரிசையில் நிற்கவைத்து
நீட்டிக்கொண்டிருக்கும் முனையில்
நெருப்பு மூட்டி எரியவிட்டு
நித்தம் துன்புறுத்தும் ஒரு 
நீண்ட தண்டனையை ஆயுள் வரை
தரவேண்டுமென்ற வெறியை

ஆற்றாமையாலும் கழிவிரக்கத்தாலும்
அறைந்து சார்த்தி ஆழப்புதைக்க வேண்டிய
தலையெழுத்துள்ள சமூகத்தில்

இந்த உலகமானது
அன்பாலும், அழகாலும்
வசந்தங்களாலும்,கந்தர்வர்களாலும், 
இனிப்புக்கட்டிகளாலும், பனிக்கூழ்களாலும்
மட்டுமே நிறைந்ததென்று 
என் சின்னஞ்சிறு தேவதைக்கு
எப்படி அறிமுகப்படுத்துவேன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக