வீடு

வீடடைதல் எனப்படுவது யாதெனில் பிறந்து, வளர்ந்து, படித்து, விளையாடி, மகிழ்ந்து, வருந்தி, ரசித்து, வெறுத்து எல்லாமுமாய் வாழ்ந்த இடத்தில், யுகமெனத் தோன்றும் பல வருடங்கள் கழித்து ஒரு சில நாட்கள் தங்கி இருத்தலாகும்.

அம்மா, தற்செயலாக நட்டு வைத்த மா விதை மாமரமாய் வளர்ந்திருந்ததும், நண்பர்களுடனான சந்திப்பு ஒன்றை திட்டமிட்டும் எல்லோராலும் முடியாமல் போனது வரை அங்கு எதுவுமே அதுவாக என்னவோ இல்லை தான்.

ஆனால், வீட்டின் ஒவ்வொரு முனையிலும் இருக்கும் தூசுத்துகள் முதல், ஆற்றில் இடம் பெயர்ந்து கிடக்கும் குறிப்பிட்ட கல் வரை பல நூறு உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்த சில ஆயிரம் ஞாபகங்கள் அவற்றின் அடர்த்தி மாறாமல் அப்படியே இருந்தது ஒன்றும் அதிசயமே இல்லை. இனி ஒரு முறை என்பது ஒரு வேளை இல்லாமல் போய் விட்டால் என்று தோன்றி விடாத அளவுக்கு பார்க்க வேண்டிய அனைத்தையும் அனைவரையும் பார்த்தாயிற்று, யாருடைய நிரந்தர விடைபெறுதல்கள் குறித்த பயமும் பதற்றமும் இனி இல்லை என்பதே மிகப்பெரிய மன ஆறுதல்.

அப்போது எவை எல்லாம் இல்லையோ அவை எல்லாம் இப்போது இருக்கின்றன. ஆனால் அப்போது இருந்த எல்லாம் மீண்டும் ஒரு முறை கிடைக்காதா என்று நாளெல்லாம் தோன்றியபடியே இருக்கின்றது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் தன்னிடம் இல்லாத/தன்னால் உருவாக்க முடியாத ஒன்றுக்காக மனம் வெதும்ப வேண்டும் என்பது தான் மனிதப் பிறப்பிற்கான நியதி போலும்.

சிறுவயதில் கோயிலுக்கு போவதென்பது ஒரு விளையாட்டுப் போலத்தான். ஊரைச் சுற்றி நான்கு கோயில்கள். ஒரு முருகன் கோயில், ஒரு அம்மன் கோயில் மற்றும் இரண்டு அம்மன்+முனியாண்டி கோயில்கள் என நான்கும் கிராமியத்தெய்வக் கோயில்கள் தான். பாடசாலை விட்டு ஓடி வந்து அவசர அவசரமாய் அரை குறையாய் குளித்து விட்டு அப்பாயியின் கை பிடித்தபடி காட்டு வழியே கதை கேட்டுக்கொண்டும், கந்த சஷ்டி கவசம் பாடிக்கொண்டும் நான் தினம் போன கோயில்களுக்கு மீண்டும் போகக்கிடைத்தபோது வாழ்வில் இழந்தவை எல்லாவற்றையும் மீண்டும் அடைந்ததைப்போல அப்படி ஒரு நிறைவு.

புதுப்பொலிவோடும், புத்துணர்வோடும், பிராமணத் தெய்வங்களோடும், வண்ண மயமாய் இன்றிருக்கும் இந்த ஆலயங்களில் அப்போதிருந்த உயிர்ப்பு இல்லாதது ஏமாற்றமாகத்தான் இருந்தது.

கிராமிய தெய்வங்களின் விக்கிரகங்கள் மற்றும் பழைய கற்பதிவுகள் மூலைகளுக்குத் தள்ளப்பட்டு விட்டது போன்று ஒரு உணர்வும் ஏற்பட்டது

சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், சிறு வயதில் முதன் முதல் பார்த்து, ரசித்து, sight அடித்த ஆண்மகனுக்கு தலை நரைக்கத்துவங்கி இருப்பதையும், இலங்கை வானொலிகளில் புதுவரவாக கேட்டு ரசித்து சொக்கிக்கிடந்த “ஆனந்தம் ஆனந்தம் பாடும்” பாடல் "Golden Hit" ஆகி இருந்ததும் தந்த அதிர்ச்சி தான். 'அட, நமக்கும் வயதாகி விட்டதே' என்று இரண்டாம் முறையாக எண்ணி சிரித்துக்கொண்டேன்.

இந்தப் பேரண்டத்தின் அத்தனை அழகுகளையும் அத்தனை வளத்தையும் முழுமையாகக் கொண்டது என் தாய் நாடு என்பதில் ஒரு போதும் ஐயம் இருந்ததில்லை எனக்கு. அன்பானதா என்பது குறித்த அச்சமும் தீரவில்லை.

July 17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக