ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்






ஆத்மார்த்தமான உறவுக்கு அன்பு தான் அடிப்படை. சுயநலமே இல்லாத அன்பு என்பது சாத்தியமே. ஆனால், தாயன்பே ஆனாலும் எதிர்ப்பார்ப்பில்லாத அன்பு என்பது சாத்தியமே இல்லாதது தான். 

பழமைவாதத்தின் பெயரால் நேரடியாகத் திணிக்கப்பட்ட 
அடிமைத்தனத்திலிருந்து உலகம் எப்போதோ வெளியேறிவிட்டது. முற்றிலுமாக இல்லையென்றாலும் பெரும்பாலும். ஆனால் அன்பு மற்றும் அக்கறையின் பெயரால், மறைமுகமாக தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் போக்கு இன்னும் மாறவே இல்லை. முற்போக்குவாதத்தை நேர்மையாகவே பின்பற்றும் ஒருவரால் கூட, உறவுகளை மனோரீதியாக அதிகாரம் செய்யாதிருக்க ஏனோ முடிவதில்லை.

அதிலும் அந்த அன்புக்குரியவள் பெண்ணாக இருப்பின் அந்த அன்பின் ஆக்கிரமிப்பு என்பது இன்னும் இரண்டு மடங்காக ஆகி விடுகின்றது. சகல விதத்திலும் தனக்குள்ளே தன்னிறைவு பெற்றிருக்கும் ஒரு பெண்ணை, அவள் இயல்போடு அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோ பாவம் இன்னும் மேலை நாடுகளின் கூட வரவில்லை என்பது சலிப்பை ஏற்படுத்துகின்றது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் தன்னுடைய “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” நாவலில் ஓர் இடத்தில் ரோஜாவைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“ஒரு ரோஜாப்பூவில் ஏன் ஒரு இதழ் மேலதிகமாக இல்லை என்றோ, இதில் ஏன் மல்லிகையின் மணமும் கலந்து வீசுவதில்லை என்றோ நாம் எதிர்ப்பார்ப்பதில்லை. அதை ஒரு குறையாகக் கூட யாரும் நினைப்பதில்லை. ஒரு ரோஜாவை ரோஜாவாக மட்டுமே ஏற்றுக்கொள்வதில் எத்தனை இயல்பாக இருக்கின்றோமோ அது போல உறவுகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த ரோஜாவும் நம்மிடம் எதுவும் எதிர்ப்பார்த்து நிர்பந்திப்பதும் இல்லையல்லவா?”

இந்த நாவலின் கதா நாயகி கல்யாணியும் அப்படித்தான். இது நாள்வரை அனைத்து ஜனரஞ்சகப் புனைவுகள் உருவாக்கி வைத்திருக்கும் பெண்ணுக்கான பிம்பம் அல்ல அவள். உறவுகள் ஏற்படுத்தும் அழுத்தங்களாலோ, அவர்களின் எதிர்விளைவுகளாலோ தன் சுயத்தை விட்டுக்கொடுக்கும் சராசரிப் பெண்ணல்ல. அதே நேரத்தில் சமூகத்தின் மடமையான நியதிகளை எதிர்த்து, நியாயத்திற்காகப் போராடும் புரட்சிப்பெண்ணும் அல்ல. தன்னை அந்தரங்கமாக நேசிக்கும் அல்லது தன்னை இழந்ததாத உணரும் ஒவ்வொரு மனிதனும் கொண்டாடவேண்டிய ஒரு கற்பனை. ஒவ்வொரு காட்சியிலும் அவள் பிரமிக்க வைக்கிறாள். வாசிக்க வாசிக்க, ஒவ்வொரு பத்தியிலும் குதூகலமே ஏற்பட்டது.

ஆனால், இதே கல்யாணி, ஒரு வேளை பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள் என்கின்ற ஒரு குடும்பக் கட்டமைப்புக்குள் இருந்திருந்தால், இப்படி சுதந்திரமான, சுயமரியாதை உள்ள பெண்ணாக, தன் சுய தெரிவின் பேரில், எதிர்ப்பார்ப்பில்லாத அன்பின் மொத்த வடிவமாக இருந்திருக்க முடியுமா என்ற கேள்வி இறுதியில் எஞ்சத்தான் செய்கிறது.

இந்தக்கதையில் ரங்கா குறைந்த பட்சம், தன்னால் ஒரு முழுமையான முற்போக்குவாதியாகவே இருக்கமுடியவில்லையே என்கின்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு வருந்தவேனும் செய்கின்றான். நடைமுறையிலோ, பக்கம் பக்கமாக முற்போக்கு, சமூக நீதி என்று எழுதிக்கொண்டும் மேடை மேடையாய் பேசிக்கொண்டும், சொந்த வாழ்வில் அதற்கு முற்றிலும் முரணாய் வாழும் மனிதர்களே விகிதாசாரத்தில் அதிகம். ஆக ரங்கா, கல்யாணி இருவருமே கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

தன் ஆழ்மனக்காதலின் தேவைக்காகத்தான் தான், தன் மனைவியைச் சார்ந்திருக்கின்றேன் என்பதை ரங்கா தானாகவே உணர்ந்து கல்யாணியிடம் திரும்பி வருவதாகக் கதை அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், இன்னும் கொஞ்சம் இயற்கையாக, வாழ்க்கைக்கான புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாகத் தான் கதை முடிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு இலட்சியப்படைப்பாக உருவாக்கப்பட்ட கல்யாணி, தங்கி இருத்தலின் நிர்பந்தத்தினால் தன் இயல்பிலிருந்து விடுபட்டு, தன் சுயத்தை விட்டுக்கொடுத்து வாழத்தீர்மானிக்கும் முடிவு ஏமாற்றத்தையே தருகின்றது.

ஜெயகாந்தனின் மொழி நடை எனக்குப் புதியது. மனோவியல் சார்ந்ததாலோ என்னவோ மிக நீண்ட வசனங்களை உடைத்து உடைத்துச் சொல்லி, வாசகர், மெது மெதுவாக உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும் வகையில் எழுதி இருக்கின்றார். கணவன், மனைவி உறவு என்று இல்லை, எந்த உறவு முறையிலும் யாரையும் நம் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப வளைத்து வனைய முனையும் முன்பு யோசிக்க வைக்கும் பல விஷயங்கள், கருத்துச் செறிவுடன் சொல்லப்பட்டிருப்பதால் மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக