நிலம் என்னும் நல்லாள்

ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டான் என்று முதன் முறை கேள்விப்படும் ஒருவருக்கு வாழ்வதற்கு வேறு வழிகளா இல்லை என்ற ஒரு துயர ஆயாசம் எழக்கூடும். ஆனால் அந்த சுய பலிக்கு பின்னால் இருக்கின்ற ஆன்மாவை அழுத்தும் வலியையும் அவனுக்கேயான நியாயங்களையும் வேளாண்மை பற்றி எதுவும் அறியாத ஒருவருக்கு மிகத்தெளிவாக புரிய வைக்கின்றது சு.வேணுகோபாலின் "நிலம் என்னும் நல்லாள்"

மதுரைபகுதியை சேர்ந்த விவசாயக்குடும்பத்தில் பிறந்து மாற்றுத்தொழில் செய்யும் பழனிக்குமார் கோயமுத்தூர் பகுதியை சேர்ந்த ராதாவை மணக்கிறான். இரண்டு பிரதேசங்களுக்கும் இடையிலான பழக்கவழக்க வேறுபாடுகளுக்கும் இருவருடைய வாழ்வியல் தெரிவுகளுக்கும் இடையில் அவர்களின் இல்லறமும் இரண்டு குழந்தைகளும் படும் பாடு தான் இந்த குறுநாவலின் கருப்பொருள்.

நாயகனின் பார்வையில் எழுதப்பட்டிருப்பதால் வேளாண்மை தான் நாவலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. பழனிக்குமாரின் தம்பி குமரன் ஒரு முழு நேர விவசாயி. ஒரு செயலின் மீதான அதீத ஆர்வம் அந்த செயலில் உயர்ந்த தேர்ச்சியையும் சிறந்த பெறுபேற்றையும் பெற்றுத்தரும் என்பதற்கு இந்த கதாபாத்திரம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மந்திரத்தால் மாங்கனியை விளைவிப்பது போல இவன் திறமையாலும் கடின உழைப்பாலும் தான் விதைத்ததையெல்லாம் பல மடங்காக அறுவடை செய்து ஆச்சர்யப்படுத்துகிறான். விவசாயத்தின் பல கூறுகளை கதாசிரியர் மிகச்சிறப்பாக விவரித்திருந்தாலும் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல இருப்பது சூரியகாந்தி வேளாண்மை தான். சூரியக்கணவனும் சூரியகாந்தி மனைவியம் கொள்ளும் காதல், அன்பு, காமம், தாய்மை, குழந்தைப்பேறு என்கின்ற ஆத்மார்த்தமான உறவை அழகாக உருவகம் செய்து இருக்கின்றார்.

இன்னுமொரு முக்கியமான உப பாத்திரம் பழனிக்குமாரின் தாய். குறிப்பாக முதிய தாய்மையின் ஏக்கத்தின் வலியும் தாம்பத்யம் கோருகின்ற வழியும் ஒருபோதும் இணையாமல் ஒரே திசையில் செல்லும் இரு சமாந்தரக்கோடுகள் என்பதை பட்டவர்த்தனமாக சொல்கின்ற அந்த வஞ்சப்புகழ்ச்சியான உரையாடல், மனதில் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

வாழ்வின் சுவடுகளான தம்பி, அண்ணன், அக்கா, பெரியப்பா, தாத்தா இன்னும் பலரின் நினைவுகள் எத்தனை தான் ஏக்கத்தை ஏற்படுத்தினாலும், நிகழ்காலத்தின் யதார்த்தத்தை புரிந்து கொள்ள ஒரு மனம் பிறழ்ந்த பெண்ணும் ஒரு நிறைமாத கர்ப்பிணியும் தலைவனில்லாத ஒரு குடும்பமும் நண்பன் மாதவனும் அவனுக்கு உதவுகிறார்கள். ஆனால் இடக்கை இழந்தவளாக வரும் ஒரு பெண் பாத்திரம் தேவையற்ற ஒரு இடைச்செருகலாகவே தோன்றுகின்றது. அச்சில் இரண்டு பக்கங்களையும் என் நேரத்தின் ஒரு பகுதியையும் கதாசிரியர் வீணாக்கி இருக்கவேண்டாம்.

தன்னை வேரோடு பிடுங்கி வந்து இங்கே நிலைக்க வைக்க முயல்கிறாள் தன் மனைவி என்கின்ற புலம்பல் கதையின் 13 அத்தியாயங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் தவறாது இடம் பெறுவது சற்று சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. தவிரவும் காலங்காலமாய் பெண்கள் இதைத்தான் அனுபவிக்கிறார்கள் என்கின்ற நடைமுறையின் நியாயம் ஒரு இடத்தில் கூட பேசப்படவில்லை.(நண்பனின் பேச்சில் ஒரு ஒரே ஒரு இடத்தில் வந்தாலும் அது அழுத்தமாக பதிவு செய்யப்படவில்லை.) கனவுகளில் உழன்று கொண்டிருக்காமல் நிதர்சனத்தை புரிந்து கொண்டு எதிர்காலத்தை திட்டமிட நினைக்கும் ராதா, முற்றிலும் ஒரு கொடுமைக்கார ராட்சசியாக மட்டுமே சித்தரிக்கப்படுவது அபத்தம்.

ஈற்றில் வருகின்ற அந்த வெள்ளாட்டின் பிரசவம் கதாநாயகனை மட்டுமல்ல நம்மையும் ஒரு புரட்டு புரட்டி விடுகின்றது. தனக்கான ஏதோ ஒன்று இங்கும் இருப்பதை அவன் புரிந்து கொள்ள ஆரம்பிப்பதோடு கதை முடிகின்றது.

ஒரு நூலிழை அறுந்தது போல பட்டென்று கதை முடிவது செயற்கையாகத்தோன்றினாலும், ஏற்புடையது தான்.ஒரு மரணமே கூட ஒரு மனிதனுக்கு முடிவாக இருந்து விடுவதில்லை, அவனைச்சார்ந்தோரின் வாழ்வோடு அது பிணைந்து தொடரத்தான் செய்யும். அப்படி இருக்க வாழ்க்கை என்பது எந்த இடத்திலும் ஒரு முடிவை ஏற்படுத்துவதில்லை, பயணித்துக்கொண்டே இருக்கும் என்பதை இந்த முடிவு சொல்வதாகத்தான் நான் இதை அவதானிக்கின்றேன்.

ஒரு சிறந்த திரைப்படமாக எடுக்கபடக்கூடிய அனைத்து தகுதிகளும் கொண்ட கதை இது. பல மொழிகளிலும் மாற்றி வெளியிடவேண்டும். விருதுகளையும் பாராட்டுகளையும் பெறுவதோடு விழிப்புணர்வையும் கூட நிச்சயம் ஏற்படுத்தும்.





November 26, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக