குடை நிழல்

இலங்கையில் போர் நிகழ்ந்த பிரதேசங்களுக்கு அப்பாலும் தமிழ் பேசும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அன்றாட வாழ்வில் எதிர்கொள்ள நேர்கின்ற இனம் மற்றும் மொழி சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கான சாட்சி தெளிவத்தை ஜோசப் இன் இந்த “குடை நிழல்” குறுநாவல்.

வீட்டின் வாசல்கதவிலிருந்து குழந்தைகளை பாடசாலையில் சேர்ப்பது வரை சில வருடங்களுக்கு முன்பு வரை கூட (இப்போதும் இருக்கின்றதா எனத் தெரியவில்லை) தமிழனுக்கு இருக்கின்ற பல வாழ்வியல் சிக்கல்களை, மனக்கசப்பின் உச்சவிளிம்பில் தோன்றும் விரக்திச் சிரிப்பின் தொனியில் சொல்லி இருக்கின்றார். குறிப்பாக உண்மைக்குப் புறம்பான அல்லது ஊற்றி மூடி விடுகின்ற செய்திகளையும், ஊரே பற்றி எரிகையில் பிடில் வாசித்தவர்களைப்பற்றியும் சொல்லி இருப்பவை யதார்த்தம் தான்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு சிறுகதையாகக் கருதலாம் என்று முன்னுரை சொல்வதை கதையைப் படிக்கும் போது உணரவும் முடிந்தது.ஒரு முழு நாவலாக எழுதி இருக்கவேண்டிய அளவுக்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் குறுநாவலாக எழுதிவிட்டார்.

இன்றிருக்கும் தலைமுறை மாறி இருக்கின்றது என்று தான் நினைக்கின்றேன். என் பாடசாலையில் எதிர்கொண்ட பிரச்சினைகளைப்போல அலுவலகத்தில் நான் சந்திக்கவில்லை. இருப்பினும் இலங்கையில் இன நல்லிணக்கம் வர இன்னும் பல வருடங்கள் ஆகும் என்றே தோன்றுகின்றது. அங்கிருக்கும் எரிகின்ற கொள்ளியில் எண்ணைய் ஊற்றும் சுயநல அரசியல் மாயை நீங்க வேண்டும். 50 வருடங்களுக்கு முன்பு லீ குவான் யூ இலங்கையில் பேசியதை அறிந்த போது இல்லாத வலியை சிங்கப்பூர் வந்து பார்த்த பின்பு அதிகமாக உணர்கின்றேன். எல்லா வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்டு, தனக்குள் தன் நிறைவு பெற்று தங்கியிருத்தலின் தேவையேதுமற்ற என் தாய் நாடு,உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழும் காலம் என்றாவது வரும் என்றே நான் நம்புகின்றேன்.

ஆனால், இவை எதுவும் புரியாமல் இந்தியாவின் தமிழகத்தையும் இலங்கையின் வட கிழக்குப் பிரதேசத்தையும் இணைத்து தனித்தமிழ் நாடு என்று WhatsApp இல் பரவ விட்டுக்கொண்டிருக்கும் ‘தமிழ்’ அரசியல் அறிவாளிக்கூட்டம் அத்தியாவசியமாய் படிக்க வேண்டிய நூல்களுள் ஒன்று இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக