பொய்த்தேவு

உலகாயதங்கள் நிர்ணயிக்கின்ற கடமைகள் மற்றும் பொறுப்புகள் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று தனக்குப் பிடித்த வாழ்வை மட்டும் நிறைவாக வாழ்ந்து முடித்து விடுவது இத்தனை இலகுவானதா?

மருதநில கிராமமொன்றின் ஒட்டுமொத்த குணங்களையும் தன்னகத்தே கொண்ட சாத்தனூர் என்கின்ற ஒரு கற்பனையான கிராமத்தையும் அதன் நிலவியல் அமைப்பையும் மற்றும் அங்கு வாழும் மனிதர்களையும் அவர்கள் செய்யும் தொழில்,நடைமுறை வாழ்வு என்பவற்றையும் சித்தரிக்கின்றது இந்த நாவல்.

சாத்தனூர் மேட்டுத் தெருவில் இருக்கும் ரவுடியான கருப்ப முதலிக்கும் அதேபோன்று அடாவடித்தனங்கள் செய்யும் வள்ளியம்மைக்கும் மகனாக பிறந்த சோமு தன்னுடைய சிறுவயதை தான் பிறந்த ஊரை முற்று முழுவதுமாக அலசி ஆராய்ந்து அறிந்து கொள்வதிலேயே செலவு செய்கிறான். தன் ஊர் மக்கள் செய்யும் தொழில்களின் நுணுக்கங்கள் முதல் இயற்கையின் அழகு வரை அத்தனையையும் மிக கவனமாக அவதானித்து மனதில் பதிய வைத்துக் கொள்கின்றன.

பின்னாளில் பொறுப்பற்ற வாலிபனாய்த் திரிந்த போதும் ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் ஒரு மளிகை கடை வைத்து ஒரு தொழிலைத் தொடங்கிய அந்தத் தருணத்திலிருந்து எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் மெதுமெதுவாக அவன் ஒரு மளிகைக் கடை merchant ஆக உயர்ந்து அருகிலுள்ள பெருநகரான கும்பகோணத்திலும் ஒரு மளிகை கடை திறந்து பின்பு ஊருக்கென்று ஒரு ரயில் நிலையம் அமைத்தல், பேருந்து ஒப்பந்தங்கள் எடுத்தல், காப்புறுதிகள் எடுத்தல் என்று அந்த ஊருக்கே ஒரு முக்கியப் பிரமுகர் ஆகின்றான்.

பணம் சம்பாதிப்பதையே தன் வாழ்க்கையின் ஒரே நோக்கமாக கொண்டிருந்த சோமசுந்தரம் முதலியார் இறுதியில், தான் சல்லாபிக்கும் கணிகைகளுடன் தன் மகனும் சல்லாபிப்பதை பார்த்த பின்பு ஏற்பட்ட கசப்பில் பணம் ஒரு போதை மட்டும்தான் என்று உணர்ந்து, தன் சம்பாத்தியங்களை எல்லாம் ஊருக்குள் கோயிலுக்கும் தன்னை வாழவைத்த வர்களுக்கும் என்று எழுதிவைத்துவிட்டு ஒரு சந்நியாசியாகி இறந்து போகிறான்.

ஒரு சராசரி மனிதனின் அதிகபட்ச வாழ்க்கை இலக்கு என்பது நல்ல பெற்றோர், நல்ல கல்வி, நல்ல சம்பாத்தியம், நல்ல திருமணம், நல்ல இல்வாழ்க்கை, நல்ல மக்கள் நல்ல ஓய்வு, நல்ல மரணம் என்பவற்றை அடைந்து விடுவதாக மட்டுமே இருக்கின்றது. இவை யாவற்றினதும் நிரந்தரத்தன்மை தொடர்பான எந்தவித உத்தரவாதமும் இல்லாதபோதும் மனிதனின் கற்பனையும் கனவும் இவற்றை நோக்கியே செல்கின்றது.

ஆனால் இவற்றை எல்லாம் விடுத்து, மனித நிலையாமைகள் மீதுள்ள பற்றுதல்களை முற்றிலும் புறம் தள்ளி விட்டு சம்பாத்தியம் என்னும் நூலேணியில் விவேகமாகவும் வெற்றியுடனும் முன்னேற சாமர்த்தியம், அதிர்ஷ்டம் மட்டுமின்றி நிலையான ஆத்ம பலமும் துணை செய்ய வேண்டும். ஆனால் தன் உதிரத் தொடர்புகளைத்தாண்டி நட்புக்காகவும் நன்றிக்காகவும் அத்தனை வருட ஒற்றைப்பற்றுதலை சட்டென்று உதறிவிடுதல் சோமசுந்தரம் முதலியாருக்கு எப்படி சாத்தியப்படுகின்றது? நிலையான ஆத்ம பலம் அங்கு அதீதமானதாக ஆகிவிடுகின்றது.

காவிரி நதி அழகாக, பெருமையாக, பிரமிப்பாக, வாழ்வின் ஆதாரமாக, அரசியலாக, துயராக என்று பல்வேறு விதமாக மனிதனின் புற வாழ்வோடு கொண்டாடப்பட்டு வருகின்றது. அதற்கும் அப்பால் நம் அக வாழ்வோடு ஒரு நதி கொண்டுள்ள ஆத்மார்த்தமான தொடர்பை சற்று விரிவாகவே எழுதியிருக்கிறார் கதாசிரியர். காவேரியின் கரையில் அமர்ந்து வெறுமனே அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பது மட்டுமே மனிதனுடைய சிந்தனையில் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுகின்றது? காவிரிக்கு மட்டுமல்லாது இது எந்த நதி பொருந்தக்கூடிய ஒரு விவரணை தான்.

பொழிதல் முதல் பொய்த்தல் வரை ஒவ்வொரு பருவ மாற்றத்திலும் எந்தவித இன, மத, மொழி, குல, சாதி வேறுபாடுகளின்றி அனைத்து மனிதர்களையும் ஒரு நதி அன்போடும் சில நேரங்களில் ஆக்ரோஷத்தோடும் அரவணைத்து கொள்ளுதல் போல பணம் என்ற 'பொய்த்தேவு'ம் மனிதனை தன்னுள் ஆகர்ஷித்து கொள்கின்றது என்பது சிந்தனைக்குரியது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக