புதுமைப்பித்தன் வரலாறு

அன்றிரவு சுமார் 10.30 மணி இருக்கலாம். முஸ்தபா சென்டர் இல் காய்கறி வாங்கச் சென்றால் எப்போதடா ஓய்வு கிடைக்கும் என்று கால்கள் நச்சரிப்பதொன்றும் அதிசயமில்லை. பணம் கொடுத்து வாங்க முடிந்த அனைத்தையும் வாங்கக்கூடிய இடத்தில், இருக்கும் எல்லாவற்றையும் ஒரு சுற்று பார்க்காமல் வந்தால் அந்த இடத்துக்கென்ன மரியாதை? அன்றும் அதனால் தொடர் வண்டி ஏறி இடம் தேடி ஓடிப்போய் அமர்ந்ததும் தான் ஆசுவாசமானது. ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு, கைப்பைக்குள் இருந்த "காஞ்சனை" யை விரித்தேன்.

முன்னுரையின் முதல் பத்தியைக்கூட வாசித்து முடிக்கவில்லை. குபீரென்று சிரிப்பு வந்து விட்டது. திறன் பேசிக்குள் முத்தெடுத்துக்கொண்டிருந்த சக பயணிகளைப்பற்றி, காஞ்சனைக்குள் முக்குளித்துக்கொண்டிருந்த எனக்கும் அக்கறை இருக்கவில்லை. ஆனால் எதிர்புறம் அமர்ந்திருந்த என் குழந்தை "அம்மா ஏன் சியிக்குற" என்று கேட்ட குரலில் மற்றவர்களுக்கு முன் நான் சுதாரித்து கரையேறி வாயை மூடிக்கொண்டது நல்லதாகப்போயிற்று. இல்லையென்றால் ஸ்டாம்ப் இல் என் சிரிப்பு வலையேறி இருக்கும்.

புதுமைப்பித்தனை நான் படிப்பது அதுதான் முதன் முறை. சிறு கதைகள் மீது எனக்கு அதிகம் ஆர்வம் எப்போதுமே இருந்ததில்லை. நாவல்கள் தான் மிகப்பிடித்தமானவை, அவை 400க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருப்பவை என்பதைத் தவிர வேறு விசேட காரணங்கள் எதுவும் இல்லை. ஆனால், அப்படி இருந்தபோதும், "புதுமைப்பித்தன் சிறுகதைகள்" போன்ற பல சிறுகதைத் தொகுப்புகளை கண்மூடித்தனமாக நிராகரித்த அந்த நாட்கள், “காஞ்சனை”யைத் தொடர்ந்து தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய "புதுமைப்பித்தன் வரலாறு" என்னும் நூலை கையில் வைத்திருக்கும் இந்த நொடியில் நினைவில் வந்து போகின்றன.

இன்ன தேதியில், இன்னார்க்கு மகனாகப் பிறந்தார். இன்ன வருடத்தில் பள்ளிக்கூடம், கல்லூரி, பத்திரிகை (இன்ன பிற விடயங்கள்) பல “முதல்” மற்றும் “இறுதி” தகவல்கள், ஈற்றில் இன்ன தேதியில் மரணம் என்று தான் எல்லாவகையான வாழ்க்கை வரலாறுகளும் அமையும். ஆனால் “புதுமைப்பித்தன் வரலாறு” அப்படி அமையாதது தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம் தான். அபுனைவின் 50 விழுக்காட்டுக்கு அப்பால் எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறப்பான புதினம் இது.

அவர் அனுபவித்த இன்னல்கள், அவற்றிலிருந்து அவர் கண்டெடுத்த நகைச்சுவைகள், இவற்றுக்கிடையில் அவர் உருவாக்கிய மிகச்சிறந்த இலக்கியங்கள், பத்திரிக்கை மற்றும் திரைத்துறை வாழ்வு, குணநலன்கள், நடை உடை பாவனைகள், சுவையான/கவனத்திற்குரிய நிகழ்வுகள், மிகக்கொடுமையான இறுதிக்கட்டம் என்ற அனைத்துமே வெறும் சம்பவக்கோர்வைகளாக இல்லாமல் கதைகளைப்போல சொல்லப்பட்டிருப்பது தமிழில் வந்த மிகச்சிறந்த வரலாற்று நூல்களுள் இந்த நூலைச் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக முன்னுரை ஒன்றே போதும். பிரசித்தி பெற்ற சில எழுத்து ஜாம்பவான்கள் மீதான பன்நெடுங்கால கதாநாயக பிம்பங்களை உடைத்தெறியச்செய்ய.

உழைப்புக்கான ஊதியமோ அங்கீகாரமோ இல்லை என்பது எல்லா தொழிற்துறையிலும் வழக்கமாக இருக்கின்ற ஒருப்பிரச்சினை தானே? ஆனால் ஏன் எழுத்தாளர்களின் அங்கலாய்ப்பு மட்டும் சற்று அதிகமாகவே இருக்கன்றது என்று சில சமயங்களில் நான் யோசிப்பதுண்டு. ஒரு வேளை அவர்களுக்கு இலகுவாக மொழி சாத்தியப்பட்டு விடுவதால், நமக்குத் தான் அது உயர்வு நவிற்சியாகத் தெரிகிறதோ என்றும் நினைத்திருக்கிறேன்.ஆனால், இலக்கியத்துக்கும் மற்ற துறைகளுக்கும் இந்த விடயத்தில் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை ஒரு இலக்கியவாதியின் முழு வாழ்க்கை வரலாற்றை படித்தால் தான் உணர முடியும் போலிருக்கின்றது.

லௌகிக வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தேவைகளாக நம்பப்படும் அங்கீகாரம், ஊதியம் என்பவற்றையெல்லாம் துச்சம் என்று கூட மதிக்காத மனம் என்பது சராசரி மனித வாழ்வில் அசாத்தியம். அதற்காக, 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று இலக்கியம் படைப்பது அபத்தம்.

தனிப்பட்ட வாழ்க்கையின் தேவைகளுக்கு அப்பால் ஆத்மாவால் அபரிமிதமாக உந்தப்பட்டு, உள்ளுணர்வின் நியாயங்களையும் தர்க்கங்களையும் மிகுந்த உத்வேகத்துடனும் ஆவேசத்துடனும் காலாகாலத்துக்கும் கல்வெட்டுகளாய் வாழும் அளவுக்கு தரமுடைய இலக்கியங்களாகப் படைத்தவர் புதுமைப்பித்தன்.

சுமார் 100 சிறுகதைகளை எழுதி தமிழ் சிறுகதை இலக்கியத்தின் வரலாற்றில் மிக ஆழமாகப் பாதிக்கப்பட்ட மைல்கலாக இவர் இருப்பதற்குக் காரணமில்லாமல் இல்லை. தன் 40 வருட ஆயுளில், ஒரு சராசரி மனிதன் 80 வருடங்களில் தன் குடும்பத்துக்கு செய்துவிடக்கூடியதை விட அதிகமாக நவீன தமிழ் இலக்கியத்திற்குச் செய்திருக்கின்றார் அவர்.

புதுமைப்பித்தன் பற்றிய வரைவிலக்கணங்களில் தவிர்க்க முடியாத ஒன்று அவருடைய அங்கத நடையும் எள்ளலும். அப்படி விளைந்த பயிர் இயற்கைக்கு ஒப்ப முளையிலும் அப்படித்தான் இருந்திருக்கின்றது. சிறுவயதிலிருந்தே குறும்பும் கிண்டலுமாகத்தான் இருந்திருக்கின்றார். அவரின்அந்த நக்கல் தொனிக்கும் சிலேடைத் திறனுக்கும் உதாரணமாய்,. தன் கல்லுரித் துணையை அதிபரைப்பற்றி வகுப்பறைக் கரும்பலகையில் அவர் எழுதி வைத்த கீழ்கண்ட வாக்கியம் இந்த நூலில் இருக்கின்றது.

"Mussolini is the Dictator of Italy;
Our V.P is the dictator of notes !'

பொறுப்புகளின்றி விளையாட்டாகவே இருந்துவிட்டதாலோ என்னவோ ஏட்டுச் சுரைக்கொடியை பற்றித்தொங்கி உயர் பதவியுடன் நிறைந்த வாழ்வு பெறும் சாமர்த்தியம் அவருக்கு கடைசிவரை இல்லாமலேயே போய்விட்டது.

இந்த வரலாற்றைப் படிக்கும்போது பாரதியாரின் வரலாற்றைப் போலவே இருக்கின்றதே என்று எண்ணி ஆச்சர்யப்பட்டேன். தமிழின் மிகச்சிறந்த இலக்கியவாதியாக வேண்டும் என்றால் ஒருவன் தன்னை மறந்து, தன்னை நம்பி வந்த பெண்ணை மறந்து, பெற்ற குழந்தைகளை மறந்து, தனக்குப்பின்னான அவர்களின் எதிர்காலத்தை மறந்து, இவை அனைத்தையும் புறக்கணித்துத் தான் இலக்கியம் படைத்தாகவேண்டும் என்பதெல்லாம் எத்தனை கசப்பான உண்மை.

பாரதியாரின் இறப்புக்குப் பின் அவரின் மனைவி அளித்த பேட்டி ஒன்றில் “என் கணவர் இறந்த பின் தான் நான் மகாகவியின் மனைவி, அதற்கு முன்பு வரை நான் பித்தன் பெண்டாட்டி” என்று சொல்லியதாக ஒரு கட்டுரையில் சமீபத்தில் படித்தேன். புதுமைப்பித்தன் மனைவி கமலாம்பாள் நிலைமை இதை விட ஒன்றும் மோசமில்லை என்பதா, இல்லை இத விட மோசம் என்பதா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

ஒரு கமலாம்பாளின் உணர்வுகளும் ஆசாபாசங்களும் கசக்கிப்பிழியப்பட்டுத்தான் 'நவீன அகலிகைகளுக்கும் ' , 'செல்லம்மாக்களுக்கும்' நீதி கோரப்படவேண்டும் என்பது அத்தனை உவப்பாக இல்லை மனதுக்கு. இதைத் தவிர புதுமைப்பித்தனின் இலக்கிய வாரிசாகக் கொள்ளப்படும் ரகுநாதன் சம காலத்திய பெண் எழுத்தாளர்கள் மீது கொண்டிருந்த நல் அபிப்ராயம் இன்னுமொரு நகை முரண்.

வசை பாடிகளையும், துதிபாடிகளையும் மிகத்துல்லியமாக அடையாளம் கண்டு கொள்ளும் உளவியல் சூட்சுமம் மட்டும் கைவரப்பெற்று விட்டால், விமர்சனங்களும், எதிர்வினைகளும் ஒரு நல்ல எழுத்தாளனை அசைத்துவிடப்போவதில்லை.

தான் படைத்த இலக்கியங்கள் மீது அவருக்கிருந்த, எந்த விதத்திலும் தவறேயில்லாத அசாத்தியமான வித்யா கர்வம் அவரைத் தமிழின் மிகச்சிறந்த விமர்சகராகவும் உருவாக்கி இருந்தது. மடியில் கனமில்லாததால் வழியில் பயமேதுமின்றி தமிழ் இலக்கியத் தரத்தை நிர்ணயிக்கும் முயற்சியில் அவரால் நேர்மையாக ஈடுபட முடிந்தது.

வெறும் வார்த்தை அலங்காரங்களுக்கு, நல்ல எழுத்தாளர்கள் தரும் 'அருமை தோழீ' பாராட்டுப்பத்திரங்கள், மற்றவர்களுடைய அரதப்பழையப் பதிவுகளிலிருந்து உருவப்பட்ட பத்திகளாலான புதிய கட்டுரைகள், விருப்பக்குறிகளைக் கணக்கிலெடுத்து மட்டுமே புத்தகங்களை வெளியிடம் துணிபு என்று தமிழ் இலக்கியம் கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய "Facebook" யுகத்தில் புதுமைப்பித்தனைப் போல பாரபட்சம்/தயவு தாட்சண்யம்/தன் சார்பு இல்லாத மிகக்கறாரான ஒரு விமர்சகருக்கான இடம் வெற்றிடமாகவே இருக்கின்றதோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது.

ஆனால், "தமிழ் நாட்டில் எழுதிப் பிழைப்பது என்பது எத்தனை அபாயகரமானது என்பதைத் தமது உயிரையே பணயம் வைத்து காட்டிச் செல்லும்" அசுர தைரியம் புதுமைப்பித்தனுக்கன்றி வேறு யாருக்கு வரும்?

இலங்கையில் இன்றும் வீரகேசரி கொடி கட்டிப்பறந்து கொண்டு தான் இருக்கின்றது.

'ஒருவேளை அன்று தினமணிக்கு பதில் வீரகேசரி என்று அவர் முடிவெடுத்திருந்தால்,,,,,,,,,'

என்ற எண்ணம் தோன்றாமலில்லை.

சிறு வயதில் டி.எஸ்.சேனாநாயக்க நூலகத்தில் நான் பார்த்த சுமார் ஆயிரம் பக்கங்களைக்கொண்டிருந்த "புதுமைப்பித்தன் சிறுகதைகள்" நூலை இனி எங்கே தேடிக்கண்டு பிடிப்பது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக