இயற்கையின் தராசில் ஒருபுறம் ஆறறிவு மிருகங்கள் பேராசையின் முழு உருவாய் நிற்கின்றன. மறுபுறம் சிற்றறிவோடு அடுத்ததாய் அன்பும் கொண்ட விலங்குகளும், எப்போதும் பயனைத்தவிர தீங்கையே தந்திராத தாவரங்களும் நிற்கின்றன.
இவ்விரண்டு வகைக்கும் இடையிலான தக்கன பிழைக்கும் போட்டியில் ஏறியும் இறங்கியும் இறுதியில் பேராசையின் புறம் வீழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் உருக்குலைந்து கொண்டே இருக்கின்றது இயற்கை.
இன்று, பணம் படைத்தோரிடையே நிலவும் போட்டியும் பேராசையும், பணம் இல்லாதவரிடையே நிலவும் அறியாமையும் அடிமைத்தனமும் எப்போதும் எந்த விதத்திலும் எவருக்கும் பயன் தரப்போவதில்லை என்கின்ற இந்த யதார்த்தத்தை சொல்லும் புனைவு லக்ஷ்மி சரவணகுமாரின் "கானகன்".
கானகத்தையே வாழ்விடமாகவும் வாழ்வாகவும் கொண்ட மூன்று வனவாசிகளுக்கிடையில், வெற்றுக்கண்களுக்கும் ஊன மனதுக்கும் சட்டென்று புலப்படாது ஆத்மார்த்தமாக இழைந்து செல்கின்ற அன்பின் பிணைப்பால் உருவாகி இருக்கின்ற கதை இது.
இயற்கையை உணர்ந்து கொள்ளும் மிகக்கூர்மையான சக்தி மனிதர்களை விட மிருகங்களுக்கு உண்டென்பதை நான் முதன் முறை அறிந்தது சுனாமியின் போதான செய்திகள் வழியாகத்தான். ஆனால் மிகக்கொடூரமானவையாகக் கருதப்படும் மிருகங்களுக்கும் கூட தன் இனத்தின் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்கான போராட்ட குணமும், அதில் வெற்றி காண்பதற்கான சாமர்த்தியமும் உண்டு என்பதும் அவை கூட சக உயிர்களிடம் அன்பு செலுத்தக்கூடியவை என்பதும் எனக்கு புதிய தகவல். “ஓநாய் குலச்சின்னம்” நாவலுக்குப் பின்பு, காடும் காட்டுவாசிகளும் தொடர்புடைய இயற்கையிலேயே ஊர்ந்து செல்லும் ஒரு கதையை படித்ததில் மிகுந்த திருப்தி.
காடுகளுக்கென்று உயிர்/ஆன்மா இருப்பதைப் பற்றியும் இந்திரா சௌந்தர்ராஜனின் பல நாவல்களில் ஏற்கனவே படித்திருக்கின்றேன். ஆனால் அவற்றில் எப்போதும் இருக்கின்ற ஆன்மீகம் நெய்யப்பட்டிருக்கும் அமானுஷ்யத்தன்மை இல்லாமல் மிக இயல்பான கதையோட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதால் காட்டை ஒரு கதாபாத்திரமாக மட்டும் நினைக்காமல் அதோடு உணர்வு பூர்வமாக ஒன்றி விடவும் முடிகின்றது.
இந்த நாவல் சொல்வது போல, ஆதியின் தோன்றிய மனிதனின் வாழ்வை, இயற்கையோடு இயைந்த, மன அழுத்தங்களோ இயந்திரத்தனமான இடை விடாத ஓட்டமோ இல்லாத அமைதியான வாழ்வை இப்போது ஏன் இழந்து விட்டோம்?
ஐம்பூதங்களின் அசைவை உணர்ந்து, அவற்றின் குறைகளை தீர்த்து, அவற்றின் தேவைகளோடு தம் தேவைகளை பகிர்ந்து, மனப்பூர்வமாக ஆராதிக்கும் வனவாசிகளின் வாழ்க்கை தான் எத்தனை அர்த்தச்செறிவுள்ளது !
பசிக்கும் போது உணவு, குடிக்க நீர், ஆயுள் அதுவாக முடியும் வரை சுவாசிக்க சுத்தமான காற்று, இன்ப துன்பங்களை பகிர ஏற்றத் தாழ்வில்லாத சகபாடிகள் இருக்கின்ற வாழ்க்கை எந்த இடத்தில் இருந்தாலும் நிம்மதியானது தான்.
நாகரிகம் என்கின்ற பெயரில் உடல் சுகமும் இல்லாமல், மனச்சுகமும் இல்லாமல் பணம், புகழ், கௌரவத்தை தேடி ஓயாமல் ஓடி மாயையான வாழ்வு வாழும் நாம் காட்டு மிராண்டி என்று கிண்டல் செய்வது எத்தனை அபத்தமானது?
நாவலில் வருகின்ற அகமலை, மொக்க மலை காடுகள், பளியர்களின் குடி, அன்சாரியின் வசிப்பிடம், தங்கப்பனின் குடிசைப்பகுதி, ஜமீந்தாரின் தங்குமிடம் இவற்றின் நில அமைப்பை என்னால் என் மனக்கண்ணில் காட்சிப்படுத்திக்கொள்ளவோ, உருவகப்படுத்திக்கொள்ளவோ ஏனோ முடியவில்லை.(பொதுவாக இப்படி ஆவதில்லை) இதற்கு நாவலை மீண்டும் படிக்க வேண்டுமா, இல்லை காட்டின் வழி ஒரு சுற்றுப்பயணம் செய்ய வேண்டுமா எனத் தெரியவில்லை.
சுமார் ஐந்து பெண் பாத்திரங்கள். இவர்கள் வருகின்ற 90% ஆன காட்சிகள் காமம் சார்ந்தவை. ஒரு ஒட்டு மொத்த சித்திரமாகப் பார்க்கையில் இந்த நாவலில் (அல்லது காட்டு வாழ்க்கையில்) பெண்களின் தேவை வெறும் காமக்கிழத்திகளாக இருத்தல் மட்டுமே என்கின்ற பிம்பமே ஏற்படுகின்றது. அதிலும் தங்கப்பன் எவ்வளவு கவர்ச்சியான 'ஆண்மையான' வேட்டைக்காரன் என்பதை காட்டுவதற்காக மட்டுமே கதையில் வருகின்ற சுப்பு ஒரு தேவையற்ற சேர்க்கை. ஒருவேளை, நாகரிகமான வாழ்வைப்போல் “ஒருவனுக்கு ஒருத்தி” என்கின்ற நடைமுறை இயற்கையான வாழ்வில் இல்லை என்பதை பிரதிபலிக்கத்தான் இந்த சித்தரிப்பு என்றால் அது நிகழவில்லை.
தங்கப்பனின் முடிவு கூட செயற்கையான சினிமா பாணி முடிவாகவே இருக்கின்றது. ஏன் அவன் திருந்தாமலே இறந்திருக்கலாமே? சற்று இயல்பாக இருந்திருக்கும்.
காடும், புலிகளும், யானைகளும், சடையனும், வாசியும், பளிச்சியும் தான் இயற்கையின் ஜீவ நாடிகள். அவற்றை அழிக்க முயற்சிக்கும் நம் வாழ்வையும் சேர்த்து இயக்கும் மகா சக்தி.
இந்த கதை வெறுமனே இயற்கை மீதான மனிதனின் அத்துமீறலையும் ஆக்கிரமிப்பையும் சாடும் செய்தியல்ல. அல்லது தாயைக் கொன்றவனை கொன்று வெஞ்சினம் தீர்த்துக்கொண்ட புலிக்குட்டியின் சரித்திரம் மட்டுமே அல்ல.
எத்தனை தான் மனிதன் தன் இச்சைப்படி இயற்கையை மாற்ற முயற்சித்தாலும் அதன் இருபுறத்தையும் சமச்சீராக இந்த பிரபஞ்சம் வைத்துக்கொண்டே இருக்கும்.இங்கு ஒரு வரவென்றால் அங்கும் ஒரு வரவு. அந்தப்புறம் ஒரு இழப்பென்றால் இந்தப்புறமும் நாம் ஒன்றை இழந்து தான் ஆகவேண்டும். இயற்கையின் இந்த நியதிக்கு எதுவும் விலக்கல்ல என்பதை நிறுவி இருக்கும் ஒரு சாட்சி !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக