மழைப்பாடல்


மழைப்பாடல், அதன் பின் அட்டையில் சொல்லப்பட்டு இருப்பதைப்போல குருக்ஷேத்திரத்தை நிர்ணயித்த மகாபாரதப் பெண்களின் மனச்சலனங்களின் பிரதிபலிப்பு. அம்பையின் வனப்பிரவேசத்திற்குப் பின்பு அஸ்தினபுரியின் அந்தப்புரத்தில் அடைபட்ட அவள் தங்கைகள் அம்பிகை மற்றும் அம்பாலிகை இருவரின் அரியணைக்கான உரிமைப்போராட்டமும், அதற்கான உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், அவற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் அவர்களைச் சார்ந்த மற்றவர்களின் தவிப்புமே மழைப்பாடலின் ஒற்றைவரி வரைவிலக்கணம்.

காந்தாரத்தின் வறட்சி, வெம்மை மற்றும் அனல் காற்றும் அதனைத் தொடர்ந்து யாதவ நாட்டின் செழுமை, தண்மை, மழையுமாக இந்த நூலின் முதற்பாதி இயற்கையால் நிறைந்து இருக்கின்றது. பிற்பாதி முழுவதும் விதுரனே நிறைந்திருக்கிறான். அம்பைக்கு அடுத்தபடியாக மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் விதுரன். எந்த ஒரு சார்பு நிலையும் எள்ளளவும் இல்லாமல் நடு நிலையில் இருப்பதென்பது நடைமுறையில் துளியும் சாத்தியமில்லாத ஒன்று. அதற்கு, இன்று யாரிடமும் இல்லாத சற்றும் பிறழாத தெளிவான மனமும் கூர்மையான மதியும் வேண்டும். அதுதான் விதுரன் என்று நான் புரிந்து வைத்திருந்ததை உறுதி செய்திருக்கின்றார் நாவலாசிரியர்.

திருதராஷ்டிரன் சஞ்சயனை முதன் முறையாக சந்திக்கும் அந்த அத்தியாயத்தை என்னால் ஒரு போதும் மறக்கவே முடியாது என்றே நினைக்கின்றேன். விழியில்லாத ஒருவனின் பார்வையை அணிந்து கொண்டு அதன் வழி உலகைக் காணும் உணர்வைத் தந்தது அந்தக் காட்சி.

காந்தாரி என்பவள் ஒரு முட்டாள்தனமான பிற்போக்குத்தனமான பெண்ணாகவும் சுயநலமிக்கவளுமாகவே எனக்குள் பதிந்து போய் இருந்தாள்.எதிர்காலம் குறித்த எந்த ஒரு யோசனையும் இல்லாமல் ஒரு தருணத்தில் தோன்றும் ஒரு உணர்வில் மனிதர்கள் சில நேரங்களில் எடுக்கின்ற ஒரு முடிவு அதற்கான மற்றவர்களின் எதிர்வினைகளால் மாற்றப்பட முடியாமல் போவதுண்டு. அப்படித் தான் எடுத்த முடிவு தவறு என்று உணர்ந்தும் கற்பிக்கப்பட்ட பிம்பத்தை கலைக்க மனமில்லாமல் அதனைத் தொடர்வதற்கு ஒரு அசாத்தியமான மன தைரியம் வேண்டும். காந்தாரியான வசுமதி ஒரு தெய்வீகமான பெண்ணாகவே எனக்குள் இப்போது இருக்கிறாள்.

மகாபாரதக் கதைகளில் அதிகமாக வலம் வராத ஒரு கதாபாத்திரம் பாண்டு. உடல் ஆரோக்கியத்தின் அத்தனை அடிப்படைகளும் மறுக்கப்பட்ட ஒரு வாழ்வு அவனுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அந்த அவனுக்குள் ஏக்கமாகவும் எதிர்பார்ப்பாகவும் உருமாறிவிட்டிருந்தது. அந்த ஆழ்மன ஆசைகளின் அதீதம் தான் பின்னாளில் கொடை, அறம், பலம், காமம், மிருக ஞானம் மற்றும் வான் கணிதம் ஆகிய அரசருக்குரிய ஆறு அடிப்படை குணங்களையும் கொண்ட ஆறு புத்திரர்களை அவனுக்கு அளித்தது என்பது அழகான ஒரு கற்பனை.

கையறு நிலையிலிருக்கும் ஒரு அபலையாக மட்டுமே இது நாள் வரை அறிந்திருந்த குந்தி தேவியை ஒரு ஆளுமை மிக்கப் பெண்ணாகச் சித்தரித்திருக்கிறார் ஜெயமோகன். சுற்றம் ஏற்படுத்தும் எந்த ஒரு தூண்டலுக்கும் குறிப்பாக அவமானங்கள்,நையாண்டிகள் என்பவற்றுக்கு அவர்கள் முற்றிலும் எதிர்பாராத ஒரு துலங்கலை வெளிப்படுத்துவதுதான் நமக்கு ஒரு கம்பீரத்தை தரும் என்கின்ற புதிய ஆளுமைப்பண்பு ஒன்றை மழைப்பாடலின் பிருதையிடம் இருந்தது கற்றுக்கொண்டேன். குழந்தைகள் பிறக்கும் வரை அவள் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் இயற்கையின் செழுமையால் நிறைந்திருப்பது, பிரபஞ்சமே அவளை ஆசிர்வதித்ததன் அடையாளமாகவே இருக்கின்றது.

சூதர்கள் என்கின்ற கருத்தாக்கம் தான் முதலில் எனக்குப் புரியவில்லை. தொடர்ந்த வாசிப்பில் தான் ஓ, இவர்கள் அந்தக் காலத்து hash tags மற்றும் trend setters போலிருக்கிறது என்று புரிந்தது. பொருள் கொடுத்து இவர்களை வாங்கவும் முடிந்திருக்கிறது என்றும் குறிப்பிடப் படுவதால் இவர்களை இன்றைய"Facebook போராளிகள்" உடனும் ஒப்பிட முடியும்.

ஒலி, ஒளி, மணம், சுவை, உணர்வு எனப் பலவற்றுக்குத்தான் எத்தனை எத்தனை வித்தியாசமான உவமைகள். அப்பப்பா ! சூழலை எவ்வளவு நுணுக்கமாக அவதானித்து இருக்கின்றார் நூலாசிரியர். விஷ்ணுபுரம் படித்த போதும் பல இடங்களில் இதை உணர்ந்தேன்.

இவர்களோடு சத்தியவதி, அம்பிகை, அம்பாலிகை, மாத்ரி, சிவை, சூதர்கள், சில முனிவர்கள், சில நிமித்திகர்கள், ஆங்காங்கே பீஷ்மர் என்று கதை நகர்கின்றது.

ஆனால் ஒரு சில சந்தேகங்கள்.

சகுனி முற்றிலும் நியாயமானவனாக தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

உக்ரசேனரும் சூரசேனரும் தாயாதிகள் ஆக இருக்கையில் தேவகியை வசுதேவனும் குந்தியை கம்சனும் மணமுடிக்க நினைப்பது எப்படி சரியாக இருக்கும்?

குந்தி விதுரன் என்கின்ற பேச்சு வரும்போது குந்திபோஜனின் மனைவி தேவவதி ஏன் தடுமாறுகிறாள்?

துரியோதனனின் பிறப்பையொட்டி தீர்க்கசியாமர் சகுனியிடம் குறிப்பால் உணர்த்துகின்ற செய்தி என்ன?

முதற்கனலில் சிவை என்கின்ற கதாபாத்திரத்துக்கு ஒரு அறிமுகம் அவசியமாக இருந்தது. ஆனால் மழைப்பாடலில் அவளுக்கான அத்தியாயங்கள் அதிகப்படி மட்டுமல்ல. அவசியமா என்ன?

நான் வாசிக்க எடுத்த நூல் என்கின்ற வகையில் இவை அனைத்தும் என்னுடைய விமர்சனங்களாகவே இருக்கின்றன.ஆனால் இது ஒரு காவியக்கதை என்பதால் தான் சந்தேகங்களாக முன்வைக்க வேண்டி இருக்கின்றது. தவிரவும் ஒருவேளை அடுத்தடுத்த நூல்களைப் படிக்கையில் தெளிவும் கிடைக்கலாம்.

குழந்தை கருவில் இருக்கையில் படிப்பதற்காக இந்த முறை வெண்முரசைத் தான் எடுத்து வைத்திருந்தேன். வாய் விட்டு வாசித்ததால் வழக்கமான வாசிப்பு வேகத்தில் படித்து முடிக்க முடியவில்லை. முதற்கனல் மட்டுமே வாசித்து முடித்தேன். மழைப்பாடலை ஆரம்பித்து ஒரு சில அத்தியாயங்களை மட்டுமே வாசித்திருந்தேன். உடல் நிலை சரியான பின்பு தான் மீதமுள்ள அத்தியாயங்களைப் படிக்க முடிந்தது. மழைப்பாடலை படித்து முடிக்க முடியவில்லை என்று வருந்தினேன். ஆனால் இதில் வருகின்ற அமானுஷ்ய பிரசவங்களைப் படித்திருந்தால் ஒரு வேளை என் கர்ப்பகால மனநிலையை அது பாதித்து பீதி அடைந்திருப்பேனோ என்னவோ? நமக்கென்று இந்தப் பிரபஞ்சம் விதித்திருக்கும் அத்தனையும் நன்மைக்காகவே.

இந்த நாவலைப் படிக்கையில் இதுவரை திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் அந்தந்த கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் முகங்களே நினைவுக்கு வருகின்றன.

இந்தக் தொடர்க்காவியம் முற்றிலும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இத்தனை காலம் தான் எத்தனை மேம்போக்காய் மகாபாரதத்தைக் கற்று வைத்திருக்கிறோம்.

ஒருவேளை முற்றிலும் கற்பனையாகவே இருப்பின், இந்தக்கற்பனை தான் எவ்வளவு அழகாக இருக்கின்றது.

#மழைப்பாடல்_வெண்முரசு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக