கண்ணம்மாவுக்கு ஒரு கதை



கண்ணம்மா இன்றுனக்கொரு
கதை சொல்வேன் கேளாய் !

ஜனநாயகத்துடன்
ஜனரஞ்சகம்
ஜகமிடுங்கப் போரிட்ட
ஜன்மக்கதை இது !


அடக்குமுறைகளும்
ஒதுக்குமுறைகளும்
உரிமை மறுப்புகளும்
உயிர்களை வருத்த
உலகெங்கும்
ஒழுங்குமுறை ஒன்றின் தாகம்
ஓங்கி ஒலித்தது.

மக்கள் குறைகள் நீக்கப்பட
மக்கள் தேவைகள் தீர்க்கப்பட
மக்களுள் ஒருவர்
மக்கள் மனம் உரைக்கும்
மக்கள் மன்றம் உருவாகி
மக்களாட்சி உதயமானது.

பல தசாப்தங்கள் உருண்டோட
பின் வந்த நாட்களில்
படிப்படியாய்
பண்டமாற்று மறைந்து
பணமாற்று மலிந்து
பிணத்திலும் பறிக்கும்
பித்தலாட்டங்கள் தோன்றின.

(தம்)மக்கள் குறைகள் நீக்கப்பட
(தம்)மக்கள் தேவைகள் தீர்க்கப்பட
(தம்)மக்களுள் ஒருவர்
(தம்)மக்கள் மனம் (மறைத்து)உரைக்கும்
(தம்)நலம் பேணும்
தறிகெட்ட ஆட்சியாய் அது மருவியது.

குடிகள் நலம் புறந்தள்ளி
குடும்ப நலம் மேம்படுத்த
'குடிமகன்'கள் கொட்டமடிக்கும்
மாக்கள் தொழுவமானது
மக்கள் மன்றம்.

காரணமறியா மர்மங்களுடன்
குழப்பங்களும் சூழ
கொலைகள்,மரணங்களாய்
கொடுமதிகாரம்
கோலோச்சியது.

பிரமாணம் மேற்கொண்ட 
பிரதிநிதிகளும்
பல்துறைசார் பிரமுகர்களும்
பதிவிடும் பிரபலங்களுமாய்
பெரும்பாலானோர்
பேரம் பேசப்பட்டு 
பக்கம் பக்கமாய் 
பிடித்திழுக்க
பகுத்தறியவொண்ணா பதற்றத்தில் 
பாமரரும் கூடவே படித்தோருமான
பொதுமக்கள்
பரிதவித்துப்போயினர்.

மேதகு மனிதரும்
மாண்புமிகு மாந்தரும் தம்
மேன்மையையும் 
மாண்பையும் எங்கோ
மறைத்து/மறந்து/தொலைத்து/விற்று விட்டு
நாட்களையும் ஆட்களையும்
கடத்தலாயினர்.

இறுதியில்,

ஜனநாயக சட்ட சாசனங்களும்
'ஜனநாயகர்களும்'
ஜயக்கொடி நாட்ட
ஜனரஞ்சகம்
ஜன்ம சாபம் பெற்றது !

கண்ணம்மா இன்றுனக்கொரு
கதை சொல்வேன் கேளாய் !

ஜனநாயகத்துடன்
ஜனரஞ்சகம்
ஜகமிடுங்கப் போரிட்ட
ஜன்மக்கதை இது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக