உலக புத்தக தினம் 2017

புத்தகம் என்று யாரேனும் சொல்லக்கேட்டால் மூளைக்குள் ஆசை நதி பெருக்கெடுத்து ஓடும். ஆமாம், மூளைக்குள் நதி ஓடும் சத்தத்தை நான் கேட்டிருக்கிறேன் தெரியுமா?

ஒரு புத்தகத்தை பார்த்தவுடன் பொருள் தேடி பலகாதம் பயணித்து புதையல் கண்டுபிடித்த உணர்வு வருமெனக்கு. பொன்னும் பட்டுமா புதையல்?

ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டாலோ இடி இடித்ததோ மழை பெய்ததோ பூமி அதிர்ந்ததோ எதைப்பற்றி நமக்கு என்ன? புத்தகப்பிரபஞ்சத்தில் ஒற்றை அணுவாய் கரைந்தே போய்விடும் பேரின்பத்துக்கு இணையேது?

படித்து முடித்த பின்பு உண்டான நவரசங்கள் தான் என் நடனத்திலும் வெளிப்பட்டிருக்கக்கூடும்.

முதன் முதலில் நான் படித்த புத்தகம் தரம் ஒன்று தமிழ் புத்தகமாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு முறை வகுப்பேற்றப்படுகையில் அடுத்த வருடத்துக்கான பாடப்புத்தகங்களை தருவார்கள். முதலில் தமிழ்புத்தகத்தையும் சமயப்புத்தகத்தையும் படித்துவிடுவேன். செய்யுள்களையும் தேவாரங்களையும் மனப்பாடம் செய்துவிடுவேன்.அவற்றில் இருந்த சுவாரசியம் தான் பற்றையும் வளர்த்திருக்க வேண்டும்.

வாசிப்புப்பழக்கம் அம்மாவிடம் இருந்து வந்தது. எழுத்துக்கூட்டி படிக்கத்தெரிந்த நாட்களிலிருந்து வாசிப்பு ஒன்று தான் என் உலகம். நூலகங்கள் என் புகுந்த வீடு.

போகின்ற 'பொழுதை' இஷ்டப்பட்டு பிடித்து இழுத்து வைத்து படித்தேனே தவிர கஷ்டப்பட்டு 'பொழுதை போக்க'வில்லை.

வாரத்தில் சில நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் இந்து கலாசார நிலைய நூல்கத்தின் கண்ணாடிக்கதவு வழி எட்டி எட்டி புத்தகங்களைப் பார்த்து நான் ஏங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அம்மா நூலகத்தில் சேர்த்து விட்டார்.அன்று அம்மா கற்றுத்தந்த பாடம் இன்று வரையும் வாசிப்பில் மட்டுமல்ல வாழ்வில் பல தருணங்களில் துணையாக இருக்கின்றது.

அது எதையும் 'கண்டு அறிந்து தெளிவது'

சிறுவர் பகுதியில் இருக்கும் எல்லா புத்தகங்களும் நீ படிக்க உகந்தவையல்ல(இடம் மாறி சில புத்தகங்கள் கிடக்கும்). 'பழனியப்பா பிரதர்ஸ்' 'பேராசியர் எ.சோதி' 'வாண்டுமாமா' 'அம்புலிமாமா' 'பாலமித்ரா' போன்றவற்றைத்தான் எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்று கற்றுத்தந்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை புத்தகங்கள் தான் நான் தஞ்சம் புகும் ஆபத்பாந்தவன்கள் !

முன்பு போல் 300, 400 பக்கங்கள் கொண்ட புத்தகங்களை ஒரே மூச்சில் 2 நாட்களில் முடிக்க முடிவதில்லை இப்போது.கடமைகளையும் திறன்பேசி கவனச்சிதறல்களையும் தாண்டி எப்படியாவது புத்தகம் வாசிக்க தினம் நேரம் ஒதுக்குகிறேன்.

வாசிப்பு சுவாரசியமானது மட்டுமல்ல. அது கற்றுத்தந்தவை அனேகம். வாசிப்பு போட்டி ஒன்றின் போது தான், கல்வி சார்ந்த ஒரு சமூக ஒடுக்குமுறையில் நான் சிக்கிக்கொண்டிருப்பதையும் அறிந்து கொண்டேன்.இனத்துவேஷத்தின் ஒற்றை விஷத்துளி என் மீது தெறித்த அன்று தான் தமிழ்நாடு தவிர வேறு எங்கும் எனக்கு வேரில்லை என்ற தீர்மானத்தின் விதை முளைத்தது. அந்த சின்னஞ்சிறு வயதில் ஆற்றாமையில் அழத்தான் முடிந்தது. ஆனால் அன்று ஒரு பாடம் கற்று கொண்டேன். மனிதரை பகுத்தறியும் பாடம்.

புத்தகங்கள் எனக்கு அறிவு தரும் குரு அல்ல, அவை எனக்கு பால்ய நண்பர்கள், துன்பம் துரத்தும் ஆபத்பாந்தவன்கள்.

மனிதரை விட புத்தகங்களை அதிகம் நேசியுங்கள். அவை உங்கள் அந்தரங்கத்தை உண்மையாய் நேசிப்பவை !

உலக புத்தக தின வாழ்த்துக்கள் !


Picture : சாகும் வரை எத்தனை முறை சொன்னாலும் நான் விரும்பிப் படிக்கும் புத்தகங்கள். கல்கி, சாண்டில்யன் மற்றும் இந்திரா சௌந்தரராஜன் புத்தகங்கள் அனைத்தையும் உள்ளடக்கவேண்டும்.














April 23, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக