இதய நாதம்





கலை என்பது, அதை ஆற்றுகின்றவனின் மன நிர்ச்சலனத்திலும், இடையறாத இறை அர்ப்பணிப்பிலுமே முழுமையடைகின்றது. ஆனால் கலைஞனோ பெரும்பாலும் உணர்ச்சிமயமானாகவே இருக்கின்றான். துயரையும் தோல்வியையும் போலவே, பொருளும் புகழும் கூட இலட்சியமாய் இருக்க வேண்டிய அவன் வாழ்வைச் சலனப்படுத்தி இலௌகீக வாழ்வுக்கு அவனைத் தடம் புரட்டி விடுகின்றன.

ந. சிதம்பர சுப்ரமண்யனின் "இதய நாதம்", கலை/கலைஞன்/கலைவாழ்வு என்பவற்றுக்கெல்லாம் இன்றைய காலகட்டத்திலும் என்ன ஒரு பிம்பம் இருக்கின்றதோ, அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு உயர்ந்த நிலையைப் பேசுகின்றது. கலைத்தன்மையின் பரிபூரணத்துவத்தை உலகியல் வாழ்வோடு பொருத்திப் பிரதிபலித்துக்காட்டுகின்றது.

கருவிலேயே திருவுடைத்தவனான கதாநாயகன், ஶ்ரீ தியாகராஜ சுவாமிகளின் நேரடிச் சீடப்பரம்பரையில் வந்த ஒருவரிடம் சங்கீத சிட்சையைப் பெறுகின்றான். அந்தக் குருகுலக்கல்வி, இசையோடு, வாழ்வியல் விழுமியங்களையும் கற்றுத் தருகின்றது. பின்னாளில் ஆதர்ஷமாக விளங்கிய அவன் வாழ்வின் நேர்த்தியான கட்டமைப்புக்கு அடித்தளமிடுகின்றது.

கலை கோருகின்ற நிர்மலமான சமநிலை அவனுக்குச் சாத்தியமாகின்றது. இகவாழ்வில் இருந்தபடியே, அதன் சுக, துக்க, விமர்சனப், பாராட்டுப் பாகுபாடுகளுக்குள் ஆட்பட்டு விடாமல், நாதத்தையே தன் வாழ்வின் யோக அப்பியாசமாகக் கொள்கின்றான். சங்கீதமும் தன் அத்தனைக் கரங்களாலும் ஆதுரத்துடன் அவனைத் தழுவிக்கொள்கின்றது. 


மனிதன், தன் ஆற்றலாலும், பிறப்போடு பெற்ற வரத்தாலும், புலனடக்கத்தாலும் எத்தனை சாதனைகளைச் செய்து, எத்தனை உச்சங்களை எட்டிப்பிடித்தாலும், பிரபஞ்ச மகா சக்திக்குள் ஒரு எல்லைக்கு அப்பால் அவனால் ஊடுருவ முடிவதில்லை. அந்த எல்லையில் அப்படியே நிற்பது அல்லது வந்த வழியில் கீழிறங்கிச் செல்வது என்கின்ற இரண்டில் ஒன்றை மட்டுமே மனிதன் தெரிவு செய்ய முடியும். அந்தத் தெரிவில் தான் ஒரு மனிதனின் ஆத்ம பலமும், அவனுக்கு விதிக்கப்பட்ட ஞானமும் அடங்கி இருக்க்கின்றது என்பதே இந்த நாவலின் சாராம்சம்.

பெண்ணானவள் ஒவ்வொரு தலைமுறையிலும், ஒரு எல்லையில் ஒவ்வொரு விதமான ஆளுமையோடும், மற்ற எல்லையில் ஒவ்வொரு விதமான துறவோடுமே வாழ வேண்டி இருக்கின்றது. கிட்டுவின் தாயும், மனைவியும் நாவல் நடைபெறும் காலகட்டத்தின் பெண்ணியத்தின் பிரதிநிதிகள். ஆண் வாழ்வின் ஆதாரச் சுருதியான அவர்களால், அந்த ஆணோடு இணைந்து சமூக நடைமுறையை எதிர்த்து வாழ முடிவதில்லை.

கதையைக் கற்பனைக்களத்திலிருந்து யதார்த்த உலகுக்குக் கொண்டு வரும் கதை மாந்தர்கள் பாலாம்பாள் மற்றும் அய்யாசாமி சாஸ்திரிகள். மனிதன் தோன்றிய காலம் முதல் எத்தனையோ பரிணாம வளர்ச்சி அடைந்த இன்று வரை, அவன் தன் பரம்பரை அலகுகளில் தவறாது சுமக்கும் அடிப்படை குணநலன்களின் அத்தாட்சிகள் இவர்கள். அதிலும் அய்யாசாமி சாஸ்திரிகள் முற்றிலும் ஒரு உண்மை மனிதர் தான். ஆனால், பாலாம்பாளின் அதீத விநயம், கதையைப் பொருத்தவரை அளவுக்கு மிஞ்சியதால் விடமாகி விட்ட அமுதம்.


புனைவுகளில், (அது எந்த வடிவமானாலும்) தாசிகளுக்கென்று விதிகளில் எழுதப்படாத இலக்கணங்கள் உண்டு. கதையில் அவர்களின் இடம் எதுவாக இருந்தபோதிலும், குறிப்பிட்ட காலத்தை பிரதிபலிக்கின்றன என்கின்ற போர்வையில், ஒழுக்கவியல் சித்தரிப்புகள் இல்லாத படைப்புகள் அரிதாகவே உருவாகின்றன. "இதயநாதம்" இந்தச் சித்தரிப்புகள் குறைவாக உள்ள படைப்பு. அத்தோடு, கதாநாயகனின் இலட்சிய பிம்பத்தைத் தூக்கி நிறுத்தவும் இது உதவுகின்றது. வெறும் மேற்கோள்குறிகளால் அங்கதமாக்கப்பட்ட கீழ்க்கண்ட பத்தி அதற்கு ஒரு சுவையான உதாரணம்.

'"ஒவ்வொரு சமயம் ஓரிருவர், கிருஷ்ண பாகவதரிடம் சிக்‌ஷை கற்றுக்கொள்ள விரும்பி அதற்குப் பிரயத்தனப்பட்டதுண்டு. அது கைகூடவில்லை. அவர்களுக்கெல்லாம், பாலாம்பாள் கிருஷ்ண பாகவதரை 'வசிய'ப் படுத்தியது மிகுந்த ஆத்திரதை உண்டு பண்ணியது. கிருஷ்ண பாகவதரைப்பற்றியும் தாங்கள் பெரிதாக நினைத்ததெல்லாம் தப்பு என்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. தவிரவும், சகஜமாக, ஆணும் பெண்ணும் நடமாடினால் சிருங்காரத்திற்குப் புறம்பான ஓர் உறாவு இருக்க முடியும் என்பதை ஒருவரும் எணணவுமில்லை.''

தற்காலத்தில் எழுதப்படும் புத்தகங்களில் இருப்பதைப்போல தன்மை, முன்னிலை, படர்க்கை, ஒருமை மற்றும் பன்மை குளறுபடிகள் இந்நூலில் அறவே இல்லை. தவிரவும், மிகப் பொருத்தமான நிறுத்தற்குறிகளால் முழுக்க முழுக்க அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இலக்கண வழுவற்ற எழுத்தின் மூலம் எழுத்தாளனும், மிகக்கவனமான மெய்ப்புத்திருத்தத்தின் மூலம் பதிப்பாளனும் ஒரு வாசகனுக்கு, அவன் ஆழ்மனத்தை நிறைக்கக்கூடிய திருப்தியான வாசிப்பனுபவத்தைத் தர முடியும் என்பதற்கு, ந.சிதம்பர சுப்ரமண்யனின் நூற்றாண்டை ஒட்டி, சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல் ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு.

கலையோடு இணைந்தோரும், வாழ்வோரும், ரசிப்போரும் விரும்பிப் படிக்கக்கூடிய ஒரு நாவல் "இதயநாதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக