காடு

உணவிலிருந்து உணர்வு வரை இயற்கையின் பொய்த்தோல் போர்த்தி செயற்கைகள் மலிந்து கிடக்கும் இன்றைய உலகில், இயற்கையான இயற்கைக்கான ஏக்கமும் தேடலும் மனித மனங்களின் ஆழங்களில் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கின்றன. ஜெயமோகனின் "காடு" நாவலில் இழையோடிய தண்மை அதைத்தான் நினைவுறுத்தியது.

கல்வெர்ட் ஒப்பந்தக்காரரான சதாசிவம் மாமாவின் உத்தரவின் பேரில் கல்வெட்டு கட்டுமான பணிகளை மேற்பார்வையிட சென்ற தன்னுடைய இளமைக்காலத்தை மீட்டிப் பார்க்கும் முதியவரான கிரிதரனுடைய காடும் காடு சார்ந்த அனுபவங்களும் நாடும் நாடு சார்ந்த வாழ்வும் இந்த நாவலின் கருப்பொருள்.

மலையாளம் கலந்த தமிழ் வட்டார வழக்கு ஒன்றில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. பழக்கம் இல்லாத காரணத்தால் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள சற்று கடினமாக இருந்த போதிலும் குட்டப்பனின் குரலில் அதை படிக்கையில் மீண்டும் மீண்டும் வாசித்து ரசிக்க வேண்டும் போல சுவாரஸ்யமாகவே இருந்தது. சலித்துப் போன வறண்ட பாலைவனமாகப் பின்னாளில் மாறிப்போன கிரிதரனின் வாழ்க்கையை விட பேச்சிலும் செயலிலும் ஒவ்வொரு நொடியிலும் தன் வாழ்வை பரிபூரணமாக வாழ்ந்த குட்டப்பன் தான் இந்த நாவலின் ஆதர்ச கதாநாயகன்.

நகர வாழ்க்கையில் கற்பிக்கப்பட்டிருக்கும் நெறிமுறைகளில் இருந்து முழுவதுமாய் விடுபட்டு பறவைகளையும் விலங்குகளையும் போல அன்பையே அடிப்படையாகக் கொண்ட, அழகானதும் அதி சுதந்திரமானதுமான காட்டுவாழ்க்கை நாகரீக மனிதர்களை ஒரு புவியீர்ப்பைப் போல தனக்குள் இழுத்துக் கொண்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் காட்டில் ஒரு தேவாங்கை தன் குழந்தையைப் போல நேசித்த குட்டப்பனின் சிநேகங்களைப் துளி கூட சட்டை செய்யாத ரெசாலத்தால், நாட்டு வாழ்க்கைக்குத் திரும்பிய பின்னர் சதாசிவத்தை கொல்லாமல் இருக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

குரிசு சொல்வதாக ஒரு வசனம் வரும்.
"அனந்த பப்பனாவன் தம்பிரானுக்க சாமி. சாமிகளிலே தம்புரான்". கருணையை மூலதனமாகக் கொண்டு, வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்த மக்களின் அடிப்படை த் தேவைகளைப் பூர்த்தி செய்து மெது மெதுவாக அவர்களை மூளைச்சலவை செய்து எப்படி கிறிஸ்தவமதம் மதமாற்றத்தை அவர்களுக்குள் நுழைத்தது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.

கிரிதரன் முதன்முதலாக காட்டுக்குள் சென்ற அனுபவத்தை விவரிக்கும் அத்தியாயம், வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு அழகான படிமம். மீட்பு என்பதற்கு வாய்ப்பே இல்லாத சுழலைப் போன்ற ஒரு சிக்கலில் மாட்டித்தவித்த ஒரு உணர்வை தம் வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவித்த மனிதர்கள் நம்மில் அனந்தம். அவர்களுள் அந்த மிளாவைப் போல இறுதியில் ஏதேனும் ஒரு வாய்ப்பை பற்றி வெளியில் வந்தவர்களும் உண்டு. அந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொடியைப்போல நிழலாகத் தொடர்ந்து வந்த ஒரு வழிகாட்டியை காணத் தவறியோரும் உண்டு.

இந்தக் கதைக்குள் வரும் கதைமாந்தர்கள் அனைவரும் நம்மில் ஒருவராக, நம்மிடையே வாழ்வதற்கு வாய்ப்புகள் உண்டு ஒரே ஒருவரைத் தவிர. இந்த முழுக்கதையின் ஜீவநாடியும் நீலி ஒருத்திதான். கற்பனை அழகின் உச்சம் அவள். மனிதப் பெண் வாழ்வின் கசடுகளின் தடம்பதியாத ஒரு தெய்வீகமான படைப்பு. ஒருவேளை, தனது முதல் காதலை சுவாசிக்கும் கிரிதரனின் கண்களின் வழியாக அவள் காட்டப்படுவதால், சராசரி பெண்ணாக இருக்க வாய்ப்பே இல்லாத அமானுஷ்யமானவளாக ஒரு தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துகின்றாளோ?

இயற்கையின் மேடு பள்ளங்கள் தோறும், காலநிலைகளின் இன்ப துன்பங்களைக் கடந்து, இரவு பகலாக, வனவிலங்குகளின் மொழியோடு பழகி தனது ஆத்மார்த்தமான காதலைத் தேடித் தேடி அலையும் கிரிதரனுக்கு நீலியின் மரணம் தந்த அதிர்ச்சியும், அபூர்வமானது என்ற ஒன்றைத் தவிர வேறு சிறப்புகள் ஏதும் அற்றது குறிஞ்சிப்பூ என்பதை தெரிந்து கொண்ட ஏமாற்றமும் வாசகர்களையும் அவ்வுணர்ச்சிகளுக்குள் செலுத்தி விடுகின்றன.

சங்க காலம் முதல் காதலுக்கும் கலவிக்கும் அழகுக்கும் உரியதாக இருந்த குறிஞ்சி திணை, இன்று சுரண்டலுக்கு பலியாகி கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை.

ஆனால் சதாசிவத்தின் மகனாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீதரன் என்பவன் என்ன ஆனான் என்பதுதான் கடைசி வரை புரியவே இல்லை.





September 16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக