காலப்பெருவெளி

நாவல்களிலேயே மூழ்கிக்கிடந்த நான் சில மாதங்களாகத்தான் சிறுகதை தொகுப்புகளை வாசிக்கத்துவங்கினேன். அப்படியும் ஏனோ கவிதைப்புத்தகங்களை படிக்கத் தோன்றவில்லை. பெரும்பாலும் ஒரு எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு ஒரே பாணியில் இருக்கும் என்றாலும் கதைகள் என்பதால் சுவாரஸ்யமாக செல்லும். ஆனால் கவிதைப்புத்தகங்கள் ஒரு வேலை சலிப்பை ஈடுபடுத்தி விடுமோ என்ற தயக்கம் இருந்தது. ஒரு பிரபல கவிஞரின் ஒரு கவிதைத்தொகுப்பு அந்த தயக்கத்தை உறுதி செய்திருந்தது.ஆனால் அந்த தயக்கத்தை உடைத்தெறிந்தது ஒரு கவிதைத்தொகுப்பு. அது,

"காலப்பெருவெளி"

சிங்கப்பூர் தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் (அப்போது தங்கமீன் வாசகர் வட்டம்) மாதாந்த போட்டிகளுக்காக எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.

உறங்காத நேரமெல்லாம் நம் சூழலில் எதையெல்லாம் உணர்கின்றோமோ, உறங்கும் போதெல்லாம் நம் கனவில் எதையெல்லாம் காண்கின்றோமோ அவை அனைத்தையும் கவிதைக்கண்கள் வழி பார்க்க ஆசைப்படும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு தொகுப்பு.

ஒரே கருப்பொருளுக்காக எழுதப்பட்டிருந்தாலும், ஒன்றை ஒன்று தழுவி விடாத, சலிப்பை ஏற்படுத்தாத, வித்தியாச வித்தியாசமான சிந்தனைகள் அழகான கவிதைமொழியில் பெயர்க்கப்பட்ட ஆச்சரியப்படுத்தும் கவிதைகள். மிகவும் சுவையான சொல்லாடல்கள்.

".....உலகில்
அன்பு மலர்
உதிர்ந்து கொண்டே இருக்க
உயிரின் வேர் நீரைத்
தேடிக்கொண்டே இருக்கிறது"

- கே.ராமன்

"..பிரிந்தனர் சுதந்திரமாகிச் சிரித்தனர் !
பிள்ளை ஒரு கேள்விக்குறி ! "

- கிருத்திகாவின் இந்த இரு வரிகளே ஒரு கவிதையாக இருக்கின்றன.

"புதியதோர் அதிகாலைப்பொழுதில்
ஒரு புறம் எழுஞாயிறும்
மறு புறம் விழுநிலவும்.....

....மேலே புள்ளினமும்
கீழே புல்லினமும்..."

- மகேஷ்குமார்

"நெடுநாளணிந்த வளையொன்றை
கழற்றி வைத்தபின்னும்
அனிச்சையாய் கை வருடி
வெறுமையுணரும் தருணங்களாய்....

.....தாதியானாலும் நானும்
பாதி தாய்தானே?"

- ராஜு ரமேஷ்

"...இரந்துதான் கேட்கின்றோம் இறைகளே
இறந்துபோகும் முன் இரையிடுங்கள்..."

- யாழிசை மணிவண்ணன்

" ...அனுபவங்களும் நினைவுகளும்
மழைத்துளிகளாய் மனசிப்பிக்குள் புதைந்து
அழகோடு மிளிரும் முத்தாக
உருமாறும் முதுமையை
ஏற்றுக்கொள்ளப் பக்குவப்படும்வரை
இதுவும் இரண்டும்கேட்டான் வயதுதான் !

- சுஜா செல்லப்பன்

'அட நானெல்லாம் ஏன் கவிதை எழுதத் தயங்கவேண்டும்'

என்று நினைக்க வைக்கும் சில கவிதைகளோடு

'அட நானெல்லாம் கவிதை எழுதுவதைப்பற்றி நினைத்துக்கூட பார்க்ககூடாது'

என்று எண்ணவைக்கும் பல கவிதைகளையும் கொண்ட சிறப்பான தொகுப்பு.

இந்த மொத்தப் பானைச் சோற்றுக்கு பதமான ஒற்றைப்பருக்கையாய் ஒரு கவிதையை புகைப்படத்தில் பார்க்கலாம். அதிலும் முத்தாய்ப்பாய் அந்த கடைசிச் சொல்..... !






October 7, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக