சிங்கப்பூர் தங்கமீன் கலை இலக்கிய வட்டம்

திரைப்படங்களை நான் விரும்பி பார்த்தாலும் அவற்றை விட பல மடங்கு அதிகமாக தமிழ் இலக்கியத்தை பற்றிப் பேசுவதற்கு எனக்கு எவ்வளவோ ஆர்வமும் அதை விட அதிகமாக விஷயங்களும் இருந்தன. உண்மையை சொல்வதென்றால் திரைப்படங்களை விட இலக்கியம் தான் எப்போதும் எந்த தயக்கமும் ஏமாற்றமும் இன்றி நான் நேசிக்கும் விஷயம். வாசிப்பு எனக்கு பொழுது போக்கல்ல. பொழுது போதாதது.

ஆனால் எந்த பிறவியில் என்ன புண்ணியம் செய்திருந்தேனோ தெரியவில்லை. இலக்கியங்கள் பற்றிப்பேசவும் பகிரவும் நான் ஆரம்பித்தால் "blade" என்று பட்டம் கொடுத்து விட்டு பின்னங்கால் பிடரியில் பட தலை தெறிக்க ஓடிப் போய்விடும் நண்பர் வட்டம் கிடைக்கும் வரம் பெற்றிருந்தேன். அப்போதெல்லாம் கிண்டல் செய்யப்பட்ட அவமானத்தை விட விருப்பமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசமுடியாது போன நிராசை தான் மனதை அரித்துக் கொண்டே இருக்கும்.

அந்த நிராசை சிங்கப்பூருக்கு வந்து நிறைவேற வேண்டும் என்று தான் பல வருட ஏக்கமாக இருந்திருந்தது போலும்.

Facebook இல் எழுத்தாளர் ஆத்மார்த்தியின் பதிவொன்றின் மூலம் தான் சிங்கப்பூர் தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தைப்பற்றி தெரிந்து கொண்டேன். அப்போதும் அதில் கலந்து கொள்ள கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஏனென்றால் ஏதோ காரணங்களுக்காக இலக்கியம் சார்ந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் சில நேரங்களில் ஒடுக்கப்பட்டும் இருந்த சூழலே பழகி இருந்த எனக்கு இங்கு எப்படியான ஒரு வரவேற்பு இருக்குமோ என்ற தயக்கம் இருந்ததில் ஆச்சர்யமொன்றுமில்லை. தவிரவும் இலக்கிய வட்டம் என்பதன் அ, ஆ வும் கூட எனக்கு அப்போது தெரிந்தும் இருக்கவில்லை.

ஆனால் அதற்கு முற்றிலும் மாறாய், முழுக்க முழுக்க தோழமையுடன் கூடிய மிகவும் சுவாரஸ்யமான ஒரு இலக்கிய நிகழ்வாக என்னுடைய முதல் தங்கமீன் கலை இலக்கிய வட்ட சந்திப்பு இருந்ததில் எனக்கு உண்மையில் ஆனந்தம் என்பதை விட ஒரு வித பரவசம் என்று தான் சொல்ல வேண்டும்.

படித்த புத்தகங்களைப் பற்றி கலந்துரையாடுவதும், போட்டிகள் நடத்தி நம் திறமையை ஊக்குவிப்பதும், புத்தகங்கள் பகிர்ந்து கொள்வதும், பிரபலமான எழுத்தாளர்களுடன் பேசி இலக்கியம் படைக்கக் கற்றுக்கொள்வதும் எனக்கு முற்றிலும் புதிய விஷயங்கள். ஆனால் நிறைய ஏங்கி இருக்கின்றேன்.

போட்டிகளில் ஆர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் கலந்து கொள்கின்றேன். சில நேரங்களில் வெல்கின்றேன். எல்லா நேரங்களிலும் நிச்சயம் இலக்கியம் சார்ந்த ஏதோ ஒன்றை கற்றுக்கொள்கின்றேன்.பகிர்ந்து கொள்வதற்காகவே என்னுடைய புத்தக வாசிப்பு வட்டத்திற்கு அப்பாலும் நிறைய நிறைய வாசிக்கத் தலைப்படுகின்றேன். அறிவையும் திறமையையும் மேம்படுத்தும் ஆவல் வந்திருக்கின்றது.

பரிசுகள், புகழைத்தாண்டி திருப்தியாகவும் சுதந்திரமாகவும் எழுதுவதற்கும், 'கண்டு அது' கற்கவும், தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் இதை விட மிகச்சிறந்த களமொன்று எங்கும் இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.

2014 இல் சிங்கப்பூரில் தனிக்குடித்தனம் ஆரம்பித்த புதிதில் பகலெல்லாம் மனதிலும் சூழலிலும் வெறுமை தான் நிறைந்திருக்கும். நாள் முழுதும் பேச்சுத்துணை கூட இன்றி இருந்த பின்பு என் மாலைகளின் முதல் வார்த்தை மீன் முள்ளாய் தொண்டையில் சிக்கும் ஒரு நிலையில் முன்னெப்போதும் நான் வாழ்ந்ததே இல்லை. அது ஒரு மன அழுத்தமாகவே இருந்தது. அந்த வாழ்வை எப்படி கடந்து வந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கின்றது.

இப்போதெல்லாம் தனிமையை நான் உணர்வதே இல்லை. எனக்கு மிகப்பிடித்த விஷயங்களைப் பற்றி பேச, விவாதிக்க, கலந்துரையாட, கற்றுக்கொள்ள ஒரு மிகச் சிறப்பான சூழல் இருக்கின்றது. ஒத்த அலைவரிசையுடைய நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். எந்த ஒரு வகைமை அல்லது தகைமை சார்ந்த பாகுபாடுமின்றி நிறைய உதவுகின்றார்கள். படிக்கவும் எழுதவும் நேரம் தான் போதவில்லை.

என்னுடைய விருப்பத்தெரிவு சார்ந்த எனக்கு கொஞ்சம் திறமையும் இருக்கின்ற ஒரு விஷயத்தில் முதன் முறை நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.

சிங்கப்பூர் தங்க மீன் கலை இலக்கிய வட்டம் சார்ந்த எல்லோருக்கும் நன்றி !

முக்கியமாக எழுத்தாளர் ஆத்மார்த்திக்கு நன்றி !

October 14, 2017 ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக