சூரியகாந்தி





இந்த தொலைக்காட்சி நாடகங்களுக்கான முன்னோட்டங்களில் "இந்த இரு துருவங்கள் இணையுமா?" என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள் அல்லவா?

அது ஒரு வினோதமான உறவு,

11 வருடங்கள் ஒரே வகுப்பில் படித்திருந்தும் 12 வருடம்தான் நட்பென்ற ஒன்று உருவானது.

அது உண்மையிலேயே வினோதமான தோழமைதான். ஏனென்றால் இருவரும் கருத்தொருமித்த நண்பிகளில்லை. ஒருத்தி இது என்றால் மற்றவள் தெள்ளத்தெளிவாக அது என்பாள்.

தமிழ் இலக்கியத்துக்கும் English Grammar க்கும் சில நாட்கள்;
கலைகளுக்கும் Science க்கும் சில நாட்கள்;
கலாசாரத்திற்கும் Modernity க்கும் சில நாட்கள்;
மத நம்பிக்கைகளுக்கும் Feminism க்கும் சில நாட்கள்;
இன்னும் பல என்று எப்போதும் குருஷேத்திரம் தான்.(அதாவது சாதாரண முரண்பாட்டு விவாதங்களல்ல. மஹா யுத்தம்) போதாக்குறைக்கு இயற்கையிலேயே இருவரும் இரு துருவங்கள். ஒருத்தி உயரத்திலும் உயரம். மற்றவள் குள்ளத்திலும் குள்ளம்.

இதை எல்லாம் தாண்டி ஏதோ ஒரு மெல்லிய ஆனால் உறுதியான இழை இருவரையும் பிணைத்திருந்தது.கிழிக்கவோ கடக்கவோ முடியாத இணைப்பு அது.

பக்குவமில்லாத பதின்ம வயதில் கருத்துதிணிப்புகள் நிறுவல்கள் என்று உக்கிரமான போர் நடந்தபோதும்
கருத்தியல் வேறுபாடுகளைக் கடந்த ஆரோக்கியமான விவாதங்களாக அவை காலப்போக்கில் உருமாறி இன்றுவரை (நேற்றுவரை actually) தொடர்கின்றன.

ஒருவருக்கும் விட்டுக்கொடுக்கும் மேலான பண்பே சுத்தமாக இல்லாத வாக்குவாதங்கள் தொடர்ந்தபோதும் வெற்றி தோல்வி எதுவுமின்றி நடுநிலையில் முடிந்த போதும் கருத்தியல் வேறுபாடுகளைக் கடந்த உணர்வு ரீதியான ஒரு அந்நியோன்யம் தான் அந்த உறவின் தாற்பரியம். நட்பைத்தவிர வேறு எங்கே இது சாத்தியம்?

உயரம் செய்த சதியால் தன் கால் இடறி மற்றவள் விழுந்ததால் ஏற்பட்ட காயத்தைக்கண்டு தன்னையறியாது இவள் கண்ணில் வழிந்த கண்ணீரிலோ
இல்லை
ஒருத்தி தன் வாழ்வில் எப்போதெல்லாம் சோர்ந்து சாய்கிறாளோ அப்போதெல்லாம் இயல்பான ஒரு செய்கையால் தன்னையறியாது மற்றவள் சுண்டிவிடும் சிறு தன்னம்பிக்கைச்சுடரின் ஒளியிலோ

அந்த விதை மறைக்கப்பட்டிருக்கவேண்டும்.

இல்லையென்றால்
அந்த விதையிலிருந்து ஒருபுறம் துணையை நாடியே வாழும் மென்மையான சின்னஞ்சிறு முல்லையும் மற்றொருபுறம் துணையைத்தவிர வேறொன்றைத் திரும்பியும் பார்க்காத மிருதுவான பென்னம்பெரு சூரியகாந்தியும் மலரமுடியுமா என்ன?

(மகளிர் தினத்தில் வந்து சேர்ந்த பிறந்தநாள் வாழ்த்து, திருக்குறளைவிடவும் சிறிதெனினும் துல்லியமான வாக்கியம்)


October 28, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக