கடற்கனவு 5

மூன்றாம் நாள் காலையில் லங்காவியில் இறங்கியபோது,

அடேயப்பா, அந்த காலையில் அங்கு எவ்வளவு வெயில் !!

ஆனால் அந்த தரைக்காற்று ! அந்த ரம்யமான மணம் !

துறைமுகத்திலிருந்து ஒவ்வொரு உள்நாட்டு சுற்றுலாவுக்கும் பிரத்தியேகமான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாங்கள் தெரிவு செய்த திட்டத்தின் சுற்றுலா வழிகாட்டியாக ஒரு பெண்மணி இருந்தார்.

லங்காவியைப் பற்றிய அறிமுகத்தை தந்தார். பொதுப்பேருந்து வசதிகள் லங்காவியில் இல்லை. தப்பித்தவறி நீங்கள் தொலைந்து போனால் வாடகை வண்டிகளைத்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். வாடகை வண்டிகள் சுமார் 400 RM வரை ஆகலாம். சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஏறக்குறைய 500 சதுர KM பரப்பளவுள்ள இந்த தீவை ஒரு நாளில் சுற்றிப் பார்த்துவிடலாம் என்று சொன்னார்.

முதலில் தீர்வையற்ற shopping செல்ல இருப்பதாகவும், பின்பு Eagle island, அதைத்தொடர்ந்து shopping, கடைசியாக கடற்கரையும் கடற்காட்சி கூடமும் செல்ல இருப்பதாகச் சொன்னார். பொதுவாக லங்காவியில் கடைகள் 10 மணிக்குத் தான் திறக்கப்படும். அப்போது மணி 8.30 தான் ஆகி இருந்தது. ஆனால் நாங்கள் செல்ல இருக்கும் கடை தீர்வையற்ற கடை என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்காக 9.00 திறந்துவிடுவார்கள் என்று அவர் சொன்னார்.

சென்ற வழியெல்லாம் இயற்கை நிறைந்துவழிந்து கொண்டிருந்தது. ஊரிலிருந்து வந்த பின்பு சுமார் 6 மாதங்கள் கழித்து 'இயற்கையான இயற்கை' யை பார்த்தது மனதிற்கு அவ்வளவு இதமாக இருந்தது.

இயற்கையான இயற்கை என்றால் என்ன? நேர்த்தியற்ற மண் தரை, பூர்த்தியற்ற மரங்கள், உயர்ந்த மலை முகடுகள், உடைந்து கிடக்கும் கற்பாறைகள்,தொட்டுத்தெறிக்கும் சூரிய வெப்பம், விட்டுப்பறக்கும் மனம்.

சரி கலைப்பொருட்கள் வாங்கலாம் என்று ஆசையாகப் போனால் அது வெறும் இனிப்பு கடை. துயரமே, இந்த mars, snickers, toblerone ஐ வாங்கவா நான் சிங்கப்பூரிலிருந்து கப்பலேறி மலேசியா வந்தேன்?

நல்ல வேளையாக அருகிலிருந்த சில கலைப்பொருள் கடைகள் திறக்க ஆரம்பித்திருந்தன. இல்லையென்றால் 20 நிமிடம் என்று நேரம் தந்த அந்த வழிகாட்டி பெண்ணை வறுத்தெடுத்திருப்பேன்.

அடுத்து சென்றது Eagle Island ( கழுகுத்தீவு, ஆஹா வரலாற்று நாவல்களில் இடம் பெறக்கூடிய அழகான பெயர்). நான் என்னவோ கழுகுகள் இருக்கும் என்று பயந்து கொண்டே போனேன்.

ஆனால் அங்கிருந்தது ஒரு பிரம்மாண்டமான கழுகின் சிலை. எம்பிப்பறக்க ஆயத்தாமாகும் நிலையில் இருந்தது. வெறும் புகைப்படம் எடுப்பதைத்தவிர சுவாரஸ்யமான எதுவும் அந்த இடத்தில் இல்லை. அட இந்த கழுகு சிலைக்காக இந்த இடத்தை 'சுற்றுலாத் தளம்' என்று சொல்வது உண்மையிலேயே எனக்கு அபத்தமாகத்தான் இருந்தது.

படகு சவாரி, மலையேறுதல், நீரில் மூழ்குதல் போன்ற சுவாரஸ்யமான சுற்றுலாக்களை குழந்தைக்காக தவிர்த்து விட்டு இந்த சுற்றுலாவை தேர்ந்தெடுத்து வராமல் கப்பலிலேயே இருந்திருக்கலாம் என்று ஒரே ஆயாசமாக இருந்தது. காலை வெயில் வேறு படுத்தி எடுத்தது.

அடுத்து மீண்டும் ஒரு வணிக வளாகம். அங்கும் சிறிது shopping. எனக்கு சலித்துப்போக ஆரம்பித்து விட்டது. இந்த வெயிலில் இவ்வளவு அலைய வேண்டி இருக்குமென்று தெரிந்திருந்தால் கப்பலிலேயே இருந்திருக்கலாம். லங்காவியாம் லங்காவி.

கடைசியாக கடற்காட்சி கூடம். அங்கு செல்வதை விட கடற்கரைக்கு செல்லலாம். குழந்தை நன்றாக விளையாடுவாள் என்று தோன்றியது. ஆனால் அவளோ கீழே இறங்கவே இல்லை. மணலில் சிறிது நேரம் அமர்ந்தோம். நண்பகல் 12 மணி !.

கண்ணை மூடிக்கொண்டேன். சாண்டில்யன் கதைகளில் வரும் கடற்கரைகள் மனதில் தோன்றின. இதே போன்று சுற்றிலும் காடுகளும் மலைகளும் கீழே கடலும் மேலே வானமுமாய், கட்டிடங்களும் ஆளரவமுமற்ற பின்சாம இரவுகளின் கடற்கரைகள் இந்திய சரித்திரத்தில் பதித்த வரலாற்றுத்தடங்கள் ஞாபகம் வந்தன. இதுவும் அவற்றில் ஒன்றாக இருக்கக்கூடும்.

ஆனால் கண்ணைத் திறந்ததும் நனவு முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது. காலம் மாறுகின்றதல்லவா?

ஒருவழியாய் கப்பலை வந்தடைந்த போது உண்மையிலேயே களைப்பாக இருந்தது. இன்றாவது கப்பல் புறப்படுவதை பார்க்க வேண்டுமென்று அவசர அவசரமாய் குளித்து விட்டு மேல் தளத்துக்கு ஓடினால் இன்றும் ஏமாற்றம் தான். ஆனால் கப்பல் திரும்பிவதை பார்த்து ரசிக்கமுடிந்தது.

லங்காவியை சுற்றிலுமிருந்த அத்தனை அழகான செங்குத்தான குன்றுகளும் என்னிடம் ஏதேதோ கதை சொல்லியதைப்போலவும் எனக்கு பிரியாவிடை தந்ததைப்போலவும் ஒரு ஏக்கம் மனதில் நிறைந்தது. கண்ணை விட்டு அவை மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீண்டும் வந்து உணவு, தூக்கம், மாலையில் மேல் தளத்தில் நடை.

இரவு உணவு Gala dinner என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். பெரிய வித்தியாசம் ஒன்றில் இல்லை. இவ்வளவு நாள் விடுதி வாசத்தைப்போல வரிசை சாப்பாடாக இருந்ததல்லவா. அதற்கு பதிலாக விருந்தோம்பல். அவ்வளவு தான்.

அதை தொடர்ந்து 11 ஆம் தளத்தின் நீச்சல் குளத்துக்கருகே பிரிவுபசார கொண்டாட்டம் ஒரே ஆட்டமும் பாட்டமுமாக களை கட்டியது. அக்‌ஷராவும் ரசித்து நடனமாடி மகிழ்ந்தாள்.

அன்று ஏனோ தூக்கம் வரவில்லை.களைப்பா இல்லை சலிப்பா என்று தெரியவில்லை. நிலவும் ரசிக்கவில்லை, இசையும் ருசிக்கவில்லை.

-தொடரும்

#superstargemini


September 1, 2017

கடற்கனவு 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக