சொந்த மண்ணின் அந்நியர்

"சொந்த மண்ணின் அந்நியர்" என்கின்ற இந்த தலைப்பு ஏனோ சட்டென்று மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக தோன்றியதால் பின் அட்டையை திருப்பிப் பார்த்தேன். "ஈழப்போரை இடம்பெறாத மலையகத்தின் மக்கள் அனுபவித்த இன்னல்கள்" என்கின்ற வசனத்தை படித்ததும் உடனே புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்து விட்டேன்.

இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர் என்கின்ற நீண்ட இன அடையாள பெயரைக் கொண்ட மலையக மக்களின், குறிப்பாக தேயிலை மற்றும் காப்பி தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு பல தலைமுறைகளாக இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியல் தொடர்பான உண்மைக்கதைகளை கொண்ட சிறுகதை தொகுப்பு இது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கம் அல்லது தனிநபர்களால் ஊக்குவிக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு இனம் சார்ந்த ஒடுக்குமுறைகள் ஒரு அளவுக்கு அமைதிக்கு வந்து சில வருடங்களின் பின்பே பிறந்ததனால் இந்த கதையில் வருகின்ற பல்வேறு சம்பவங்கள் எனக்கு என் உறவினர்களால் செவி வழியாக கூறப்பட்டவை தான். ஆனால் இந்த வாழ்க்கையை வாழ்ந்த ஒருவருடைய வார்த்தைகளில் இவற்றைப் படிக்கும் போது தான் இது எத்தனை வீரியமானது என்பது புரிகின்றது.

1970களில் அரசாங்கம் தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களை அரசு மயமாக்கியதால் அங்கு வேலை செய்து வந்த தோட்டத் தொழிலாளர்கள், சொந்த மண்ணிலேயே அந்நியர் ஆக்கப்பட்ட கொடுமையைப் படிக்கையில் மிகவும் வேதனையாக இருந்தது. ஏற்கனவே பிரஜாவுரிமையை யும் இழுந்துவிட்ட பலருக்கு இந்த நிலைமை எத்தனை அதிர்ச்சியையும் பதட்டத்தையும் கொடுத்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

பொதுவாகவே இலங்கையின் இனப்பிரச்சினை என்றால் அது யாழ்ப்பாணத்துடன் மட்டுமே தொடர்புடையது என்கின்ற ஒரு பரவலான புரிதல் இலங்கைக்கு வெளியே இருக்கின்றது. ஆனால் இந்தத் தொகுப்பில் இருக்கின்ற கொழும்பை மையப்படுத்தி வரும் "கருஞ்ஜூலை" என்கின்ற சிறுகதையும் மட்டக்களப்பை மையப்படுத்திய "சூரியன் சாட்சியாக" என்கின்ற சிறுகதையும் இந்த இனக் கலவரங்கள் உண்மையிலேயே எவ்வளவு கொடூரமானவை என்பதை விவரிக்கின்றன. யோசித்துப் பாருங்களேன். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஏன் நடக்கிறது என்று புரியாமல் உயிருக்கு பயந்து அலறி ஓடிக்கொண்டிருக்கும் சிறுவன் ஒருவனின் தலையில் கொங்கிரீட் கல்லை தூக்கிப் போட்டுக் கொல்வது என்றால்?

இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் கல்விக்காக இந்திய அரசாங்கம் வழங்குகின்ற பல்வேறு புலமைப்பரிசில்கள் பற்றி ஏன் பெருந்தோட்ட பகுதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை அல்லது யாரும் ஏன் அதைக் கொண்டு சேர்ப்பது இல்லை என்று நான் பலமுறை யோசித்து இருக்கின்றேன். ஆனால் தெரிந்து, அதற்காக விண்ணப்பித்தாலும் அதற்குப் பின்னாலும் ஒரு சுயநல அரசியல் இருந்து தம் சொந்த மக்களின் கல்வியையும் முன்னேற்றத்தையும் தடுப்பதை "இன்னும் எத்தனை நாள்" என்கின்ற சிறுகதை மூலம் தான் தெரிந்து கொண்டேன். பல தலைமுறைகளாய் பின் தங்கியே இருக்கும் இந்த மக்களின் வாழ்வு இன்னும் பல தசாப்தங்களுக்கு இப்படியேதான் இருக்கப் போகின்றதோ?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 497 ஏன் முன்பு சேர்க்கப்பட்டது என்பதைப் பற்றிய ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்தபோது, இந்தத் தொகுப்பில் உள்ள "செல்லி அல்லது மணிராசு" என்கின்ற சிறுகதை நினைவுக்கு வந்தது.இதுபோன்ற சட்டங்கள் அப்போது இலங்கையிலும் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடும். ஆனால் செல்லிகள் எல்லா காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற எந்த சிவபெருமானும் எந்த முனியப்பரும் வருவதே இல்லை.

பெரும்பாலான கதைகள் இவை போன்று மனக்கிலேசங்களைக் கிளர்த்துபவையாகவே இருந்தன. அத்தோடு சில, கதைகளாக மட்டுமில்லாமல் வெறும் வரலாற்றுத் தரவுகள் ஆகவும் இருக்கின்றன. முன்னுரை வேறு இவை உண்மைக்கதைகள் என்று பிரகடனம் செய்து விட்டதால், இந்தத் தொகுப்பில் அழகியலைத் தேடும் ஆர்வமும் இருக்கவில்லை. ஆனால் இந்தத் தொகுப்பில் அதற்கும் பஞ்சமில்லை.

கண்டி பிரதேசத்திலேயே பிறந்து வளர்ந்திருந்த போதும், செங்கடகலயில் (அல்லது செக்கந்தன் கந்தை)சிவப்பு நிறத்தில் பூக்கும் மல்லிகைச்செடிகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. இது உண்மையா அல்லது கதாசிரியரின் கற்பனையா?

கதாசிரியரின் பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் அலுவலக அனுபவங்கள் சில, சிறுகதைகளாக எழுதப்பட்டிருக்கின்றன. அவை சுவாரஸ்யமாக இருந்ததோடு என்னுடைய சிறுமிப்பிராய நினைவுகளையும் மீட்டுத் தந்தன. அயல்வீட்டு சிறுமிகளுடன் மண்வீடு கட்டி விளையாடுவது, ஜில்போல, சீனி போல போன்ற வார்த்தைகளை எல்லாம் கேட்டுத் தான் எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன?

"சொல்லாமலே","சூடேறும் பாறைகள்" "கரிச்சான் குருவி","செகப்பு கலர்ல ஒரு காரு" போன்ற சில கதைகள் தன்மையிலேயே சொல்லப்பட்டிருக்கின்ற விதம் மிகவும் இயல்பாக இருந்தது. சமீபத்திய வெளியீடுகளான சில நூல்களில் நான் எரிச்சலுற்ற தன்மை,முன்னிலை,படர்க்கை,ஒருமை,பன்மை குளறுபடிகள் இந்த நூலில் இல்லாதது சற்று ஆறுதலாக இருந்தது.

பெருந்தோட்ட பகுதிகளில் இயற்கையின் அழகுக்கா பஞ்சம்? ஆனால் அந்த இயற்கை அழகுகள் வெறுமனே வர்ணனைகளாக இல்லாமல் மனித உணர்வுகளோடு ஒன்றிணைத்து எழுதப்பட்டிருப்பதால் இந்தத் தொகுப்பில் மலையகத்தின் இயற்கை இன்னும் அழகாக இருக்கின்றது. இலங்கையை சார்ந்த மற்றும் சாராத அனைத்து தமிழ் மக்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக