விலங்கு வேட்டையில் கூட
விலக்களிக்கப்பட்டிருக்கும்
பிரபஞ்ச பாதியின் ஒரு
பிரதிநிதியாய் அவதரித்தேன்.
வண்ணக்கனவுகளுடன்
வண்ணத்துப்பூச்சியாய் வளர்ந்தேன்.
என் சுயத்தை
பணயம் வைத்து
கல்விக்கும் கலவிக்கும்
கலைக்குமிடையே
யார் எவரோ
நடத்திய யுத்தங்களில்
அந்தக்கனவுகள் தாம்
தோற்றுப்போயின.
தேவைக்கும் தெரிவுக்குமாய்
என் சகபாடிகள்
போராடிக்கொண்டிருக்க
இல்லாமல் போன அவ்விரண்டுக்குமாய்
அல்லாடக்கூட நேரமிருக்கவில்லை எனக்கு.
விருப்பங்கள் எரிக்கப்பட்ட
சாம்பலை கூட்டி அள்ளி,
வெறுப்பின் முடிவிலியில் நீருற்றி,
விரக்தியின் சாந்து கலந்து,
நாருறு வேராய் ஒரு
அத்திவாரம் அமைத்து,
மாய அகழிகளோடும்
போலி காவலரோடும்
என்னைச் சுற்றி ஒரு
நெருப்புமாளிகை அமைத்து,
இரும்பதிகார பிம்பத்தில்
கோலோச்சினேன்.
அந்த கோல்
செம்மையாவதும்
கொடுமையாவதும்
என்னிச்சை செயல்.
தம் சுயலாபத்திற்காய்
என்னை பலியிட்டவர்கள்
அத்தனை பேரையும்
எல்லாவற்றையும்
துரத்தி பழி வாங்கி
விரட்டி துவம்சம் செய்தேன்.
தற்காப்பின் சாக்கில்
சுற்றியிருந்த
ஒட்டுண்ணிகளுக்கு
இருக்கும் போது வாரி இறைத்துவிட்டு
இறந்த பின்பு தேடி இரக்க விட்டேன்.
அலங்காரமேதுமற்ற இந்த
வெளிப்பூச்சுக்கு அப்பால்
எனக்கே எனக்கான
அந்தரங்கமான தருணங்கள்,
கசக்கும் நினைவுகள்,
நிர்ணயித்துப்பெற்ற மரணத்தின்
அத்தனை ரகசியங்களோடும்
என் சரித்திரம்
ஆழப்புதைந்து போனதும்,
கானலாய் கட்டப்பட்ட கோட்டை
தானே சரிந்தும் போனது.
மக்களால் நான் !
மக்களுக்காக நான் !
ஜெ.ஜெயலலிதா என்னும் நான் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக