இடக்கை

சட்டங்களும் நீதி சாசனங்களும், மானுட தர்மத்தை நிலை நாட்டவும் செழிக்கச்செய்யவுமே உருவாக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பது பன்னெடுங்காலமாக குடியானவர்களிடம் இருக்கும் ஒரு அசையாத நம்பிக்கை.ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்ட தனி நபர் ஒருவரின் சொந்த விருப்பு, வெறுப்பு மற்றும் நன்மை, தீமைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு, தம் ஆளுகைக்குட்பட்ட சராசரி மக்கள் மீதான அரசியல் ஆக்கிரமிப்பாகவே அவை நிதர்சனத்தில் செயல்படுகின்றன. இதற்கு முடியரசு, குடியரசு என்கின்ற எந்த பேதமும் இல்லை. இன்றும் நீதியை விட அநீதி வலிமையானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

கண்ணெதிரே ஒரு தவறு நிகழ்வதைப்பார்த்தால், நமக்குள் சட்டென்று ஒரு அறச்சீற்றமும், பின்பு அதை தடுக்க வகையறியா ஒரு ஆற்றாமையும் ஏற்படும். எஸ்.ராமகிருஷ்ணனின் “இடக்கை” நாவலை வாசிக்கையிலும் இதே உணர்வு தான் ஏற்படுகின்றது. வரலாறு இத்தனை அசுத்தங்களைக் கொண்டிருக்கின்றதா என்கின்ற அதிர்ச்சியும் வெறுப்பும் கூடவே ஏற்படுகின்றன. இந்தக்கதை எந்த விதத்திலும் உண்மையானதாக இல்லாமல் முற்றும் புனைவாகவே இருக்க வேண்டும் என்றே ஏங்குகின்றது மனம். எத்தனை தான் தவிர்க்க முடியாததாகவும் அத்தியாவசியமானதாகவும் இருந்த போதும் எப்போதும் புறக்கணிக்கப்படுகின்ற இடக்கையைப் போன்ற மனிதர்களைப்பற்றிய கதை இது.

முழு பாரத நாட்டையே ஆண்ட ஔரங்கசீப்பின் முதுமையின் சோகத்திலும் மரணத்திலும் ஆரம்பிக்கின்றது கதை. அவரது தன்னிச்சையான அரசியல் மற்றும் தனிப்பட்ட முடிவுகளால் சாதாரண குடிமக்களின் வாழ்வில் அவர் தன்னையறியாது ஏற்படுத்திய மிக மோசமான விளைவுகளே இந்தக் கதை முழுவதும் வியாபித்திருக்கின்றன.

சத்கரின் சந்தை, சிறைச்சாலை, கேளிக்கைக்கூடங்கள், ஔரங்கசீப்பின் அந்தப்புரம் மற்றும் படை அமைப்பு போன்றவற்றின் வர்ணனைகள் பிரம்மாண்டத்தாலோ அல்லது கொடுமையாலோ மிரளவைக்கின்றன. எல்லா விதமான வசதிகளும் சலுகைகளும் இருந்தாலும் இல்லையென்றாலும் எளிய மக்கள் எப்போதும் அடிப்படைகள் மறுக்கப்பட்டே வாழ வேண்டிய நிர்பந்தம் எல்லா காலகட்டத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கும் போலும்.

பிஷாடனைப்போல ஒரு முரட்டு முட்டாள் மன்னன் ஆட்சியில் இருந்தால் நாட்டில், ஆபத்தான வணிக ஆக்கிரமிப்புகளும் கலாச்சார ஆக்கிரமிப்புகளும் ‘வந்தேறிகளால்’ மிக எளிதாக நடந்து விட முடியும் என்பதன் அடையாளமாகவே ரெமியஸ் மற்றும் மகா பிரஜாக்களின் சபை என்பவற்றைச் சொல்லி இருக்கின்றார் கதாசிரியர். நாட்டின் ஒட்டு மொத்த வாழ்வியலும் மிகத்தாழ்ந்து போன ஒரு சூழ்நிலையிலும் கூட ஒரு தாய் தன் குழந்தைகளைக்காக்க என்ன முடிவு எடுக்கின்றாள் என்பது தான் எத்தனை முக்கியமாகின்றது?

விதவிதமான வரலாற்றைக் கொண்ட சம்பு, சிகிரிகள், குலாபி, காதம்பரி, லகியா, தர்மேயு, சக்ரதார், ஸச்சல் மற்றும் இன்னும் சில கதாமாந்தர்கள் ஏன் இந்தக் கதையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள் என்று புரியவில்லை. ஆனால் அந்த வரலாறுகள் வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.

தனக்கான நீதி கிடைப்பதற்காக வானுலகம் வரை சென்ற புழுவின் புராணக்கதை ஒன்று தான் நம்பிக்கையை அளிக்கின்றது, அது கற்பனையாக இருக்கலாம் என்கின்ற யதார்த்தத்தையும் தாண்டி.கடைசிவரை பொக்கிஷ விவரங்கள் எழுதிய ஆட்டுத்தோல் கிடைக்காமலே போவதும், பாதுஷா தன் சொந்த உழைப்பால் செய்த குல்லா தூமகேதுவிடமே சென்று சேர்வதும், பிரபஞ்சத்தின் நீதி தனக்கான இடைவெளியை தானே தேடி நிரப்பிக்கொள்ளும் என்ற நியதியை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன.

இதய நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள் என்று தொடங்கும் பொறுப்புத்துறப்பொன்றை முன்னுரையாகச் சேர்த்திருக்கலாம் எழுத்தாளர். நீதி என்கின்ற தர்மம் சார்ந்த ஒன்று வன்முறையாக தடம் புரள்வதை, வலியாக மாறி விடுவதை (புனைவிலென்றாலும்) உள்வாங்கும் சக்தி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக