சாவுக்காசு

பிறப்பின் பாடு பொருளாக நிறைதலின் இன்பம் இருப்பது போல இறப்பின் உணர்வுப்பொருளாக எப்போதும் இருப்பது நிலையாமையின் கசப்பு. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அந்த கசப்பை முழுவதுமாக சுமந்தபடி நகர்கின்றது சித்துராஜ் பொன்ராஜின் “சாவுக்காசு”.

பிணம், அமைதி, மனிதர்களின் வருகை மற்றும் விலகல், சடங்குகள், ஆயத்தங்கள், துக்கம், இறந்தவர் சார்ந்த நினைவுகள் என சாவு வீட்டின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி இருக்கின்றது. இறந்துபோன தந்தையின் பிணத்துக்கருகில் இருந்தபடி அவர் சார்ந்த ஞாபகங்களை அசை போடுகிறான் ஒரு மகன்.

ஒரு சாவு வீட்டின் சூழல் என்பது சற்றே அயர்ச்சியைத்தரும். கதையாக எழுதப்பட்டால் தொடர்ந்து படிக்க முடியாது, சலிப்பைத்தரும். ஆனால் சில நுணுக்கமான மொழியாடல்களை பயன்படுத்தி கதையை தொய்வில்லாமல் நகர்த்துகிறார் கதாசிரியர். குளிர் பிரதேசமொன்றில் தொலைதூரம் செல்லும் புகையிரதம் ஒன்று, அவ்வப்போது நிலையங்களில் நிற்கும் போது கிடைக்கும் சுவையான பஜ்ஜியைப்போல அவை கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்கின்றன.

அப்பாவின் லுங்கியால் மறைக்கப்படாத குருவாயூரப்பன் படம், படச்சட்டத்தின் முறுக்குக்கம்பியை விறைப்பாக தூக்கியபடி பொறுமையாக காத்திருக்கும் குருவாயூரப்பன், புகை பிடித்து, தீய்ந்த நாற்றமடிக்கும் வாயோடு உலகக்கதை பேசும் உறவினர், சாமிக்கு சாத்துவதற்கென்று கடைக்காரன் மாலையோடு சேர்த்துத்தந்த உதிரிப்பூக்கள், வெயிலில் களைத்து சுருங்கி விளக்கு வெளிச்சத்தில் மின்னும் கண்கள், மிகப்பெரிய ஆகிருதியோடு இருந்தாலும் தடிமனாக கருதப்படாத விஜயா ஆண்டி இப்படியான சலிக்காத காட்சி விவரணைகளும் சலிக்கத் தொடங்கும் போது, கதை குருவாயூரின் பழைய நினைவுகளுக்கு சென்று விடுவது ஒரு சிறப்பான கதையோட்ட உத்தி என்றே நான் நினைக்கின்றேன்.

இந்த சாவு வீட்டில் ஒரு பாசாங்கான தூக்கம் அனுட்டிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. முதுமையடைந்து உடலால் வாடி "எப்போ வருவாரோ" என்று காலனை அழைத்தபடி காத்திருப்பதெல்லாம் ஒருவர் நினைத்துப்பார்க்கக்கூட விரும்பாத கொடுமையாக இருக்கும் என்பது அதை நேரில் பார்த்தவர்களுக்கு தான் புரியும். அப்படி ஒருவர் இறந்தால் அங்கே துக்கம் பெரிதாக இருக்காது. தானும் விடுதலையடைந்து தன் சுற்றத்தாரையும் விடுதலையை செய்துவிட்டதே அந்த ஆன்மா என்று ஆசுவாசமாகத்தான் இருக்கும். அதை சுயநலம் என்றோ, அசட்டை என்றோ சொல்ல முடியாது.

வரவேற்பறையின் ஓரத்தில் இருந்த சோபாவில் வசதியாக அமர்ந்து கொள்ளும் தான், இரவு உடை அணிந்து மார்புக்கு குறுக்கே துண்டை அணிந்தபடி செயற்கையாக மூக்கை சிந்தும் அம்மா, சமையலறையை ஒட்டிய சுவரில் நின்றபடி மாமாவுடன் தீவிரமாக பேசிக்கொண்டு சாவுக்காசை சேர்க்கும் தங்கை, காரியம் முடிந்தால் கிளம்பி விடலாம் என்று சலித்துக்கொள்ளும் மனைவி செலவை குறைத்து எப்படி காரியத்தை முடிக்கலாம் எனத் திட்டமிடும் உறவினர்கள், கடமைக்காக அல்லது ஒரு முக நாகரீகத்துக்காக தலையைக்காட்டி விட்டுச் செல்லும் நண்பர்கள் என்று பெரும்பாலான எல்லா கதாபாத்திரங்களும் இந்த மரணத்தின் கசப்பை சுற்றியே செல்வது யதார்த்தம் தான்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு முறை தவறிய உறவில் அதற்கான பாதிப்பும் தண்டனையும் எப்போதும் பெண்ணுக்கு மட்டுமே இருக்கின்ற கேவலமான சமூக மனோபாவமும், எரிகிற வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்று அந்த மகன் செய்யத்துணிந்த அவலட்சணமான செயலும் தான் அருவெறுப்பாக இருந்தன. கதை அந்த நிலையில் முடிந்தது இன்னும் எரிச்சலை தந்தது.

ஒரு ஆன்மாவின் விடை பெறுதல் எத்தனை செய்திகளை நம்மிடையே விட்டுச் செல்கின்றது என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் இந்த கதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக