சிங்கப்பூர் வாசகர் வட்டம்

தங்க மீன் கலை இலக்கிய வட்டத்தின் சந்திப்பொன்றில் தான் சிங்கையின் தேர்ந்த இலக்கிய விமர்சகராக அறியப்படும் திரு.சிவானந்தம் நீலகண்டன் அறிமுகமானார். இலக்கியம் சார்ந்த தெரிவு, தேடல், ரசனை என்பவற்றில் நான் அதிசயித்து அண்ணாந்து பார்க்குமளவுக்கு பாண்டித்தியம் பெற்ற ஒரு நல்ல நண்பர். அவர் சொல்லித்தான் சிங்கப்பூரில் வாசகர் வட்டம் என்று இன்னொரு இலக்கிய அமைப்பும் இருப்பது தெரிய வந்தது.

அந்த மாத நிகழ்வில் ஈழத்து எழுத்தாளர் திரு அ.முத்துலிங்கம் அவர்களுடைய படைப்புகளைப்பற்றிய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய "அக்கா" மற்றும் "பிள்ளை கடத்தல்காரன்" இரண்டையும் படித்தேன். அவையும் பெரியளவில் என்னை கவரவில்லை. சலிப்பாக இருந்தாலும் நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆர்வம் இருந்ததால் படித்தவற்றை பற்றி எனக்குத் தோன்றியதை எழுதிக்கொண்டு சென்றேன். இங்கு வரவேற்பு எப்படி இருக்குமோ என்று ஒரு தயக்கம் இல்லாமலும் இல்லை.தாமதமாகியதால் பாதி நிகழ்வில் நுழைய நேர்ந்தது வேறு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் அங்கும் கூட எந்த வித வகைமை மற்றும் தகைமை சார்ந்த பாகுபாடுமின்றி முதன் முறை அங்கு வந்த என்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அன்றைய தினம் இலக்கியத் தேர்வு மற்றும் ரசனை குறித்து ஒரு மிக முக்கியமான பாடத்தை கற்றுக்கொண்டேன். அதுதான் இலக்கியங்கள் மற்றும் படைப்பாளர்கள் பற்றிய முன் முடிவுகள் ஏதுமின்றி எப்படி எந்த ஒரு புத்தகத்தையும் ஆதுரத்துடன் படிப்பது என்பது.

அ.முத்துலிங்கம் அவர்களின் பல்வேறு படைப்புகளைப் பற்றி அங்கிருந்த எல்லோரும் பகிர்ந்து கொண்டார்கள். எனக்கு சுவைக்காத கதைகளிலும் கூட எவ்வளவு சுவாரஸ்யமான மற்றும் சிந்திக்கத்தூண்டும் விஷயங்கள் இருக்கின்றன என்பதும் நான் படித்தவற்றை விட படிக்காதவற்றில் எவ்வளவு இலக்கியம் நிரம்பி இருந்தது என்பதும் அன்று தான் புரிந்தது.

அ.முத்துலிங்கம் என்கின்ற எழுத்தாளரின் படைப்புகள் அப்படி ஒன்றும் உவப்பாக இல்லை என்று போன நான் அங்கு பகிரப்பட்ட அத்தனை கதைகளையும் தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு திரும்பினேன்.

இந்த கல்வி தான் மிக முக்கியம். நான் கல்கி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி மூவருடைய நாவல்கள் அத்தனையையும் படித்து முடித்து விட்டேன். இந்திரா சௌந்தரராஜனின் பெரும்பாலான நாவல்களை படித்து இருக்கின்றேன். மகாகவி பாரதியின் எல்லா கவிதைகளையும் படித்திருக்கின்றேன்.

ஆனால் இத்தனை ஆர்வம் எனக்கு மற்ற எழுத்தாளர்கள் மீது இருந்திருக்கவில்லை. ஒன்றிரண்டு தான் படித்திருப்பேன். சில எழுத்தாளர்களின் ஒரு சிறுகதையைப் படித்து விட்டு அவர்களின் படைப்புகளையே 'தீண்டாமை' செய்த கயமையான வாசகி நான்.

அ.முத்துலிங்கம் உட்பட பல எழுத்தாளர்களின் பெயரையே இப்போது தான் கேள்விப்படுகின்றேன். கொஞ்சம் அவமானமாகவும் கர்வ பங்கமாகவும் இருக்கின்றது. சிறுவயதில் ஆர்வமும் நேரமும் இருந்தபோதும் எதையெல்லாம் இழந்திருக்கின்றேன் என்பதை நினைக்கையில் கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கின்றது.

"Better late than never" என்பது ஒரு பிரபல்யமாக ஆங்கில வாசகம். இலக்கியம் மீதான காதல் இப்போதும் மாறாது அப்படியே இருக்கின்றது. கடமைகள் கூடிப்போய்விட்டதால் நேரம் தான் கிடைக்கமாட்டேன் என்கின்றது.

ஆனாலும் முன்பு கிடைக்காத ஊக்குவிப்பும் கல்விச்செல்வமும் சிங்கப்பூருக்கு வந்த பின்பு தான் நிறையவே கிடைக்கின்றதே!!! அது பெரிய விஷயம் இல்லையா?

வாசிப்பின் பால்வெளியில் எல்லைகளற்று நெடுந்தூரம் சிறகடித்துப் பறக்கும் குதூகலமான உற்சாகத்தை எனக்கு மீட்டுத்தந்தது சிங்கப்பூர் வாசகர் வட்டம் தான் என்றால் அது வெறுமனே மிகைப்படுத்தப்பட்ட முகஸ்துதியோ அல்லது வார்த்தை அலங்காரமோ இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக