"காலச்சிறகு" - நூல் அறிமுகம்

உடல் காக்கும் உணவாகவும், உயிர் தாங்கும் மூச்சாகவும், ஆற்றுப்படுத்தும் மருந்தாகவும் வாசிப்பை நேசிக்கும் ஆத்மார்த்தமான வாசகர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

என்னுடைய சிறுவயதில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, கல்கி, சாண்டில்யன் போன்றோரின் இலக்கியத்தை அறிமுகப்படுத்தி வாசிப்பை அமிழ்தமாய் ஊட்டி வளர்த்தவர் இலங்கை எழுத்தாளர் அமரர் கே.கணேஷ் அவர்கள். தாத்தா எனக்கு இரவல் தந்த சில புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் அல்ல. பல்வேறு மாத மற்றும் வார இதழ்களில் வெளிவந்த குறிப்பிட்ட நாவலின் தொடர் அத்தியாயங்களை கத்தரித்து சேகரித்து கட்டப்பப்பட்ட தொகுப்புகளாக இருக்கும். தன்னுடைய சிறுவயதில் அந்த சஞ்சிகைகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கிக்காத்திருந்து, கையில் கிடைத்ததும் முதல் வேலையாக அவற்றை படித்து முடித்து விட்டுத்தான் அடுத்த வேலையை பார்ப்பதாகவும் அதில் ஒரு அலாதியான சுவாரஸ்யம் இருப்பதாகவும் சொல்லுவார்.

அந்த 'அலாதியான சுவாரஸ்யம்' என்பதன் உண்மையான தாற்பரியம் என்ன வென்பது ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் கழித்து சிங்கப்பூருக்கு வந்த பின்பு "தி சிராங்கூன் டைம்ஸ்" படிக்க ஆரம்பித்ததும் தான் புரிகின்றது.

பொதுவாக ஒரு புத்தகத்துக்கும் சஞ்சிகைக்கும் இடையிலான ஜனரஞ்சகத்தின் அளவுகோலில் சஞ்சிகைகள் ஒரு படி மேலே நிற்பதற்கான காரணம், அவற்றின் பன்முகத்தன்மை. கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நகைச்சுவை போன்ற படைப்பின் வடிவங்களில் மட்டுமல்லாது, படைப்பாளர்களின் திறன், மொழி, நடை போன்றவற்றிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆக்கத்தின் கருப்பொருளிலும் கூட இருக்கின்ற வித்தியாசத்தினால் தான் புத்தகங்களை விட சஞ்சிகைகள் பெருமளவில் மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன.

சிங்கப்பூரில் தமிழின் கலை, இலக்கிய, சமூக, நாகரிக, அறிவியல் தளங்களின் அத்தாட்சியாகவும், பிரதிநிதியாகவும் திகழ்கின்ற "தி சிராங்கூன் டைம்ஸ்" மாத இதழில், கடந்த இரண்டு ஆண்டுகளின் 25 சஞ்சிகைகளில் பிரசுரமாகிய குறிப்பிட்ட சில ஆக்கங்கள் எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளிவருகின்றது "காலச்சிறகு" நூல்.

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், சிறுபத்திகள், இலக்கிய விமர்சனங்கள், பயணக்கட்டுரைகள் என பல ஆக்கங்கள் இந்த ணுஉலை அலங்கரிக்கின்றன.

சிங்கப்பூரில் இன்று வரையான தமிழ் பாரம்பரியத்தின் வரலாறு மற்றும் படிமுறை வளர்ச்சி குறித்த ஒரு ஒட்டு மொத்த சித்திரத்தை தரும் வகையில் மிகக்கவனமாகவும் நேர்த்தியாகவும் ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய உலகை பிரதிநிதித்துவப்படுவதில் "காலச்சிறகு" ஒரு முக்கியமான நூல் என்றே நான் கருதுகின்றேன்.

இன்றைய தொழில்நுட்ப வாழ்வின் நிலையாமையையும், பாசாங்கையும், மிச்சம் நீதி இருக்கின்ற அழகியலையும் பிரதிபலிக்கும் சுமார் 10 கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் "நம்பிக்கையோடு கூடிய முதுமையின் நிராகரிக்கப்பட்ட மொழியினைக் கடந்து செல்வது" என்று முடியும் கவிதையை நீங்கள் படித்தே ஆக வேண்டும்.

சிங்கப்பூரில் பெண்ணிய எழுத்து குறித்து இரண்டு பெண் எழுத்தாளர்கள் எழுதிய ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்தை சொல்லும் இரண்டு கட்டுரைகள், வளர்ந்து வரும் சிங்கையின் மாணவ பெண் எழுத்தாளர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் இருக்கின்றன.

சிங்கப்பூரின் தமிழின வரலாற்றில் தவிர்க்க முடியாத மாமனிதராக விளங்கும் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல் பற்றிய மிக முக்கியமான கட்டுரை ஒன்றும் இடம் பெற்றிருக்கின்றது.

'பிறழ் சித்திரம்' என்னும் கட்டுரையாளர் விமர்சனங்கள் குறித்து முன் வைக்கின்ற கருத்துக்கள் மிகவும் ஆக்கபூர்வமானவை. ஆனாலும் தன் தோழி சொன்னதாக ஒரு விஷயம் சொல்லி இருக்கின்றார், 'கதைகளை கற்பனை செய்யக்கூட பயமாக இருக்கின்றது.நான் எதையாவது எழுதப்போக ஏற்கனவே இவையெல்லாம் சினிமாவில் வந்து விட்டனவே என்று அவர் கனவில் வந்து மிரட்டினாலும் மிரட்டுவார்' என்கின்ற அந்த தோழியின் கருத்தை படித்து பக்கென்று சிரித்து விட்டேன். ஆனால் உண்மையில் நாம் யோசிக்கவும் விவாதிக்கவும் வேண்டிய ஒரு நிதர்சனம் தான் இது.

'இன்னும் பேசுவதற்கு' கட்டுரையின் நாயகன் கலிமுல்லாவை ஒருமுறையேனும் சந்தித்து விடவேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றது. ஏற்பாடு செய்து தருமாறு கட்டுரையாளரிடம் விண்ணப்பித்துக் கொள்கின்றேன்.

"சிங்கப்பூரிய உணர்வு என்றால் என்ன?" என்னும் கேள்விக்கு பாரதியின் வரிகளில் ஒற்றை வாக்கியத்தில் தரப்பட்டிருக்கும் விளக்கத்தை விட மிகக்கச்சிதமான துல்லியமான விளக்கம் வேறொன்று இருக்குமா எனத்தெரியவில்லை.

பெண் கண்டுபிடிப்பாளர்கள் யாரேனும் இருக்கின்றார்களா என்பது சற்றே ஆச்சர்யமான மற்றும் ஆயாசமான தேடல் தான். அதை செய்து முடித்து பதிவும் செய்திருக்கும் கட்டுரையாளருக்கு மிகுந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

என்னை சுண்டியிழுத்த இரண்டு சிறுகதைகளுக்குமான ஒரே கருப்பொருள் என்னவோ நல்லிணக்கம் தான். அனால் அவற்றுள் ஒன்று ஹாஸ்ய ரஸத்திலும் மற்றயது கருணா ரசத்தில் இருந்தது தான் சுவையே.

சிங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு அருகிலுள்ள நாடுகளுக்கான சுற்றுலாக்களை எளிதாக சாத்தியப்படுத்தி இருக்கின்றது. அவ்வாறு திட்டமிடுபவர்களுக்கு "காலச்சிறகின்" பயணக்கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவை.

சிங்கையின் மூத்த படைப்பாளி ஒருவருடனான ஒரு நேர்காணல் இந்நூலாய் அணி செய்கின்றது. ஒரு முதியவரின் வானப்பிரஸ்த நிலையை பட்டவர்த்தனமாக பிரதிபலிக்கும் பேட்டியாக இது இருந்த போதிலும் "வந்தேறிகள் என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பார்க்கின்றீர்கள்?" என்னும் கேள்விக்கு அவர் காட்டி இருக்கும் மேற்கோளானது, பலருக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும்.

கடந்த இரண்டு வருடங்களில் இயற்கை எய்திய தமிழ் எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக் குறிப்புகள் இந்நூலை நிறைவு செய்கின்றன.. இலக்கிய வாசகியாக, தமிழ் எழுத்தாளர்கள் சிலர், இப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆகிறார்கள் என்பது மிகவும் துரதிஷ்டவசமானது.

இப்படி பன்முகத்தன்மையுடனும், நேர்த்தியுடனும் எழுத்தாளர் ஷாநவாஸால் தொகுக்கப்பட்டிருக்கும் "காலச்சிறகு", சிங்கையின் தமிழ் இலக்கியம் குறித்து ஆர்வமுள்ள எவருக்கும் நாள் விருந்தாகவும், படைப்பாளிகளுக்கு வாசகர் மத்தியில் நாள் அறிமுகமாகவும் இருக்கின்றது..

பள்ளி, கல்லூரி சஞ்சிகைகளுக்கு அப்பால், முதன் முறை ஒரு ஜனரஞ்சக இதழில் என்னுடைய கட்டுரையை பிரசுரித்த "தி சிராங்கூன் டைம்ஸ்" இதழின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பான "காலச்சிறகு" நூலை அறிமுகப்படுத்த வேண்டிய தார்மீகக் கடப்பாடு எனக்கிருப்பதாக நான் கருதுவதால், அதை செய்வதில் பெருமிதத்தோடு பேருவகையும் அடைகின்றேன்.

வாய்ப்பளித்த "தி சிராங்கூன் டைம்ஸ்" ஆசிரியர் குழுவுக்கும் வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக