நான் கொலை செய்யும் பெண்கள்

கனகலதாவின் சிறுகதை தொகுப்பு. தலைப்பே கொஞ்சம் திகிலாகத்தான் இருந்த போதிலும் இது ஒன்றும் குற்றவியல் சார்ந்த கதைகளின் தொகுப்பு அல்ல. 90களின் இறுதியிலிருந்து 2000இன் நடுப்பகுதி வரை எழுதப்பட்ட, சிங்கப்பூரை களமாகக் கொண்ட கதைகளின் தொகுப்பு இது. முற்றிலும் “பெண்” பற்றிய கதைகள். ஆனால் ஏன் இந்த தலைப்பு என்பது தான் புரியவில்லை.

இந்த தொகுப்பில் இருக்கும் அத்தனை கதைகளும் பெண்ணியக்கோட்பாட்டுக்கு அப்பால் “பெண்ணை” பேசுகின்றன என்பதே எனக்கு கொண்டாட்டமாக இருந்த ஒரு விஷயம்.

வீட்டில் ஏறக்குறைய வேலைக்காரியாகவும் வெளியில் பணிப்பெண்ணாகவும் மட்டுமே பார்க்கப்படும் ஒரு குடும்பத்தலைவி, தனக்கென்று எந்த அங்கீகாரமும் இல்லையென்பதை உணர்ந்து அயர்ச்சியுறும் கதை “அடையாளம்”. என்னதான் சொல்லுங்கள். எப்படி ஒருவரால் 365 நாட்களும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை ஓய்வின்றி உழைத்துவிட்டு ‘என் குடும்பத்துக்காக தானே செய்கின்றேன்’ என்று மனப்பூர்வமாக சொல்ல முடியும்? எலும்புகளாலும் சதையாலும் ஆனா ஒரு மனித உடலுக்கு அசதி என்ற ஒன்று இருக்காதா என்ன? நம் அம்மாக்களை எத்தனை அசட்டையாக எடுத்துக்கொள்கின்றோம் என்பது பெண்களுக்கே அவர்கள் திருமணத்திற்கு பின்பு தான் புரிகின்றதென்றால், அம்மாவிலிருந்து பாட்டியானவர்களுக்கே புரியவில்லையென்றால் ஆண்களுக்கெங்கே தெரியப்போகிறது?.யதார்த்தமான ஒரு கதை அது.

அப்பாக்களுக்கும் மகள்களுக்குமான அன்பின் பரிமாற்றம் வெளிப்படையானதாக இருப்பதில்லை. வெறுப்பும் அப்படித்தான் என்கின்றது "மழை - அப்பா". அசுத்தம் என்பதால் அப்பாவை வெறுக்கும் ஒரு பெண்ணையும் அன்பை வெளிக்காட்டத்தெரியாத அவள் தந்தையையும் இணைக்கும் மழை நினைவுகளின் கதை.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரின் பொது வெளிகளில் வீட்டுப்பணிப்பெண்களை தீண்டத்தகாதவர்கள் போன்று நடத்தியிருக்கிறார்கள் என்பது சற்றே அதிர்ச்சியாக இருந்தது, ஒரு பணிப்பெண்ணின் வேலையுடன் கூடிய ஒரு விடுமுறை நாளை சொல்லும் "நாளை ஒரு விடுதலை" என்னும் கதை. அந்த முடிவு அபாரம். அவளுக்கான ஒரு பாலியல் ரீதியான தொந்தரவை மிகைப்படுத்தல் இல்லாமல், கொச்சையாக இல்லாமல் இயல்பான நடையில் லாவகமாக இப்படி சொல்லி இருக்கின்றார். ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த நிலையின் தொனி தெறிக்கிறது.

""பிள்ளைங்க தூங்கிட்டாங்களானு பார்க்க வந்தேன்" முதலாளி ஐயாவேதான்.நமக்குந்தான் வேண்டியிருக்கிறதே என்று அன்றைக்கும் தோன்றியது. ஐந்து மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, உடலை இறுகக் குறுக்கிக்கொண்டாள். வியர்த்துக்கொட்டியது. இழுத்துப்போர்த்திக்கொண்டாள்."

பெண் எப்போதும் உணர்வு பூர்வமானவள் தான். ஆணை விட எந்த விஷயத்திலும் ஆழமாய் ஆழ்ந்து போகும் படைப்பு. "வீடு" மற்றும் "அறை" இரண்டுமே தலைப்புக்கேற்றாற்போல அவை சார்ந்த நாயகியின் நினைவுகளையும் உணர்வுகளையும் பதிவு செய்கின்றன, குறிப்பாக சிங்கப்பூரின் களத்தில்.

ஒரு விமானியின் வாழ்க்கையின் கசப்புகளை பேசும் கதை "இதுவரை". என்னை பெரிதாக கவரவில்லை.

ஒரு சிங்கப்பூர் சீன வாடகை வண்டி ஓட்டுனருக்கு இந்திய பயணிக்கும் இடையிலான ஒரு உரையாடல் "பயணம்". சிங்கப்பூரின் வாழ்வியலை பிரதிபலிக்கின்றது என்பதைத்தவிர இந்தக்கதையில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், கடைசியில் இருவருக்கும் இடையிலான வண்டி வாடகை கணக்கு வழக்கை இன்னமும் நான் கூட்டிக் கழித்து தீர்த்து சரிபார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்பது சுவாரஸ்யமான விஷயம் தான்.

எதிர்காலப் பயணம் சார்ந்த பல கதைகளில், உணவு மாத்திரைகள், நீர் மாத்திரைகள், பிராணவாயு உபகரணங்கள் எல்லாம் வரும். முதன் முறையாக மொழியின் அழிவைப்பற்றிய ஒரு விழிப்புணர்வை "தமிழுக்கு அமுதென்று பெயர்" என்னும் சிறுகதை ஏற்படுத்தியது. தன் பெயரின் முதல் எழுத்தை கண்ணாடியின் நீர் படலத்தில் எழுதிப்பார்க்கின்ற அந்த காட்சி உருக்கமாக மட்டுமல்ல அதிர்ச்சியாகவும் இருந்தது.

“முகாந்திரம்” என்கின்ற ஒரு கதை ஏனோ குழப்பமாக இருந்தது. பல வருட உயிர்த்தோழி ஒருத்தியும் அவள் குடும்பத்தினரும் சில குண்டு வெடிப்புகளை மனதில் வைத்து மத துவேஷம் காட்டுவதாக ஒரு புறமும், அந்த தோழி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை தேடுவதாக மறுபுறமுமாக நகரும் இந்தக் கதையின் இரு தடங்களுமே தெளிவாக இல்லை.
அதே போல "படு களம்" கதையும் இது என்ன சொல்ல வருகின்றது என்பது எனக்கு புரியவில்லை.

இந்த சிறுகதை தொகுப்பை அதன் இலக்கிய அமைப்புக்கு அப்பால் முக்கியமானதென்று நான் கருதுகின்றேன்.

பெண்ணின் மனநிலையை, பெண்ணின் பார்வையில் ஆண்கள் எழுதும் பெரும்பாலான கதைகள், பெண் சுதந்திரம் பற்றியதாக மட்டுமே இருக்கின்றன. அந்த சுதந்திரம் தான் பெண்ணியமாக வரையறுக்கவும் படுகின்றது. அதற்கும் அப்பால் அவளுடைய தனிமைக்குள் இருக்கும் அந்தரங்கங்களை அவர்களால் எழுத முடிவதில்லை. ஏனென்றால் அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடியவற்றை வெறும் அனுமானத்தால் சொல்லிவிட முடியாது.

பெரும்பாலான இடங்களில் என்னால் என்னை, என் எண்ண ஓட்டத்தை பொருத்திக்கொள்ள முடிந்தது. இந்த புத்தகத்தை படிக்கும் எல்லா பெண்களுக்கும் இந்த உணர்வு நிச்சயம் ஏற்படும்.

ஆனால் "சிங்கப்பூர் பொன் விழா சிறுகதைகள்" தொகுப்பில் நான் படித்த 15 அல்லது 20 சிறுகதைகளில் எனக்கு மிகப்பிடித்திருந்த "அலிசா” அளவுக்கு இந்த சிறுகதைகள் என்னை கவரவில்லை.

கனகலதாவின் இந்த சிறுகதை தொகுப்பை பரிந்துரைத்த நண்பர் Sivanantham Neelakandan இற்கு நன்றி !



December 23, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக