நூறு நாற்காலிகள்

'எங்களுடைய நீதி உணர்ச்சியாலும் கருணையாலும் நீ இந்த நாற்காலியில் அமர்த்தப்பட்டிருக்கின்றாய். அதற்கு நீ எப்போதும் நன்றி விசுவாசமுடையவனாக இருக்க வேண்டும்'

தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் மாற்றி மாற்றி இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு சமூகச் சூழல்.

பன்னெடுங்காலமாய் தனக்கு நடக்கும் அநியாயத்தை அது அநியாயம் என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாமல் பைத்தியக்காரி போல திரிகின்ற ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட தாய்.சமூகத்தின் கண்களுக்கு அருவெறுப்பாகத் தெரியும் அவளோ தப்பிப்பிழைத்த தன் குழந்தை அடித்து உதைத்த போதும் அன்போடும் பதைபதைப்போடும் அந்த நாற்காலியில் அமரவேண்டாம் என்று தலைப்பாடாய் அடித்துக்கொண்டிருக்கின்றாள்.

இரண்டுக்கும் நடுவில் திரிசங்கு நிலையில் இந்த ஆயுளை வாழ்ந்து முடித்து விடுவதற்காய் போராடியபடி அந்த நாற்காலியில் அமர்ந்தும் அமராதிருக்கும் ஒரு மனிதன்.

இந்த இரண்டுக்குமான இடைவெளி நிரப்பப்படவேண்டுமானால் இன்னும் நூறு நாற்காலிகள் தேவைப்படலாம் என்கின்றார் ஜெயமோகன்.

இட ஒதுக்கீடு இதற்கான சரியான தீர்வு அல்ல என்றும் அது "வலிமையானவர்/வலிமையற்றவர்" என்கின்ற பாகுபாட்டிலிருந்து "சலுகை உடையவர்/சலுகையற்றவர்" என்கின்ற புதுப் பிரச்சினையைத் தான் அது தோற்றுவிக்கும் என்றும் நூலின் பின்னுரையில் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

புத்தகத்தை படிக்கையில் உடலெல்லாம் நடுங்கியது. உடலின் ஒட்டு மொத்த குருதியும் உருண்டு முனைகளில் திரண்டு கட்டிக்கொண்டது போல ஒரு உணர்வு. ஒரு வலி. அதுவும் அந்த தாய் படும் பாடு !

தமிழ் நாட்டில் தான் பிறப்பை வைத்து எத்தனை பிரிவினைகள் எவ்வளவு அநீதிகள்? ஆக்க பூர்வமான எந்த ஒரு தீர்வையும் பெற்றுத்தராமல் மாற்றி மாற்றி ஏளனம் செய்யவும் பெயருக்கு கண்டணம் தெரிவித்து விட்டு கடந்து போகவுமாய் எத்தனை அரசியல்?

ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும் அடுத்தபிரச்சினை வரும்வரை கேவலம் பிரபல பசிக்காக அர்த்தமற்ற பல நூறு கூச்சல்கள்

ஆனால் நூறல்ல நூறாயிரம் நாற்காலிகள் வேண்டும். நாற்காலிகள் மட்டுமல்ல சுயநலமற்ற அரசியல் வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் இதற்கான சிந்தனை வேண்டும்.

மிகவும் பின் தங்கிய நிலையிலிருந்து ஒருவர் முன்னேற முயற்சிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அது ஒரு நூலேணிப் பயணம். மேலே இருந்து ஒருவர் கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டாலும் சற்று அசைத்தோ உதறியோ விட்டாலும் ஏற முயற்சிப்பவர் அகல பாதாளத்தில் விழுந்து விடுவார்.

மிகக்கடினமான இந்த பயணத்தை அவர்கள் தாண்டி வரவும் தோளோடு தோள் நின்று அவர்தம் சுற்றத்தை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவரவும் உதவு செய்ய வேண்டியது முன்னேறிய வாழ்க்கையை வாழும் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

சக மனிதனுடைய நிம்மதியிலும் அவன் மீதான அன்பிலும் தான் ஒரு மனிதன் பகுத்தறிவு கொண்ட ஒரு 'மனிதன்' ஆகின்றான்.

இல்லையென்றால் குரங்காகவே இருந்திருக்கலாமே, எதற்கு கூர்ப்பு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக