குரு -
எத்தனை ஆசிரியர்களிடம் பல்வேறு பாடங்கள் கற்றிருந்தாலும் என் வரையில் குரு என்ற சொல்லுக்கு ஒரே அர்த்தம் தான். குருஸ்லோகம் கேட்கும்/சொல்லும் ஒவ்வொரு முறையும் மனக்கண்ணில் எம்பெருமான் நடராஜரோ, தட்சிணாமூர்த்தியோ, வியாழ பகவானோ ஏன் சரஸ்வதி தேவியோ கூட எனக்குத்தெரிவதில்லை. எப்போதும் என் Dance madam மட்டுமே.
இன்று நான் வாழும் வாழ்க்கையை சிற்பியாய் இருந்து செதுக்கி, சீராக்கி, செம்மைப்படுத்தித்தந்த; என் வாழ்நாள் முழுதும் நான் நன்றி செலுத்த கடமைப்பட்ட 4 பேரில் ஒருவர்(எண்ணி நாலு பேர்தான்)
பாலர் வயதில் படிப்படியாய் கலைச்சோறு ஊட்டியது முதல் சலனப்பட்டு வழிதவறிவிடக்கூடிய பதின்ம வயதிலும் தடுமாறாது வாழ்வில் இலக்கை நோக்கி திடமாய் பயணிக்கக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள்.
கலை மட்டுமன்றி கலாசாரம், நாகரிகம், புராணங்கள், வீட்டு நிர்வாகம், விழுமியங்கள், மன நலம் என்று நடனத்துடன் வாழ்வியலையும் சேர்த்தே கற்றுத்தரும் ஒரு ஆசிரியர் இந்த உலகிலேயே நீங்கள் மட்டுமாகத்தான் இருக்கமுடியும். (என் அளவுக்கு திவா அண்ணா, தீபன் அண்ணா கூட உங்களுடன் இருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு ஏன்? வாழ்வில் முழுதாய் 20 வருடங்களை உங்களுடனேயே கழித்த ஒரே சிஷ்யையும் நானாகத்தான் இருக்க முடியும் 😜தற்பெருமையாகவே இருந்துவிட்டுப்போகட்டும். பரவாயில்லை)
ஒரு முறை ஒரு நடன வகுப்புத்தங்கை தன் அம்மாவை திட்டியதாக அறிந்து தாய்மையின் அர்ப்பணிப்பை நீங்கள் விவரித்த விதம் கேட்டு என் அம்மாவிடம் போய் நான் செய்த தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டது இன்னும் பசுமையாக இருக்கின்றது. இது ஒரு உதாரணம் மட்டுமே. !!!
அடிக்கடி பார்க்கவோ பேசவோ முடியாத நிலையிலோ தொலைவிலோ இருந்தாலும் கூட நினைக்கத்தவறுவதே இல்லை. நீங்கள் எனக்குத்தந்த கல்வியையும் ஞானத்தையும் இன்று என் குழந்தையும் கற்கிறாள். நாளை என் தலைமுறையும் கற்கும் !!!
மற்றவருக்கு கிடைத்தது நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எல்லோருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு சூழ்நிலையில் தோன்றியிருக்கும். ஆனால் யாருக்கும் கிடைக்காத ஒன்று எனக்குக்கிடைத்ததென்ற பெருமை எனக்கு உண்டேன்றால் அது நீங்கள் மட்டுமே !!!
உலகில் எல்லோருக்கும் ஒரு அம்மா தான். ஆனால் நான் பாக்கியசாலி. எனக்கு இரண்டு அம்மா !!
என் அன்னைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!
March 8, 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக