அணுவையும்
அழிக்க மனம் துணியா
என் அன்பான அபூர்வமான
அப்பா சொன்ன ஆத்திசூடி
"அன்பே வாழ்வு
ஆபரணம் நேர்மை
இயன்றது உதவு
ஈவு இரக்கம் உடைமை
உண்மை அறிவு
ஊழல் மடமை
எண்ணம் உயர்வு
ஏழ்மையிலும் செம்மை
ஐவிரலும் ஒன்று
ஒழுக்கம் உயர்வு
ஓதுதல் கடமை
ஔடதம் செலவு
அஃதே இம்மை"
“நாளை இன்னொரு ஞாயிற்றுக்கிழமை. காலையில் எழுந்து பார்த்தால் அப்பா வீட்டில் இருப்பாரா?இல்லையென்றால் அறநெறி பாடசாலை முடிந்து வரும் போது வீட்டில் இருப்பாரா? எப்படியோ வீரகேசரி வரும். மீன்கறி இருக்கும்.சாப்பிட்டு விட்டு அப்பாவுடன் சேர்ந்து வீரகேசரியை வரி வரியாய் மேய்ந்து விட்டு சில வேளை தூங்கிவிட்டு பின்பு ஒரு நடை எங்காவது போக வேண்டும்.ம்ம்ம். ஆற்றுக்கு? கோயிலுக்கு? அத்தை வீட்டுக்கு? இல்லை வேறு எங்காவதா? சரி பார்க்கலாம். மாலை கொஞ்சம் சோஸ் தொட்ட கட்லட்டுகள் அல்லது ரோல்ஸோடு தேனீர். மேலும் கொஞ்சம் பேச்சும் ஓய்வும். இரவுணவு. தூக்கம்.அவ்வளவு தான்.திங்கள் காலையில் நான் தூங்கி எழுகையில் அப்பா போயிருப்பார். “
என்னுடைய சிறு வயது நாட்குறிப்பேடுகளில் எப்போதாவது நான் ஞாயிற்றுக்கிழமைகளை பற்றி எழுதி இருந்தால் அது இப்படித்தான் இருந்திருக்கும்.
என்னுடைய பள்ளித்தோழி ஒருத்திக்கு அவள் அப்பா தான் எல்லாமே. அவளுடைய அப்பா அவளுக்காக பார்த்து பார்த்து செய்வதையெல்லாம் எங்கள் அப்பா விடுமுறையில் வரும் ஒரு நாளிலேயே செய்யும் போது, அவள் மீது பொறாமையாகவும் ஏக்கமாகவும் இருக்கும்.
ஆவலோடும் எதிர்பார்ப்போடும் முடியும் சனிக்கிழமைகளும் ஏக்கத்தோடும் சோகத்தோடும் முடியும் ஞாயிறுகளுமான அந்த காலத்தில் அப்பாவுடைய அலைச்சலும் களைப்பும் புரியவே இல்லை.
ஆனால் இப்போது யோசித்துப்பார்க்கையில் 6 நாட்கள் வேலை செய்துவிட்டு, இரவோடு இரவாக புறப்பட்டு, கால் நீட்டக்கூட இடமில்லாத இறுக்கமான பேருந்துகளில் கரையோரப்பிரதேசத்தில் இருந்து மலைப்பிரதேசத்துக்கு அதிலும் சீரற்ற பாதை வழியே ஊருக்கு வந்து சேர்வதென்பதை நினைக்கையிலேயே ஆயாசமாக இருக்கின்றது. வந்திருக்கும் அந்த ஒரு நாளும் வெறுமனே வீட்டில் ஓய்வாக இருக்காமல் எங்களை வகுப்புகளுக்கும் விளையாட்டுப்பூங்காக்களுக்கும் அங்கும் இங்கும் என்று அழைத்துச் சென்றுவிட்டு பின்பு மறுநாள் அதிகாலையிலேயே மீண்டும் கொழும்புக்கு திரும்புவது என்பதை யோசித்துப்பார்க்கவே மலைப்பாகத்தான் இருக்கின்றது.
ஆனால் அப்பா அதை அசராமல் செய்தார். ஏறக்குறைய 20 வருடங்கள் அப்பா எங்களுக்காக இப்படித்தான் அலைந்தார் என்பதை நினைக்கையில் அப்பாவையும் அவர் மனதில் எங்களுக்கென்றிருந்த ஆழமான அன்பையும் புரிந்துகொள்ளாமலே போய் விட்டேனோ என்று குற்ற உணர்ச்சியாக இருக்கின்றது. ஆனால் ஆச்சர்யமாக இல்லை.
இதோ இப்போது வரை ஏறக்குறைய 50 வருடங்களாய் அப்பா இன்னமும் உழைத்துக்கொண்டு தான் இருக்கின்றார்.
பிழைக்க வழி இன்றி பக்கவாதத்தால் படுத்து விட்ட தந்தையைத் தவிர வேறு ஆண் துணை இல்லாததால் மிகச்சிறுவயதிலேயே உழைக்க ஆரம்பித்தார். இரவு பகலாக கணக்கெழுதி தங்கைகள் ஐவரை படிக்கவைத்து வீட்டுச்செலவையும் சமாளித்தார்.அப்பாவுடைய வாழ்வில் நல்லதென்று நடந்த ஒரே விஷயம் அவருடைய திருமணம் தான். அம்மா தான் அவருடைய ஒரே வரம், சக்தி, துணை எல்லாமே.
எத்தனையோ இன்னல்களையும் சில துயரங்களையும் ஒரு துரோகத்தையும் தாங்கிக்கொண்டு அவரால் தங்கைகளை மணமுடித்தும் கொடுக்க முடிந்ததற்கு அவருடைய ஆத்மபலம் தான் காரணம்.
இயங்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றுபவர்கள் பெண்ணியத்தை பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் அவற்றையெல்லாம் படிக்காமலேயே என் அப்பாதான் வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கும் ஒரு மிகச்சிறந்த பெண்ணியவாதி.
சில நேரங்களில் அப்பா பெற்றது வரமா சாபமா என்று எனக்கு ஒரு ஐயம் தோன்றும். அவருடைய குடும்ப சுமையை பகிர்ந்து கொள்ள யாருமே இருக்கவில்லை.பெற்றதும் இணையாய் பெற்றுக்கொண்டதும் தான் இயற்கையின் நியதி என்றால், பிறந்ததும் உடன் பிறந்ததும் கூட பெண்களாகவே அமைவதெல்லாம் கர்மபலனாகத்தான் இருக்கவேண்டும்.
ஆனால் அதற்கெல்லாம் அப்பா சோர்ந்தோ, புலம்பியோ நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு ஏன்? வாழ்க்கையில் ஒரு போதும் ஆணாதிக்கமென்ற ஒன்றை அப்பாவிடம் நான் உணர்ந்ததே இல்லை. தன் வாழ்க்கையின் அத்தனை பெண்கள் மீதும் நிர்மலமாய் அன்பு செலுத்துவார். ஆண் என்று வெட்டி வீராப்போடு முறுக்கிக்கொண்டு நிற்காமல் துணி துவைப்பதிலிருந்து, தண்ணீர் இறைப்பது, குடம் குடமாய் தூக்கி வருவது, வீடு பெருக்குவது துடைப்பது, பாடசாலை சீருடை தேய்த்து தருவது என்று தன்னால் முடிந்த எல்லாவற்றையும் எங்களுக்காக அத்தனை அன்போடும் அர்ப்பணிப்போடு செய்திருக்கிறார். என்ன இப்படி வேலை செய்கிறாய் என்று யாரேனும் கேட்டால் கூட பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே போய்விடுவார். சூழலின் அர்த்தமற்ற தூண்டல்களுக்கு துலங்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்வது எப்படி என்று அப்பாவிடம் தான் கற்கவேண்டும். அப்பாவுடன் இருந்தவரை வாழ்க்கை மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் குறையே இல்லாமல் இருந்தது.
என்னை பொருத்தவரை அப்பா ஒரு தன்னில் ஒரு மகான். ஒரே நேரத்தில் கிருகஸ்தனாகவும் வானப்பிரஸ்தனாகவும் வாழ அவர்களால் தானே முடியும்?ஆனால் உண்மையில் அவர் தன்னுடைய சின்னஞ்சிறு வயதிலேயே தனக்கென்று ஒரு மாறாத கொள்கை பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றேன். அந்த பிடிப்பு தான் வாழ்க்கையில் அவரை சோதித்த அத்தனை எதிர்மறையான தாக்குதல்களையும் சந்திக்கவும் சமாளிக்கவும் அவருக்கு சக்தியை அளித்திருக்கவேண்டும்.
வெளியில் எல்லோரும் அவரை "பாவம். அப்புராணி மனுஷன்" என்று தான் சொல்வார்கள். அமைதியிலும் அஹிம்சையிலும் அப்பா மகாத்மா காந்தியின் ஒரு அம்சம். ஆனால் வீட்டிற்குள்ளோ அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் அறச்சீற்றம் கொள்ளும் மகாகவி பாரதி. நேர்மையே குறிக்கோளாகக்கொண்டு தன் கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து பொறுமையும் சகிப்புத்தன்மையும் கலப்படமில்லாது கொண்ட அரிச்சந்திரனின் வாரிசு. மதம் சார்ந்த ஞானத்தில் விவேகானந்தரின் சீடர். (இந்த நால்வரையும் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்)
அப்பா, தன் வாழ்நாள் முழுதும் நேர்மையாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மிரண்டால் காடே கொள்ளாத சாதுவான என் அப்பா, அவ்வப்போது பொறுமையை இழந்தாலும் தன்னை சார்ந்தோருக்கு அன்பையும் சகிப்புத்தன்மையையும் வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றார்.
மனசாட்சியின் உறுத்தல் சிறிதும் இன்றி மனதிலும் மடியிலும் கனமில்லாத நிம்மதியான உணர்வு வாய்க்கவேண்டுமென்றால் அதற்கான விலை மிகவும் அதிகம் தான். எல்லோராலும் அதை கொடுத்துவிட முடியாது. இதற்காக அப்பா தன் இளமைக்கால சந்தோஷங்கள், சின்னச்சின்ன ஆசைகள், கனவுகள், கல்வி என்று நிறைய நிறைய நிறைய இழந்திருக்க வேண்டும்.
அப்பா இல்லாமல் அல்லது ஒழுங்கான அப்பா இல்லாமல் வாழ்க்கையில் தடம் புரண்டு போன பலரை, மீள முடியாத சிக்கல்களில் மாட்டிக்கொண்ட பலரை, ஏன் வாழ்க்கையெல்லாம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் பலரை பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலரை பார்த்தும் இருக்கின்றேன்.
எங்கள் அப்பா எந்த அசையும்/அசையா சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை தான். ஆனால் அதையெல்லாம் விட விலை மதிக்கவே முடியாத நல்ல கர்மாவை அதிகம் அதிகமாக சம்பாதித்து வைத்திருக்கின்றார். அந்த வகையில் அவரைவிட இந்த உலகில் வேறு யாருமே பணக்காரர் இல்லை. அப்பாவின் உயிரிலிருந்து உருவாகும் பாக்கியம் பெற்றதால் அவர் விதைத்த அத்தனை நல்வினைகளையும் எத்தனையோ வழிகளில் நாங்கள் தான் அறுவடை செய்கின்றோம்.
நானும் என் தங்கைகளும் தான் எத்தனை அதிர்ஷ்டக்காரிகள் ! Born with silver spoon என்பார்களே ! ஒரு அப்பழுக்கில்லாத தேவனின் தேவதைக்குமாரிகளாய் தங்கக்கரண்டியோடு பிறந்திருக்கின்றோம்.
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ப்பா !
(கடமைகளும் முன்னுரிமைகளும் மாறிவிட்டதால் மிகவும் பிந்திபோய்விட்டது அப்பா ! தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள், இதற்கும் எத்தனையோ முறை தெரிந்தும் தெரியாமலும் கோபத்திலும் எரிச்சலுடனும் உங்களை காயப்படுத்தியமைக்கும். உங்கள் நிழலை விட்டு வந்த பின்பு தான் உங்கள் அருமை தெரிகின்றது)
December 31, 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக