கிளாரிந்தா

தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான அ.மாதவையாவால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு சரோஜினி பாக்கியமுத்துவால் தமிழாக்கம் செய்யப்பட்ட வரலாற்று நூல் "கிளாரிந்தா".

தஞ்சை மராட்டிய வழியில் வந்த ஒரு இந்து பிராமண பெண் தான் சார்ந்த மதத்தின் பழக்கவழக்கங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அவை இல்லாத வேறொரு மதத்திற்கு மாறி அந்த மதத்திற்காக சேவை செய்து மடிவதை பற்றிய கதை இது.

பிறந்த அன்றே தந்தையையும் தாயையும் பறிகொடுத்து உறவினரின் அரவணைப்பில் வளர்ந்த அந்தப் பெண்ணின் குழந்தைத் திருமணம், சதி அதற்குப் பின்னரான காதல், மதமாற்றம் மற்றும் சமூக செயல்பாடுகள் என்பவற்றை விரிவாகச் சொல்கிறது.

முப்பது வயதுக்குப் பின்னரும் கூட தனக்கு தோன்றினால்தான் திருமணம் என்கின்ற நிலையை பெண்ணியம் எட்டி விட்ட இந்த காலத்தில் இருந்து கொண்டு, அதிலும் பாதி மடங்கு குறைவான வயது என்பது "திருமணத்தைத் தாண்டிய வயது" என்று ஒரு காலம் இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

பாட்டனார் பண்டிதராவின் திடீர் மரணத்தை தொடர்ந்து நிறைய ஞானமும் தேடலும் நற்குணங்களும் கொண்ட ஒரு சிறுமி, ஒரு காமுக 'கோமகனின்' பொருளாசைக்கும் பெண்ணாசைக்கும் நயவஞ்சகமான முறையில் காவு வாங்க படுகிறாள். திருமணமாகி, சுயபுத்தி ஏற்ற ஆண்களையும் சொல்புத்தி மற்ற பெண்களையும் கொண்ட புக்ககத்தில் தன்னை ஜீரணித்துக் கொள்வதற்குள் விதவையும் ஆகிவிடுகிறாள்.

தான் விதவையாகிவிட்டதை முழுமையாக கிரகித்துக் கொள்வதற்குள் அவசரச் சதியாய் ஒரு சதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. லிட்டில்டனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அது ஒரு அப்பட்டமான கொலை முயற்சி.

ஆபத்பாந்தவனாக வந்து சதியில் இருந்து அவளைக் காத்தவன் நல்லவனாக இருந்தது கிளாவிருந்தாவின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாகவும் அமைந்திருந்தது. பரஸ்பரம் ஆங்கிலத்தையும் சமஸ்கிருதத்தையும் கற்றுக் கொள்வதற்காக பழகத் தொடங்கிய அவர்களுடைய நட்பு, மொழிக் கல்வியை தாண்டி சமயம், சமூகம், பழக்கவழக்கங்கள் என்பவை குறித்த கலந்துரையாடல்களாக மாறி ஒரு நிலையில் காதலாகி கனிந்தது.

நல்லவனாக இருந்த அந்த நண்பன் நாணயவானாக இல்லாததால் மீண்டும் போலி சடங்காய் ஒரு ஏமாற்றுத்திருமணமும் குறைப்பிரசவமும் என அவளுடைய பிற்பாதி வாழ்க்கையும் சூறாவளியாக மாறி விடுகின்றது.

தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை இன்னல்கள் காயங்களில் இருந்தும் மெதுமெதுவாய் விடுபட்டு, தன் வாழ்வின் எஞ்சிய நாட்களில் கிளாவிருந்தா, கிளாரிந்தாவாக மாறி கிறிஸ்தவ மதத்திற்கும் சமூக சீர்திருத்தத்திற்காகவும் வாழ்கிறாள்.

கிளாவிருந்தா திவானுக்கு எழுதுகின்ற அந்த கடிதம் தான் இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்திருந்த ஒன்று. அவரே மெச்சுவது போல மிக அழகான ஒரு நடை.

வாரிசுரிமை பெற்ற பல தஞ்சை மராட்டிய மன்னர்கள், முகலாயர்கள் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இடையிலான ஒரு மிகக் குழப்பமான ஒரு ஒரு அரசியல் சூழலில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளதால் கதைக்குள் நம்மை முழுமையாக செலுத்தி இந்த இடத்தில் இது எந்த ஆட்சியாளரைக் குறிக்கிறது என்பதை புரிந்துகொள்வது சற்று கடினமாகவே இருக்கிறது. பின்னிணைப்பில் இருக்கின்ற வரலாறு இன்னும் தலைசுற்ற வைக்கிறது.

சரித்திர நாவல்களில் முதல் அத்தியாயத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்ற கதாபாத்திரங்கள் பாக்கியவான்கள். கதையைப் பொறுத்தவரை அவர்களுடைய இடம் எத்தனை முக்கியத்துவம் அற்றதாக இருந்தாலும், முதல் அத்தியாய நியதிக்கேற்ற அதீத வர்ணனையால் கடைசிவரை வாசகனின் மனதில் அவர்கள் ஒரு காட்சியாக பதிந்துவிடுகிறார்கள். ஐந்து அத்தியாயங்களுக்குள் கூட இடம் பெறாத ஹவில்தார் இதற்கு ஒரு உதாரணம்.

நாவலின் பிற்பாதி முழுவதும் கிறிஸ்தவ மத பிரச்சாரமாகவே இருக்கின்றது. ஆனாலும் மதிய நேரத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கையில் கதவைத் தடதடவென்று தட்டி இறைவன் வரப்போகின்றார் எங்களுடன் இணைபவர்களை 'மட்டும்தான்' அவர் காப்பாற்றுவார் என்ற ரீதியிலான எரிச்சலூட்டும் மூளைச்சலவை பிரச்சாரங்களாக இல்லாமல் உண்மையிலேயே கிறிஸ்தவ மதம் மானுடவியல் மேம்பாட்டுக்காக சொல்லியிருக்கின்ற அறம், மனித நேயம், விழுமியம் சார்ந்த கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது.

புராதன இந்து மதத்தில் குழந்தை திருமணம்,சதி போன்றவை ஒரு நியதிகளாக பின்பற்றப்படவில்லை என்றும் பிற்காலத்தில் ஏதோ காரணங்களுக்காக அவை சேர்க்கப்பட்டன என்பதும் இந்த நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் அதற்கான தேவையை ஏற்படுத்திய, 'ஏதோ காரணங்கள்' என்று சொல்லப்பட்ட சமூகவியல் காரணிகள் என்ன என்பதை பற்றிய எந்த குறிப்பும் தரப்படவில்லை.

இந்த நாவல், பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய குழந்தைத் திருமணம், சதி, சொத்து பறிமுதல் போன்ற பெண்களுக்கு எதிரான மிக அநியாயமான கொடுமைகளை அவற்றின் நிதர்சன தன்மையோடு அதீத உணர்ச்சி பெருக்குகள் எதுவும் இல்லாமல் இயல்பாக சொல்லி இருக்கின்றது. அந்த வகையில் இந்த நாவல் ஒரு முக்கியமான ஆவணமாகவும் இருக்கின்றது.

பெண்களின் நிலை அன்று இருந்ததை விட இன்று பல மடங்கு முன்னேறி விட்டது என்று சொல்லலாம். ஆனாலும்
இன்னும் பல மடங்கு தூரம் போகவேண்டும் என்பதே நிதர்சனம்.

ஆணாதிக்க மனப்பான்மை என்பது இந்த உலகில் தோன்றுகின்ற அத்தனை "y குரோமோசோம்களிலும்" இருக்கின்ற ஒரு தீர்க்க முடியாத பரம்பரை நோய் என்பதை, இன்று #metoo குறித்து பெரும்பாலான ஆண்கள் கேலியும் கிண்டலுமாக எழுப்புகின்ற அபத்தமான கேள்விகளும் வியாக்கியானங்களும் உறுதிப்படுத்துகின்றன. (விதிவிலக்குகள் மன்னிக்க) இயற்கை பெண்மையை வஞ்சித்து விட்டது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக