பிழைப்பைத் தேடி

குளக்கரையின் புற்றரையில் அமர்ந்தபடி 
மறுகரையின் தென்னை மரங்களின் 
கீற்றிடைவெளியில் தெரியும் வெண்மதியை சுட்டி,
"அம்மா, நிலா தூங்க போலையா" என்கிறாள்.

நீர்மெத்தைமேல் விரியும் அல்லிகளும்,
நிலப்படுகையில் மலரும் மல்லிகளும் 
சேர்ந்து குவித்த உடு பிம்பங்களைக் காட்டி,
"அம்மா, நெச்சத்திரம் பாத்து பாது" என்கிறாள்.

அவள் மழலைக்குள் ஊறும் 
எண்ணற்ற எண்ணங்களை 
இயற்கையின் மொழியில்
பெயர்க்கும் பின்மாலைத் தென்றல்,
"அப்பா பாக்க போகலாமா, 
அப்பா நாயைக்கு வவ்வாரா" 
என்றதும் திகைத்துப்போகின்றது.

தொட்டாச்சிணிங்கியால் செய்த
சின்னஞ்சிறு கைகளால்
நிலவின் நிழலை ஏந்த வைத்து
அப்பாவிடம் பேசு என்றேன்.

தொலைதூரத்தில் நள்ளிரவு நிலா
குளிரூட்டிய அறைச்சாளரம் வழி
அப்பாவின் தண்ணீர்க்கோப்பைக்குள்
விழுந்து உன் தகவலை சொல்லும் என்றேன்.

நம்பியும் நம்பாமலும்
புரிந்தும் புரியாமலும்
“சதிம்மா” என்கிறாள்.

கூடவே,
“அம்மா, சில்லுக்குது, குளுது” என்றும் சொல்கிறாள்.

April 6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக