அது என்னவோ தெரியவில்லை, என்ன மாயமோ தெரியவில்லை.தமிழைத்தவிர வேறு எந்த மொழிப்புத்தகங்களையும் நான் படித்ததில்லை.
கூடப் படித்த தோழியர் குட்டி குட்டியான புத்தகங்கள் படிக்கையில், நூலகத்திலிருந்து தடி தடியா கத புத்தகம் எடுத்துட்டு வர்ர என்று அம்மாவிடம் அடியும் திட்டும் வாங்கியவள் நான்.
இருப்பினும் கூட கண்டதையும் படிக்காமல் 'கண்டு அதை' படிக்கக் கற்றுத்தந்தவர் அம்மாதான். இப்போது வரையும் கூட ரமணிச்சந்திரன் type நாவல்களை நான் படிப்பதில்லை. பாரதி, திருவள்ளுவர் முதல் கல்கி,சாண்டில்யன்,நா.பா,தி.ஜானகிராமன், பாலகுமாரன்,சுஜாதா,ஜெயமோகன் வரை அனைத்துக்கும் அடிப்படை அம்மா காட்டிய வழிதான்.
சாண்டில்யன் எனக்கு மிகவும் பிடித்த சரித்திர நாவலாசிரியர்.தன் நாவல்களின் மூலமாக வரலாற்று ஆர்வத்தை நிறையவே தூண்டியிருக்கிறார். இந்திய சுற்றுப்பயணம் செல்ல வேண்டும். வழக்கிலிருந்து மறைந்த பல வரலாற்றுச்சின்னங்களை பார்க்கவேண்டும் என எண்ண வைத்தவர் அவர்.
நவீன இலக்கிய உலகின் 'வர்ணணை சிற்பி' என்று அவரைச் சொன்னால் அது துளியளவும் மிகையில்லை. பெண்களை கொச்சையாக வர்ணிக்கிறார் என்றொரு கடும் விமர்சனம் கூட இவர் மீது உண்டு.குறைந்தது 20 நாவல்களாவது படித்திருப்பேன். இன்றைக்கு திரையில் பெண்மையின் தன்மை கற்பழிக்கப்படுவதோடு ஒப்பிடுகையில் சாண்டில்யனின் வார்த்தைகள் கண்ணியமற்றவை அல்ல. (ஒரு வேளை இந்த புத்தகங்களை படித்த வயதில் அவற்றில் பாதி எனக்குப்புரியாமல் இருந்திருக்குமோ என்னவோ😜)
வார்த்தைகளால் ஒரு பெண்ணை, ஆணை, கோட்டைகளை, கொத்தளங்களை, கப்பல்களை எனப்பலவற்றை மனத்திரையின் கண்முன்னே தத்ரூபமாக காட்டுவார்.
சித்தரஞ்சனியை, கனோஜி ஆங்கரேயை, மூங்கில் கோட்டையை, யவனராணியை, கடல்புறாவையெல்லாம் சாகும் வரை எப்படி மறந்துவிட முடியும்??
ஆனால் இந்த எல்லா வர்ணணைகளிலும் என னை அதிகப்படியாய் ஈர்த்தது கப்பல்கள்தான்.ஜலதீபம்,ஜலமோகினி, கடல்புறா இவையெல்லாம் கப்பல் பயணத்தின் மீது எனக்கொரு ஆர்வத்தை தூண்டின. நாட்கணக்கில் மாதக்கணக்கில் கப்பற்பிரயாணம் செய்யவேண்டும் என்றொரு ஆவல் சுமார் 10 வருடங்களுக்கும் அதிகமாகவே இருந்தது.
-தொடரும்
March 6, 2017
கடற்கனவு 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக