சொல்,சொல்லாத சொல்

சில மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூரில், சொல்வளக்கையேடு ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். ஆங்கில சொற்களுக்கு இணையான சிங்கப்பூர் சூழல் சார்ந்த தமிழ் சொற்களைக் கொண்ட ஒரு கையேடு அது, என்று நண்பர்களின் பதிவுகளில் தான் பார்த்தேன்.

பொதுவாக ‘சரி, ஒரு அகராதி போன்ற ஒன்றாயிருக்கும்’ என்று நினைத்து கடந்து போன என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கு அந்த நூலின் உண்மையான பயனை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது, கடந்த சனிக்கிழமை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் தலைப்பில் இளமைத்தமிழ்.காம் இன் ஏற்பாட்டில் நிகழ்ந்த “சொல்,சொல்லாத சொல்” என்னும் பள்ளி மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சி.

"சொல்வளக்கையேடு" நூலை அடிப்படையாகக்கொண்டு, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புதிர்ப் போட்டியில் இரண்டு சுற்றுக்கள் ஏற்கனவே நிறைவடைந்து, அவற்றுள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கிடையிலான இறுதிச் சுற்றுப்போட்டி அன்று நடைபெற்றது.

பள்ளிப்பருவத்துக்கேயான மித மிஞ்சிய ஆர்வத்தோடும் அதனிலும் அதிகமான பதற்றத்தோடும் மாணவர்கள் சுறுசுறுப்பாக பதில் சொல்லிய விதம், எதிர்காலத்தலைமுறைத் தமிழ் மீது ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆங்கிலத்தை தமிழிலும் தமிழை ஆங்கிலத்திலுமாக அதி வேகமாக மொழி பெயர்த்தார்கள். மானவர்களின் பரபரப்பு என்னையும் தொற்றிக்கொண்டது. என்னைப்போல பார்வையாளர்கள் பலரும் தத்தம் மனதிற்குள் பதில் சொல்லியபடியே இருந்திருப்பார்கள்.

பக்கம் பக்கமாக மனப்பாடம் செய்வதைவிட, அறிவியல் நூல்களை மாய்ந்து மாய்ந்து படிப்பதை விட இந்த மொழி பெயர்க்கும் போட்டி, அதிலும் தம் தாய்மொழி சார்ந்த இந்தப் போட்டி அவர்களுக்கு அதீத உற்சாகத்தை தந்திருந்ததை கண் கூடாகக் காண முடிந்தது. வெறுமனே நூலைத் தந்து, தேவையான போது பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்வதை விட, போட்டி ஒன்றின் மூலம் நல்ல தமிழ் சொற்களை அறிமுகப்படுத்தி மாணவர்களை உற்சாகப்படுத்துவதால் அவற்றைத் தம் அன்றாடவாழ்வில் அவர்கள் பயன்படுத்தி மொழியை வளர்ப்பது என்பது மிகவும் இலகுவான விடயமாகும். உண்மையில் இது மிகவும் ஆக்க பூர்வமானதும் பயன் தரக்கூடியதுமான முயற்சியாகும். அந்த வகையில் http://ilamaithamizh.com/ இற்கும், நிறுவனர்,எழுத்தாளர் திரு. பாலு மணிமாறனுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

போட்டி முடிந்ததும் சில இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பொதுவாகவே இப்போதெல்லாம் பாடுவதற்கு ஊடகம் சார்ந்த சமூகவியல் முக்கியத்துவம் ஏற்பட்டுவிட்டதால், எவரொருவர் ஒலிவாங்கியை கையில் எடுத்தாலும் பாடலோடு அளவுக்கதிகமாக அபிநயமும் செய்யத் தலைப்படுகின்றார்கள். பார்க்கச்சகிப்பதில்லை. ஆனால் அன்று குழந்தை ரித்திகா பாடியபோது, அவள் குரலில் எத்தனை வீச்சும், உயிர்ப்பும் இருந்ததோ அத்துணை அமைதியும் நிர்ச்சலனமும் அவள் முகத்தில். பிசிறே இல்லாத அவள் பாடலில் மொத்த அரங்கமும் உறைந்து போய் ரசித்துக்கொண்டிருந்தது.

அதை தொடர்ந்து, யூனிட்டி உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் வழங்கிய வாத்தியக்கச்சேரி இடம் பெற்றது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பல்லிசைக்கச்சேரி ஒன்றை கண்டு களிக்கக் கிடைத்த நல்வாய்ப்பு அது.

தமிழ் மொழி வளக்குழுவின் முன்னாள் தலைவர் திரு.பழனியப்பன் அவர்களுடைய தலைமையுரை, தற்போதைய தலைவர் திரு.வேணுகோபால் அவர்களுடைய வாழ்த்துரை என்பவற்றின் வழியாக இந்த “சொல்வளக்கையேடு” நூல் தயாரிப்பின் பின்னால் இருக்கின்ற உழைப்பினை அறிந்துகொள்ள முடிந்தது. இந்த நூலின் மேம்படுத்தப்படடட அடுத்த பதிப்பிற்காக இன்னும் உழைத்துக்கொண்டிருப்பதாகவும் Algorithm போன்ற சிக்கலான சொற்களுக்கு நிகரான தமிழ் சொல்லைத் தேடி வருவதாகவும் குறிப்பிட்டார்கள். (தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் சொல்லலாம்).

மாணவர்களுக்கான பரிசளிப்போடு நிகழ்வு இங்கே நிறைவெய்தியது.

விறுவிறுப்பான போட்டி, ஒரு சில தொழில்னுட்பக்கோளாறுகளால் சற்று தொய்வடைய நேரிட்ட தருணங்களை திருட்டிப் பரிகாரமாகத் தான் கருதி கடந்து போகவேண்டும். ஏனென்றால் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் எத்தனை உயரியது என்பதற்கும் அதன் வெற்றி என்ன என்பதற்கும் இந்தக் காணொளியே சாட்சி.

அன்றைய நிகழ்வின் சில பிரதிநிதிகளான இந்தக் குழந்தைகளின் கண்களில் தெரியும் எதிர்பார்ப்பின் ஒளி, நாளைய நம் சமுதாயத்தின் மொழி வளர்ச்சியை இப்போதே பறை சாற்றுவதை நீங்களும் உணரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக